mardi 30 octobre 2012

பாலூட்டுகிறது: கே.பிக்கு அரசு


'விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் சர்வதேச ஆயுத கடத்தல்களுடன் தொடர்புடையவர். பயங்கரவாத தலைவரான அவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ள போதிலும் கே.பிக்கு எதிராக அரசாங்கம் எவ்விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது அவருக்கு புட்டிப் பாலூட்டிக்கொண்டிருக்கிறது' என்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

'கே.பிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தது. அவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்தபோதும் உத்தரவாதமளித்ததுபோல அவருக்கு எதிராக அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வில்லை.

கே.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்று படையினரும் மக்களும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதேபோல அவர் இந்தியாவுக்கு கையளிக்கப்படவேண்டியவர். அவ்வாரானதொரு  பயங்கரவாத தலைவருக்கு அரசாங்கம் புட்டிப்பால் ஊட்டிக்கொண்டு இருக்கிறது. அவர் கிளிநொச்சியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார். இவரது விடயத்தில் அரசாங்கம் சட்டத்தையும் மீறி இருக்கிறது.

13 ஆவது திருத்த விவகாரத்தில் அரசாங்கம் நாடகமாடிகொண்டிருக்கிறது. சில அரசியல் பிரிவுகளே இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு பின் நின்று அழுத்தம் கொடுத்துகொண்டிருக்கின்றன. அதன்மூலம் அரசாங்கம் சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் வாழ்க்கை செலவு ஏவுகனை போல் வானலவு உயர்ந்து செல்கின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடுவோம்' என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire