mercredi 10 février 2016

திருமண விழாவில் அப்பா, மகன் பற்றி ஜெயலலிதா

அரசியலில் அப்பா, மகன் என்ற உறவுக்கு இடமில்லை. அரசியல் பாடத்தை நீங்களாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, அதற்கு ஒரு அழகான குட்டிக்கதையையும் கூறியுள்ளார். திருமண விழாவில் பேசிய ஜெயலலிதா, மணமக்களை வாழ்த்திய கையோடு, குட்டிக்கதை கூறத் தொடங்கினார். முதலில் பூனை கதை ஒன்றை கூறினார். ஒரு செல்வந்தர் பூனை ஒன்றை வளர்த்தார். அந்த பூனை முதல்நாள் எலி ஒன்றை பிடித்து வந்தது. அதைப்பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார். மறுநாள், செல்வந்தர் ஆசையாக வளர்த்த கிளியை பிடித்தது. இதைப்பார்த்து செல்வந்தர் கவலைப்பட்டார். மூன்றாம் நாள் ஒரு குருவியை பிடித்து வந்தது பூனை. ஆனால் செல்வந்தர் கவலையோ, மகிழ்ச்சியோ அடையவில்லை.
எதையாவது பிடிப்பது பூனையின் இயல்பு. அது பூனையின் சுபாவம். எனவே மற்றவர் இயல்பை புரிந்து கொண்டால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்றார். அரசியல் பாடம் கதை அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியலே பாடம் கற்றுக்கொடுக்கும் என்று கூறிய ஜெயலலிதா, அரசியலில் தந்தை தனையன் என்ற உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவனே ஜெயிப்பான் என்று கூறி கூடவே ஒரு கதையைச் சொன்னார். ஒருநாள் மகன் ஒருவன், தனது தந்தையிடம் போய் "அப்பா நான் அரசியலை கற்றுக்கொள்ளவேண்டும் நீங்கள் கற்றுக்கொடுங்கள்" என்று கேட்டான். அதற்கு அப்பாவோ, "அரசியல் பாடத்தை யாரும் கற்றுக்கொடுக்க முடியாது... நீயாகவே கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார் ஆனால் மகனோ, "தந்தையே நான் அரசியலை உங்களைப் பார்த்தே கற்றுக்கொண்டுள்ளேன். நீங்கள்தான் எனக்கு குருவாக இருந்து மேலும் கற்றுக்கொடுங்கள்" என்று கேட்டான் அதற்கு அப்பாவோ, மகனை ஏணி எடுத்துக்கொண்டு வரக்கூறினார். மகனும், ஏணியை எடுத்து வந்தான். உடனே அதை சுவற்றிலே சாத்தி வைத்து ஏணியின் மீது ஏறு என்று கூறினார். அரசியல் பாடத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று மகன் கேட்க, கேள்வி கேட்காமல் ஏணியில் ஏறு என்று கூறினார் தந்தை. மகன் பாதி வழியில் ஏறும் போது, "நான் என்னென்ன ஏமாற்று வேலைகளை செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்று எழுதி வைத்துள்ளேன் அதை எடுத்துப் படித்து தெரிந்து கொள் என்று கூறினார் தந்தை. அதற்கு சரி என்று கூறிய மகன், நீங்கள் கீழே இருந்து ஏணியை நன்றாக பிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினான். சரி சரி என்று கூறிய தந்தையோ, மகன் உச்சிக்குப் போன உடன் தனது கையை ஏணியில் இருந்து எடுத்து விட்டார் உடனே ஏணி சரிந்து விழுந்தது. மகனின் இடுப்பில் அடிபட்டது. உடனே அப்பாவை திட்டினான் மகன். அதற்கு தந்தையோ "எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்" என்று கேட்டார். இதனால் பாடம் கற்றுக்கொண்ட மகனோ, இனி அப்பாவாக இருந்தாலும் நம்பக்கூடாது... நம்மை நாமேதான் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று வளரத் தொடங்கினான். ஆனால் அதற்கும் கடிவாளம் போட்டு விட்டார் அப்பா, என்று கூறினார் ஜெயலலிதா. இந்த கதையை கேட்டு உற்சாகமாக கை தட்டி ரசித்தனர் அதிமுகவினர். கதையை சொல்லி முடித்த ஜெயலலிதாவோ, இது அரசியல் பாடத்திற்காக சொன்ன கதை. நீங்களாக எதையாவது புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறினார். சட்டசபை தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? என்று திருமணவிழாவில் ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் கூறாமல் சஸ்பென்ஸ் வைத்து விட்டு சென்றார் ஜெயலலிதா. அது சரி அவர் சொன்ன குட்டிக்கதை யாரை நினைத்து சொன்னார் என்பது உங்களுக்காவது புரிகிறதா?

Aucun commentaire:

Enregistrer un commentaire