lundi 18 août 2014

தமிழர்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு தேவை,அது சுதந்திரமான தனி நாடாக இருக்கலாம்.ஒரு சமஷ்டி அரசாக இருக்கலாம்;ஹரி ஆனந்தசங்கரி

 கனேடியத்  தமிழ் சமூகத்திடையே ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இந்த வாரம் ஊடக அறிக்கையொன்றை வெளியிடிருந்தார் . அதன் முழுவிபரம் வருமாறு
gary anandasangaree
gary anandasangaree
வருகின்ற கனேடிய மத்திய அரசுத் தேர்தலிலே ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்ய இடம் பெறுகின்ற நியமனத் தெரிவுக்குப் போட்டியிட எனது மனுவைத் தாக்கல் செய்யும் போது இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுத் தெரிவாகுவது என்பது இலகுவான காரியமல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் கடந்த சில வாரங்கள் நான் நினைத்ததையும் விட மிகவும் கடுமையானவை.
மனைவியையும், மூன்று வயதும், ஐந்து வயதும் நிரம்பிய இரண்டு பெண் குழந்தைகளையும் கொண்ட இளைய குடும்பஸ்தன் நான் என்றாலும் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் என்னாலான பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற சிந்தனையே என்னைப் பொது வாழ்விற்கு இட்டுச் சென்றது. நான் கனேடிய சமூக சம்பந்தமான விடயங்களிற் கடினமாக உழைத்திருந்தாலும் எனது தமிழ்ச் சமூகத்துடனான உறவே என் பொதுவாழ்வை வரையறுத்தது என்றால் மிகையாகாது. எனது கடந்த கால நிகழ்வுகளையும், எதிர்காலத் திட்டங்களையும் எமது தமிழ்ச் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளவே இவ்வூடக அறிக்கையை வெளியிடுகின்றேன்.
1980ம் ஆண்டு எனது பெற்றோருக்குள் ஏற்பட்ட பிரிவு காரணமாக நானும் எனது தாயாரும் தற்காலிகமாக அயர்லாந்திற்குக் குடிபெயர்ந்தோம். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு திரும்ப இருந்த வேளையில் இலங்கையில் 1983 கறுப்பு ஜூலைக் கலவரம் வெடித்தது. அப்பொழுது டப்ளின் நகரில் இருந்த ஒரு சிறுதொகைத் தமிழ் மக்களும், மாணவர்களும் இணைந்து நடாத்திய ஆர்பாட்டத்தில் ஒரு சிறு பங்காளியானேன். 1983 கறுப்பு ஜூலைக் கலவரம் காரணமாகக் கொழும்பு திரும்ப முடியாத நிலையில் நானும் எனது தாயாரும் ஆகஸ்ட் 31, 1983 இல் கனடா வந்து அகதி அந்தஸ்துக் கோரினோம்.
1980இல் எனது பெற்றோருக்கிடையிற் பிரிவு ஏற்பட்டது என்பதில் எந்த இரகசியமும் கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து எனக்கும் எனது தந்தையாருக்கும் இடையில் எந்த உறவும் இல்லை என்பதிலும் எந்தச் சந்தேகமும் கிடையாது. உண்மையைக் கூறுவதானால் 1983ம் ஆண்டிற்குப் பிறகு அவரை இருமுறை மட்டுமே சந்தித்துள்ளேன். கடந்த பல வருடங்களாக அவரது அரசியற் செயற்பாடுகளுடன் அடிப்படையிலேயே முரண்பட்டு வருபவன் நான்.
உண்மை இவ்வாறு இருக்க எம் கனேடியத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அடிப்படைவாத, ஆண்மேலாதிக்க சிந்தனையுள்ள பழமைவாதிகள் சிலர் எனக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையில் தொடர்பு பேணப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனக்கெதிராக வேறெந்த குற்றசாட்டையும் நிரூபிக்க முடியாத இவர்கள் எனது இரத்தத்தில் ஓடுவது ஆனந்தசங்கரியின் இரத்தம் என்று முறையிடுகின்றனர். இது போன்ற அபத்தமான கேள்விக்கு எப்படி என்னால் எதிர்த்துப் பதில் கூற முடியும்? என்னால் முடியவில்லை, ஏதோ எனது மனதை இறுக்கமாக்கி இந்த கல்மனதுக்காரர்களிடமிருந்து விலகிச் செல்வதே என்னால் முடியும் . என் தந்தையார் எப்படி உள்ளார்? என்று கேட்பவர்களிடம் அவர் நலமாக உள்ளார் என்று புன்முறுவலுடன் கூறி விலகிச்செல்வதே என் வழக்கம். எமது “குடும்பத்தலைவன்” என்ற குறியீடு கொண்ட ஆண் ஆதிக்க சமுதாயத்திலே “எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லையென” உண்மையைச் சொல்ல முடியாது, ஆனால் எனது கொள்கைகளையும் வீரசிங்கம் அனந்தசங்கரியின் கொள்கைகளையும் ஒன்று என்று கூறுபவர்களின் கூற்றுக்கும் உண்மைக்கும் வெகுதூரம்.
நான் எப்போதுமே ஒரு தமிழ்த் தேசியவாதி, இதனை நான் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை, நான் வாழ்ந்து காட்டியிருக்கின்றேன். எனது பத்து வயதிலிருந்து தமிழர்களின் உரிமை வேண்டி உழைத்து வருகின்றேன். சிறு வயதிற் துண்டுப் பிரசுரம் விநியோகம், 1980களின் இறுதியில் ஒட்டாவாவில் நான் முன்னின்று நடாத்திய போராட்டம் தொடங்கி எமது தமிழ்ச் சமுதாயத்திற்கு முக்கியமான, தேவையான விடயங்களைப் பற்றிக் கனேடிய மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள் என்பதுடன், எம் தமிழ் மக்கள் பயங்கரவாதி, குழுச் சண்டைக்காரர், பொருளாதார அகதிகள் எனக் கனேடிய ஊடகங்களினால் முத்திரை இடப்பட்ட காலம் முதற் கவனயீர்ப்பு போராட்டங்கள் வரை எம் சார்பு நீதியைக் கனேடிய ஊடகங்களிலும், அரசு அதிகாரிகளுக்கும், கனேடிய மக்களிற்கும் எம் தமிழ் மக்கள் சார்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன்.
வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழர்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு ஒன்று தேவையானது என்பது எனது அசைக்கமுடியாத அடிப்படையான நம்பிக்கை, இந்த கட்டமைப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பது வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழர்களினால் மட்டுமே தீர்மானிக்கப்படவேண்டும். அது ஒரு சமஷ்டி அரசாக இருக்கலாம், இணைந்த இரண்டு அரசுகளாக இருக்கலாம் அல்லது சுதந்திரமான தனி நாடாக இருக்கலாம். இந்த கட்டமைப்பு ஒரு ஜனநாயக அரசியற் கட்டமைப்பின் மூலம் பெறப்பட வேண்டுமேயன்றி எமது தாயக மக்களை மீண்டும் ஒரு முறை வன்முறைக்கு இந்த கட்டமைப்பு அழைத்து செல்ல கூடாது என்பது எனது விருப்பம். எனது உறவினர்கள், நண்பர்கள் பலர் எம் தாயக மக்களிற்கு ஒரு நியமான தீர்வு வேண்டி தம் உயிரை இழந்துள்ளனர், இவர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்க நான் என்றும் தவறியதில்லை. எம் தாயக மக்களிற்கான ஒரு சிறந்த தீர்வைப் பெற்றுகொடுக்க உழைப்பதே நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.
தமிழர் என்ற ஒரே காரணத்திற்க்காக 2009ஆம் ஆண்டு எம் உறவுகள் கொல்லப்பட்ட போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானது. இந்த இன அழிப்பை உலகமே பொறுப்பற்ற முறையில் வேடிக்கை பார்த்ததை நாம் கண்டோம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்டனர். ஆனால் ஏன் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர்? இழைக்கப்பட்ட குற்றங்கள் என்னாவது? தமிழ் மக்களுக்கு என்ன நடக்கும்? அவர்களுக்கு நாம் எப்படி  நியாயத்தை பெற்றுக்கொடுப்பது?
பல வாரங்களாக  இதுபற்றிச் சிந்தித்த என் மனைவி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் என் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது. இதன் விளைவாக மார்ச் 2009 நாம் ஜெனிவா சென்றோம். உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழர்களை இந்தச் சந்திப்புக்கு அழைத்திருந்தோம். ஐ.நா. உரிமைகள் ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை அவர்களிடம் எங்கள் நிலையை எடுத்துரைத்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் முப்பது தடவைக்கும் மேல் ஜெனிவா சென்றிருக்கிறேன், சில பயணங்களில் என் மனைவியும் கைக்குழந்தையும் கூட என்னோடு வந்திருக்கின்றார்கள். ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் நான் ஜெனிவா சென்றேன். எம் ஆற்றல்களோடு வேறெங்கு செல்வதைக் காட்டிலும் ஜெனிவா செல்வதன் மூலம் மிக அதிகமான பயனைப் பெறமுடியும்.
ஆம் நாம் போராட்டம் செய்யலாம், செய்தும் இருக்கிறேன், இணைய தளங்களில் எழுதலாம்,  ஆயிரக்கணக்கான தமிழர்களோடு மேடையில் ஏறி உணர்ச்சிவசப்பட்டு உரத்துப் பேசி நாம் சரியான வழியில் பயணிப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். , ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவில் கருத்தரங்குகள் ,மாநாடுகள் நடத்தலாம், தொலைக்காட்சி, வானொலி நிகழ்சிகள் நடத்தலாம் . இவற்றின் மூலம் எமது சிக்கல்களை எமக்குள் மட்டுமே பேசிக் கொள்ளலாமே அன்றி வேறெதுவும் செய்துவிட முடியாது.
Gary Anandasangaree
Gary Anandasangaree
இவற்றையே நாமும் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம், ஆனால் நாம் அதைச் செய்யவில்லை, மாற்றாகச் சர்வதேசத்தின் பொறப்பு கூறலில் நாம் இடையறாது கவனம் செலுத்தினோம். ஜெனிவாத் தீர்மானத்திற்கு எந்த ஒரு தனிப்பட்ட மனிதரும் உரிமை கோர முடியாது. நான் ஜெனிவா அமர்வுகளிற் பங்கேற்காவிட்டாலும் இத்தீர்மானம் நிறைவேறியிருக்கும் எனச் சிலர் சொன்னார்கள். அவர்களின் கூற்று ஏற்புடையதுதான். எது எப்படியாயினும் அடிப்படை இதுதான். முப்பது தடவைக்கும் மேலான ஜெனிவாவிற்கான பயணத்தில் எது சரியான பாதை என நாம் நம்பினோமோ அதிலேயே பயணித்தோம். இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை, மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழர் மீதான இன அழிப்புப் போன்றவையே அவையாகும். இன அழிப்பு என்ற வார்த்தை தொடர்பாக நான் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றேன்.
நான் “இன அழிப்பு” என்கிற சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்தவில்லை என்பது உண்மையே, மாறாக அதைப் புத்திசாதுரியத்தோடு பயன்படுத்தினேன், இருப்பினும் தற்போதைய விசாரணையானது இன அழிப்புக்கான விசாரணையையும் உள்ளடக்கியது என்பதே இதற்க்குச் சாட்சி . இது தானாகவே நடந்துவிடவில்லை. நான் எழுத்து மூலமும் வாய் மூலமும் சிறிலங்காவில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என விபரித்திருக்கின்றேன். இதைச் சட்டரீதியாக நிருபிப்பதிற் சிரமங்கள் இருப்பதையும் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நாம் அதை நிரூபிக்க முயற்சிக்க கூடாது என்பது அதன் பொருளில்லை, தனிப்பட்ட முறையில் நான் இன அழிப்பு நடக்கவில்லை எனக் கூறியதாகச் சொல்லி வருபவர்கள் ஒன்றிற் பொய் சொல்லி ஏமாற்றப்பட்டிருக்கவேண்டும் அல்லது தமது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகத் தாங்களாகவே இந்தப் பொய்யை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக நான் கனேடியத் தமிழர் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன், சட்ட ஆலோசகராகச் சில காலம் பணியாற்றிய நான் தொடர்ந்தும் அதன் உறுப்பினராயிருக்கிறேன். கனேடிய தமிழர் பேரவையின் இயக்குனர்கள் , அங்கத்துவர்களினால் தெரிவு செய்யபடுகின்றவர்கள். இந்த அமைப்பு இயக்குனர் சபையால் நிர்வாகிக்கப்படுகிறது, இருப்பினும் நான் இந்த அமைப்பை என் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் வதந்திகள் பரப்பி விடப்பட்டுள்ளன. இதைவிட முட்டாள்த்தனம் வேறொன்றும் இல்லை. என்னை நன்கு அறிந்த அனைவரும் அறிந்த உண்மை இது. உறுப்பினர் பலரின் நடுநிலையான நியாயமான செயற்பாட்டை அறிந்து நான் இவ்வமைப்போடு இனைந்து செயற்பட விரும்பினேன். எனினும் தேவையேற்படும் போது விமர்சிக்க தவறியதில்லை. இது தொடர்பாக என் உணர்வு எதுவாயினும் நிச்சயமாய்க் கனேடியத் தமிழர் பேரவை என் கட்டுப்பாட்டில் இல்லை. கனடியத் தமிழர் பேரவையோடு தங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் கேள்விகள் இருப்பின் நேரடியாக அவர்களிடமே கேட்கலாம்.
கடந்த மே 21ம் திகதி முதல் இன்று வரை சில நபர்கள் நான் போட்டியிடும் ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் அங்கத்துவர் பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று என்னை ஒரு சிறிலங்கா அரசின் முகவர் என்றும் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை நான் மறுப்பதாகவும் கூறி என்னைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகக் கடந்த ஜூன் 28ம் திகதி Morningside Finch இற்கு அருகாமையில் உள்ள எனது ஆதரவாளர்கள் வீட்டிற்குச் சென்று என்னைப்பற்றிய தவறான தகவல்களைச் சிலர் கூறுவதாக எனது ஆதரவாளர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் எனது பிரச்சார குழுவை சேர்ந்த நால்வர் அந்த இடத்திற்கு சென்று இவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இவர்களை படம் எடுத்தனர். (இந்த படங்கள் எதுவும் இதுவரை எம்மால் வெளியிடப்படவும்மில்லை, அத்துடன் இப்படியாக ஒருவரை அடையாளம் காண்பதற்காகப் படம் பிடிப்பது என்பது கனடிய சட்ட வரையறைக்குள் உட்பட்டது). கனடிய தேர்தற் சட்ட முறைகளின் படி எவரும் எவருக்காகவும் பிரசாரம் செய்யமுடியும். தான் ஆதரிக்கும் ஒரு வேட்பாளரின் கொள்கையை விளக்கமுடியும் ஆனால் எதிர்த் தரப்பு வேட்பாளரைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறமுடியாது. அவர்கள் குறிப்பிட்டது போல அங்கு இரண்டு மாணவியர் மட்டும் பிரசாரம் செய்யவில்லை. அவர்களுடன் ஒரு பெரிய குழுவே அங்கு இருந்தது. இதற்கான சகல வீடியோ, போட்டோ ஆதாரங்களும் எம்மிடம் கைவசம் உள்ளது.
எனது எதிர்த்தரப்பு இந்த சம்பவத்தைப் புனைகதையாக்கி எமது புகைப்படங்களை அடையாளம் அற்ற இணையதளங்களிலும், முகம் மறைத்த முகநூற் பக்கங்களிலும் தினமும் புதுப்புதுப் பொய்களைப் புதுக் கதைகளாக வெளியிட்ட வண்ணமேயுள்ளனர். தம்மை எமது சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளாக வெளிக்காட்டிகொள்ளும் பொறுப்புணர்ச்சியற்ற சிலர் தொகுக்கப்பட்ட சில வீடியோக்களையும் படங்களையும் தமது இணையத் தளங்களிலே வெளியிடுகின்றனர். சிலர் நானும் எனது பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும், எம் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் பொறுப்புணர்ச்சி அற்றமுறையில் தன்னை ஒரு மூத்த பத்திரிகை என்று அழைக்கும் ஒரு பத்திரிக்கையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
என்னை எதிர்ப்பவர்கள் பொய்யிற்கு மேற் பொய் சொல்வதன் மூலம் வாக்காளர்களை வாக்களிக்காமல் தடுக்கலாம் என நினைக்கிறார்கள், மிகவும் சாதரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டதாகவோ, அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டதாகவோ, ஆதாரம் ஏதுமின்றி ஒரு செய்தியாக வெளியிட முடியாது. அதனாற் கனடாவிலே உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக நான் என்னையும் எனது பிரச்சாரக் குழுவினரையும், எமது நற்பெயரையும் தீவிரமாகவும் விரைவாகவும் காப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். எமது கால்களை பற்றி எம்மை கீழே இழுக்க இவர்கள் முயற்ச்சித்தாலும் எமது பிரச்சாரம் முன்னோக்கி நகருமேயன்றி எப்போதும் பின்னோக்கிச் செல்லாது.
என்னை அவமானபடுத்தும் முயற்சியாய் மேற்கொள்ளப்படும் இத்தகைய இடையூறுகள் எதற்கு என என்னை நானே கேட்கிறேன். இவ் வினாவுக்கான பதில் மிக எளிதானது. இதற்கான காரணம் எம்மை அடக்கி வைத்தல், எம் தமிழ்ச் சமூகத்தை அனைத்து வழிகளிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கம். எம் சிந்தனை, ஊடகங்கள், வணிகம் மற்றும் எதிர்காலத்தைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுவதே இதன் நோக்கம். இங்கு சிலர் நம் சமூகத்தின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தித் தாம் விரும்பும் குறுகிய பாதையில் இட்டுச்செல்ல முனைகின்றனர். என் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்க்காகவும் என் இரண்டு குழந்தைகளுக்காகவும் நான் இப்பாதையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றேன்.
Gary Anandasangaree
Gary Anandasangaree
இதை விடுத்து நாம் ஒரு பலமான, சக்திமிக்க, உறுதியான தமிழ் சமூகத்தை உருவாக்கவேண்டும். அடுத்தவருக்கு மரியாதை செய்யத்தக்கதும் சமூக மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கேற்பதும், உலகெங்கும் வாழும் குறிப்பாய்த் தாயகத்தில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழரின் நீதிக்காக உண்மையாய்க் குரல் கொடுப்பதுமான சமூகமே இச்சமூகம். உறுதியும் ஆற்றலும் அறிவும் கொண்ட தலைவர்களை உருவாக்கினால் மட்டுமே அவர்கள் மீதான நம் எதிபார்ப்புகள் நிறைவேறும். எம்மைப் போலத் துன்புறும் ஏனைய சமூகத்தவரோடு சாத்வீகமான முறையில் இணைந்து செயற்பட வேண்டும், பெண்ணடிமைத்தனம், இனவாதம், சாதிவெறி, வர்க்கபேதங்கள், இணைத் தேர்வு குறித்த வெறுப்பு ஆகிய மூட எண்ணங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராய்க் குரல் கொடுக்க வேண்டும். வெளியில் இருந்து கோசம் போடுவதும், வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தி முடிவுகள் எட்டப்படும் இடங்களில் முக்கியம் பெறவேண்டும். நாம் அனைவரும் இதிற் பங்காளராய் இருக்கவேண்டும். தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை ஆதரிப்பதை விடுத்து அவர் தகுதியானவரா என்பதை அறிந்து ஆதரவு வழங்க வேண்டும்.
இதிலிருந்து மாறுபட்டு நம்மை நாமே அழித்து, எமது சமுதாயத்தையும் அழிவுக்கு இட்டுச் செல்வோருடனான எமது பயணம் இத்தோடு முடிவுக்கு வருகிறது. ஆதாரங்கள் அற்ற செய்திகளை, அடையாளமற்ற பெயர்களில் இணையதளங்களில் நீங்கள் வெளியிடலாம், தொடர்ந்தும் சம்பவங்களை உருவாக்கி சேறு பூசும் பணியில் ஈடுபடலாம். என்னை அவமானபடுத்திக் காயபடுத்தி இழிவுபடுத்துவதை தொடரலாம், ஆனால் சுயநலமான, பொது அறிவற்ற, ஏற்றுக் கொள்ள முடியாத அவர்களின் செயல்கள் கனடியத் தமிழ்ச் சமூகத்திற்கும், தாயக உறவுகளிற்கும் நாம் செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளில் இருந்து நம்மைஅன்னியப்படுத்துவதாய் அமைந்து விடக்கூடாது.
கனடியர் என்ற பெருமையோடு தமிழ்க் கனடியராய் விளங்கும் அனைவரையும் லிபரல் கட்சியிற் Scarborough – Rouge Park தொகுதி வேட்பாளராகத் தெரிவாக நான் எடுக்கும் முயற்சியில் பங்கேற்குமாறு அன்போடு வேண்டுகிறேன். எமது சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஒரு புதிய பாதையை உருவாக்குவோம்.
உங்களின் ஆதரவை அன்புடன் வேண்டும்

ஹரி ஆனந்தசங்கரி                                                குருவி

Aucun commentaire:

Enregistrer un commentaire