mardi 2 février 2016

இந்தியாவுடன் இலங்கை மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்து இலங்கையர்கள் அச்சமடைய வேண்டாம்!

இந்தியாவுடன் இலங்கை மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்களால் இலங்கை மக்கள் அச்சமடைய வேண்டாம் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்திய-இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தேவையற்ற ஒரு அச்சம் நிலவி வருகிறது. தவறாக வழிநடத்தப்பட்ட சில பௌத்த மதத் துறவிகள், வரலாற்றைச் சுட்டிக்காட்டி தேவையற்ற அச்சத்தைப் பரப்புகின்றனர்.

இன்றைய அரசியல் சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. பாக் ஜலசந்தி மீது பாலம் அமைக்கப்பட்டு இரு நாடுகள் இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், இலங்கையை சொந்த நாடாக பாவிக்க இந்தியர்கள் தயாராக உள்ளனர் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

மேலும், இந்தியா-இலங்கை இடையே ஏற்படும் பொருளாதாரம், தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் தேவையற்ற கருத்துகளைப் பரப்புகின்றனர். இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்ற பிறகு, இந்தியப் பிரதமர் மோடி, இலங்கைக்கு வருகை தந்தார். இலங்கை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் 3-ஆவது முறையாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும் என, மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire