dimanche 21 octobre 2012

சொன்னதெல்லாம் பொய்.




மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்தியானந்தாவை கடந்த 19.10.2012 அன்று இரவு நீக்கினார்.
இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும், இந்து அமைப்பினரும் மதுரை ஆதீன மடத்தில் 20.10.2012 அன்று குவிந்தனர். அவர்கள் ஆதீனத்தை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். மடத்தின் முன்பு தேங்காய்களை உடைத்தனர். ஆதீனமும் சிறப்பு பூஜைகளை செய்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
அப்போது பக்தர்கள் மத்தியில் ஆதீனம் பேசியதாவது:-
திருஞானசம்பந்தர் தோற்றுவித்த ஆதீன மடம் 1,500 ஆண்டுகளாக போற்றி காக்கப்பட்டு வருகிறது. ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதால், அதை நிர்வாகம் செய்ய நித்தியானந்தா சரியானவராக இருப்பார் என்று நினைத்து அவரை நியமித்தேன்.


நான் எப்போதும் தருமபுரம் ஆதீனம் ஆலோசனைகளை பெறுவது வழக்கம். இந்த விவகாரத்தில் அவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர்களும், இந்து அமைப்பினரும் எதிர்த்தனர்.

ஆதீன மரபுப்படி நித்தியானந்தா நடந்து கொள்ளவில்லை. என் பேச்சை மீறி செயல்பட்டார். ஆதீனத்தின் பழம் பெருமைக்கு என்னால் எந்த களங்கமும் ஏற்பட்டு விட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மடத்தின் பெருமையை நிலைநாட்டவும் நித்தியானந்தாவை நீக்கினேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதைத்தொடர்ந்து அருணகிரி நாதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் நெறிகளையும், சொத்துகளையும் காக்க கடந்த ஏப்ரல் மாதம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தோம். தற்போது அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ளோம். இதுவும் இறைவனின் செயல் தான். நித்தியானந்தாவின் சீடர்கள் உடனடியாக மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

நித்தியானந்தா நீக்கப்பட்டதால், கடந்த சில மாதங்களாக நான்பட்ட மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். இப்போது சுதந்திரமாக உள்ளேன். மதுரை ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல் திறந்திருக்கும். வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். எந்த நேரமும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.

நித்தியானந்தாவை ராஜினாமா செய்ய நான் உத்தரவிட்ட போது, முதலில் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மறுத்து விட்டார். நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்வதாக கூறினார்.

நல்ல காரியங்களுக்குத்தான் நல்ல நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்வதற்கு எதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா? ராஜினாமா செய்திருந்தால் நான் நீக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப்பொய். 
இவ்வாறு அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire