dimanche 21 février 2016

மேலும் ஏழையாகும் இந்திய வீட்டுத்திட்டம் கேள்விக்குறி என்பதை உணர வேண்டும்.


img_0077அண்மையில் இந்தியாவினால் 65000 வீட்டுத்திட்டங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே. அந்த வீட்டுத்திட்டத்தில் ஒரு வீட்டின் பெறுமதி 550000 ரூபா ஆகும் இப்பணத்தை வைத்து ஒரு சிறிய வீட்டினைக் கூட கட்ட முடியாது.ஆனால் வீட்டின் தேவை என்பது அவசியமாயும் அதேவேளை அவசரமாயும் இருப்பதனால் மக்கள் கிடைக்கும் பணத்துடன் தாம் தம் நகைகளை விற்றோ காணியை வங்கியில் அடகு வைத்தோ வீட்டை கட்டி முடிக்கின்றனர். இதன் விளைவு என்ன ?
வங்கியில் அல்லது தனியாரிடம் அடகு வைக்கப்படுகின்ற அந்த வீட்டுத்திட்ட வீடு அமைந்துள்ள காணி அடகுப்பணம் கட்ட முடியாத சூழ்நிலையில்வங்கியினால் அல்லது தனியாரால் சுவீகரிக்கப்படுகிறது.இப்போது சொந்தமாய் ஒரு வீட்டில் குடியமர வேண்டும் என்று நீண்டகால கனவுடனும் கற்பனையுடனும் வாழ்ந்த மக்களுக்கு இருந்த சொந்தக்காணியும் இல்லாமல் நடு வீதியில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.இதைப்பற்றி கவலைப்படுவதாக எந்த அரசியல் வாதியும் இல்லை.
இந்த 550000 ரூபா பணத்தில் வீடானது முழுமையாக கட்டப்படாத நிலையில் மீதிப்பணத்தை மக்கள் போடும் போது இந்த செயற்பாட்டை இந்திய வீட்டுத்திட்டம் என்று சொல்ல முடியாது.இதனை வீடு கட்டுவதற்கான இந்திய உதவிப்பணம் என்றுதான் சொல்ல முடியும்.
அத்துடன் இந்த வீட்டுத்திட்டத்தில் இடம்பெயர்ந்த அரச ஊழியர்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் வலுப்பெறுகிறது.அரசாங்கம் கொடுக்கும் மாதாந்த சம்பளத்தில் அரச ஊழியர்களால் ஒரு வீட்டினை முழுமையாக கட்ட முடியாது என்பதை அரசாங்கமும் அரசியல் வாதிகளும் அறிவார் ஆகவே தேவையுடைய அரச ஊழியர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் சமூக மத்தியில் வலுப்பெறுகின்றன.
இது இப்பிடியிருக்க 22 இலட்சம் ரூபா செலவில் சைனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களால் ரெடிமேட் வீட்டுத்திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வீட்டுத்திட்டம் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலித் தனமானதாக இல்லை. 22 இலட்சம் செலவில் ஒரு வீடு கட்டும் பணத்திற்கு இரண்டு வீடுகள் கட்டலாம்.என்பதுடன் இத்தகைய வீடுகள் எமது பிரதேசத்திற்கு உகந்தவையா ?காலநிலைக்கு ஏற்றவையா ?
தீ மழை வெள்ளப்பெருக்கு என்பவற்றிற்கு ஈடுகொடுக்கக் கூடியவையா ?என்பன சரிவர ஆராயாமல் கோப்பாயிலும் தெள்ளிப்பளையிலும் மாதிரி வீடுகள் அமைக்கப்படுகின்றன.
வடமாகாண சபை அமைச்சர்களும் வடமாகாணத்தில் உள்ள மத்திய அமைச்சர்களும் இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் அசமந்தப்போக்கினை மேற்கொள்வதால் நாம் மீண்டும் மீண்டும் படுகுழியில் தள்ளப்பட்டு எமது இருப்புக்களை இழந்து அன்றாட வாழ்க்கை போராளிகலாக்கப்பட்டு எதிர் கால வாழ்க்கை கேள்விக்குறி ஆக்கப்படும் என்பதை உணர வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire