dimanche 28 février 2016

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நிதி முறைகேடு தயாநிதிமாறன் கலாநிதிமாறன் உள்ளிட்ட ஆறு பேருக்கு சம்மன்

அமலாக்கப் பிரிவின் குற்றப் பத்திரிக்கையின்படி, "குற்றம்சாட்டத்தக்க போதுமான ஆதாரங்கள்" இருப்பதாகக் கூறி இந்த சம்மன் விடுக்கப்பட்டுள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மாறன் சகோதரர்கள் தவிர, கலாநிதி மாறனின் மனைவி காவிரி கலாநிதி, சவுத் ஏஷியா எஃப்எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே. ஷண்முகம் உள்ளிட்டோரும் ஜூலை 11ஆம் தேதி ஆஜராகும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்றும் புதிதாக ஏதாவது புகார்கள் இருந்தால் பதிவுசெய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டி, சிவசங்கரனின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
தற்போது, நிதி முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஆறு பேர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவுசெய்துள்ளது.
மொரீஷியஸிலிருந்து செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் மூலமாக கலாநிதி மாறனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் சவுத் ஏஷியா எஃப் எம் மற்றும் சன் டைரக்ட் நிறுவனங்களுக்கு முறையே 549.03 கோடி மற்றும் 193.55 கோடி ரூபாய்களை பெற்றதாக அமலாக்கப் பிரிவு குற்றம்சுமத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மாறன் சகோதரர்கள் மறுத்துவருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire