lundi 25 août 2014

பிரச்சினைகளை உணர்ச்சிகரமாகப் பேசி பதவிகளை வெல்லும் முனைப்பை மட்டுமே காட்டிவரும் கூட்டப்பினர்,அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

tna_indiaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதானது அரசாங்கத்தை இரண்டாம் தரத்திற்கு உள்ளாக்குவதுடன் பின்கதவால் செல்லும் செயற்பாடுமாகும் எனக் கூறியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது எனவும் கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
பிரச்சினைகளை உணர்ச்சிகரமாகப் பேசி, தேர்தல்களில் தங்களுக்கான பதவிகளை வெல்லும் முனைப்பை மட்டுமே காட்டிவரும் கூட்டப்பினர், தீர்வொன்றைக் காண்பதற்குரிய அணுகுமுறையை தங்கள் மனதாலும் நாடுவதில்லை.
மாறாக, தீர்வுக்கான சாத்தியமாயுள்ள நடைமுறைகளைக் குழப்பி விடுவதன் மூலமும் அரச எதிர்ப்பை எண்ணையூற்றி வளர்ப்பதன் மூலமும் தொடர்ந்து பதவிகளைப் பெறும் ஒரே அரசியலையே செய்துவருகிறார்கள்.
மக்கள் தங்களுக்கான தேவைகளைக் கேட்க முடியாதவாறு, வெறுப்பும் பகைவளர்ப்பும் ஆவேசமான பேச்சுக்களும் என்று தந்திரமாக அவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
தெற்கிலுள்ள வாசுதேவ போன்ற இடதுசாரிகளின் – முற்போக்கு சக்திகளின் – இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று நியாயமான கருத்துகளை உரைத்து வருபவர்களின் பேச்சுக்களை இவர்கள் சட்டை செய்வதில்லை@ தமிழ் மக்களிடம் அதுபற்றிய தங்கள் அபிப்பிரயங்களைப் பகிர்ந்து கொள்வதுமில்லை.
சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச மற்றும் இனவாதத்தைத் தூண்டிவிடும் பேச்சுக்களைப் பேசுவோரின் வார்த்தைகளையே வெகு ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். அதைக் காட்டித்தான் தமிழ் மக்களையும் இனரீதியாக உசுப்பி பகைமூட்டி வைத்திருக்க முடியும் என்று செயற்பட்டு வருகிறார்கள்.
ஒருவருக்கொருவர் உதவி, இரண்டு பக்க இனவாதத்தையும் எரியவிட்டு அதில் அரசியல் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, சிங்களச் சமூகத்தில் இருந்து நியாயமாகப் பேசுவோரையும் பிடிக்காது@ அவர்களுடன் போய்ப் பேசவும் பிடிக்காது.
இனங்களுக்குள் முறுகல் நிலையை விரும்பி உருவாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயல்களை மட்டும் அமைச்சர் வாசுதேவ கண்டிக்கவில்லை. சிங்களத் தரப்பிலிருந்து இந்த முறுகல் நிலையை உருவாக்கப் பேசுகிறவர்களையும் வன்மையாகக் கண்டித்தே கருத்துச் சொல்லியிருக்கிறார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன வெளியிட்ட கருத்துக்கள் நல்லிணக்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நாட்டிற்கு எரிக்கும் அமிலம் போன்றவை என்றும் வாசுதேவ கடுமையான விசனத்தை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கு அரசியலில் இடமளிப்பதால் தமது கொள்கைகளையே தொடர்ந்தும் மக்களிடத்தில் கொண்டு செல்வார்கள் என பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்த கருத்துக்களை வாசுதேவ நாணயக்கார கண்டித்திருக்கிறார்.
நாட்டில் தற்போது யுத்தம் நிறைவடைந்து நல்லிணக்கம் தொடர்பில் பேசப்பட்டும் தேசிய ரீதியில் வேலைத்திட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான நிலையில் ரொஹான் குணரட்ன அமிலக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். இது முழுக்க முழுக்க தவறானதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறான நியாயபூர்வ நடுநிலைச் சிந்தனையாளர்களைத் தமிழ்த் தரப்பில் காணமுடிவது துர்லபமாயிருப்பதுதான் நமது துரதிர்ஷ்டமாகும். சிங்களத் தரப்பில் இனவாதமற்றுச் செயற்படுவோரையும் கருத்துரைப்போரையும் நமது ஊடகங்களும், தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோரும் கண்டுகொள்ளாதது போன்ற தந்திரத்தையே கடைப்பிடிக்கிறார்கள்.
ஊர் இரண்டுபடுவதும் எரிவதும் தங்கள் சுயலாபங்களுக்கு உகந்தது என்று கருதுவதாலேயே இரண்டு பக்கத்திலும் இனவாத வாய்வீச்சுக்கள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire