இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்த போரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என்று நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நிகழ்ந்த போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு செயல்பட்டு வருகிறது.
போரிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் ஆணையத்தின் பரிந்துரையின் படி இந்த குழுவை அதிபர் ராஜபக்ச கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தார். மன்னார் மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்ற நீதிபதி பரனகாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது: போரில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு மன்னார் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால், இந்த மாவட்டத்தில் நாங்கள் நேரடியாக விசாரணை நடத்தியபோது எங்கள் ஆணையத்துக்கு 312 புகார்கள் மட்டுமே வந்துள்ளன.
எங்கள் குழுவின் விசாரணையின் மீது தமிழர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளதால்தான் ஏராளமான மக்கள் புகார் தெரிவிக்க வந்துள்ளனர்.
புகார் தெரிவிப்பவர்களில், தங்கள் பிள்ளைகளை காணவில்லை என்று மனு அளிக்கும் பெற்றோர்களே அதிகம். இது தொடர்பாக 19 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில் 5,600 புகார்களை பாதுகாப்புப் படை வீரர்களின் பெற்றோர்கள் அனுப்பியுள்ளனர்.
காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாடுகளில் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் தொடர்பான விவரங்களை இலங்கை தூதரக அதிகாரிகளின் உதவியுடன் திரட்ட முயற்சி எடுத்துள்ளோம். ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க அவர்கள் மறுக்கின்றனர். நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா கூறினார்.
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச விசாரணையை இலங்கை அரசு எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், காணாமல் போனவர்களை பற்றிய விசாரணையை இலங்கை அரசின் உத்தரவின் பேரில் நீதிபதி பரனகாமா தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது.