dimanche 3 août 2014

நாம் போராடுவோம் சிவில் சமூகத்தின் உரிமைகளுக்காக

NF-2இலங்கை அரசு வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் மீண்டும் மரண பயத்தை ஏற்படுத்துகின்றது என சிவில் சமூகக் கூட்டமைப்பு மற்றும் இனவாதத்திற்கான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ கொழும்பு சி.ஆர்.சி நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர். தமது உரிமைகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இன்று வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தமது உரிமைகளுக்கப் போராடும் போது அரசு பாதுகாப்புப் பிரிவினரைப் பயன்படுத்தி அடக்குகின்றது. இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசு கொடுத்த வாக்கினை மீறுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வடக்கின் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்து ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரத்தையும் உரிமைகளையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இன்று அவற்றுக்கு முரண்பட்ட வகையில் அரசே செயற்பட ஆரம்பித்து விட்டது. நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்படுகின்றபோதும், மனித உரிமைகளுக்கு எதிராக அரசு செயற்படுகின்ற சந்தர்ப்பத்திலும் நியாயம் கேட்டுப் போராட நாங்கள் தான் உள்ளோம்.
சிவில் அமைப்புகளுக்கு பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், நாட்டின் உண்மை நிலைமையினை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் அனைத்து உரிமைகளும் உண்டு.
அதையே நாம் செய்கின்றோம். அதேபோல் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே நாம் செயற்படுகின்றோம். இந்த நாட்டின் அரசியல் யாப்பில் சிவில் சமூகம் செயற்படக்கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, தொடர்ந்தும் சிவில் சமூகத்தின் உரிமைகளுக்காக நாம் போராடுவோம்” என்றார் நிமல்கா பெர்னாண்டோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire