jeudi 15 mars 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியா ஆதரிக்க தவறினால் மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ்: மு.கருணாநிதி!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிடின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்றும் கருணாநிதி எச்சரித்துள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் உச்சகட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தான் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து முழுமையாக தவறிவிட்டது திமுக என்ற குற்றச்சாட்டு இந்த நிமிடம் வரை வலுவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உரத்த குரல் எழுப்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் தொடர்ந்தும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக செயற்பட மாட்டோம், நட்பு உள்ளது, வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அது பாதிக்கப்படக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும். இருப்பினும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு இந்தியா செய்த துரோகமாகவே திமுக கருதும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தீர்க்கமானதொரு முடிவை எடுப்போம்’ என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Aucun commentaire:

Enregistrer un commentaire