mardi 23 octobre 2012

கே.பீ ஒரு தரம் ! கே.பீ இரண்டு தரம் ! கே.பீ மூன்று தரம் !


'ஸ்பாட்டகஸ்' படம் பார்த்தால் , வேறு இடங்களில் இருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்ட அடிமைகளை எப்படி ஏலம் போடுகிறார்கள் என்று பார்க்கலாம். வாங்குவதற்கு டிமாண்ட் இல்லாவிட்டால் அவர் பாடு அதோகதிதான்.
இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் கே.பியின் பெயர் இண்டர்போலில் இருப்பதால் இந்தியாவைத் தவிர வேறு யாரும் வாங்க முன் வரமாட்டார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க வேண்டுமாயின் புலம் பெயர்ந்த சில சில்லறை வியாபாரிகளுக்கு இவரை விற்பதுதான் மகிந்தருக்கு இருக்கும் ஒரே வழி. 'லங்கா புவத்' கேகலிய ரம்புக்வல மூலம் இந்த ஏல விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

இவர் மீது எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் மட்டுமே, இவ் வியாபாரிகள் வருவார்கள். ஆகவே வழக்குத் தொடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லாதபடியால் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று லங்கா புவத் வியாபாரிகள் காதில் பூ வைக்கிறது. புலம் பெயர் மக்களுடன் பேச வேண்டும் என்று தொடங்கும் இந்த வலைவீசலில் மாட்டுப்பட சிலர் தயாராகி வருகிறார்கள். நுனிக் கதிரையில் இருந்து கொண்டு எந்தப் பக்கம் தாவலாம் என்று தருணம் பார்பவர்களுக்கு இனிய செய்தி ஒன்றையும் ரம்புக்வல சொல்லியுள்ளார். குற்றவாளி அரச தரப்பாக மாற முடியுமாம்.

இந்த ஆறுதல் வார்த்தைகளை நம்பிப் போனவர்களின் கதி என்னவென்று மக்களுக்குத் தெரியும். அவர்கள் புலம் பெயர் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள். டாக்டர்.அருண்குமார் போன்றவர்கள் இவர்களின் சதிகளை அம்பலப்படுத்தினார்கள். வழியில் போன ஓணானை மடியில் கட்டி விட்டோமென்று சில கவுன்சிலர்கள் இப்போது கவலைப்படுகிறார்கள். மக்கள் எதையும் சொல்லிவிட்டுப் போகட்டும் என்பவர்கள், கிடைக்கிறவரை லாபம் என்று பசிலொடு சேர்ந்து காணி வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்திருப்பதாக வல்லிபுரத்தானுக்கு செய்திகள் வருகின்றன. கேப்பாபிளவு மக்களுக்கு சொந்த நிலமில்லை. காட்டில் இறக்கிவிடப்பட்ட மக்களை யானைகளை விட்டுத் துரத்துகின்றாகள். அடிமைகளை வைத்து அரசியல் செய்தால் இதுதான் நடக்கும்.

தேசியத் தலைவரை நண்பன் என்றும், தானே அடுத்த தலைவர் என்றும் சொன்னவரின் பரிதாப நிலையைப் பாருங்கள். கே.பீ ஒரு தரம் ! கே.பீ இரண்டு தரம் ! கே.பீ மூன்று தரம் !


-வல்லிபுரத்தான்

Aucun commentaire:

Enregistrer un commentaire