samedi 20 octobre 2012

இதுவரையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் விடுதலையாகி உள்ளதாக அமைச்சு


இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகளில் புனர்வாழ்வு பயிற்சிக் காலத்தை முடித்துக் கொண்ட ஒரு தொகுதியினர் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வுப் பயிற்சி பெற்றவர்களில் 33 பேரில் 27 பேர் இவ்வாறு சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
மிகுதி 6 பேர் இம்மாதம் 30 ஆம் திகதி அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான ஆவணங்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் கையளிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த வைபவம் வவுனியா மருதமடு புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் நடைபெற்றிருக்கின்றது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மேலும் 33 பேர் அடுத்த மாதம் 8-ம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக அமைச்சின் மூத்த ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதுவரையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
அத்துடன் விடுதலைப் புலிகளினால் போராட்டத்தில் இணைக்கப்பட்டு இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த முன்னாள் சிறுவர் போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள்.
இதேவேளை வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்காக 500க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புனர்வாழ்வுப் பயிற்சியை முடித்துக் கொண்டதன் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தின் கீழ் இதுவரையில்1008 பேருக்கு கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சதீஸ்குமார் தெரிவித்தார்.

2 commentaires: