mercredi 10 février 2016

போரில் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்:கோத்தபாய

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள்ளார்.
தம்மை வைத்து பொய்யான சரித்திரம் ஒன்றை எழுத சர்வதேச சமூகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் காரணமில்லாத குற்றச்சாட்டுக்களையும் ஆதாரமற்ற பொய்களையும் கொண்டு அதனை எழுதய முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை போரில் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார் என்பதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கோத்தபாய ராஜபக்ச அறிந்து வைத்துள்ளார் என்றும் காணாமல் போனோர் விடயத்தில் கோத்தபாயவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இறுதிப் போரில் காணாமல் போனவர்களை கோத்தபாய கொல்லப்பட்டதாக கூறுகிறார் ஓமந்தை போன்ற யுத்த வலயத்திற்கு வெளியில் சரணடைந்து இன்றுவரை தகவல் தெரியாதவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire