dimanche 10 août 2014

ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள்கள் விமானம் மூலம் வீச்சு

வடக்கு ஈராக்கில் சின்ஜார் பகுதியில் இடம்பெயர்ந்து வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இரண்டாவது முறையாக தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் வீசியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஒரு சி - 17 ரக சரக்கு விமானம், இரண்டு சி - 130 ரக சரக்கு விமானம் ஆகியவை 72 பொதிகள் அடங்கிய உணவுப் பொருட்களை வீசியிருப்பதாக அமெரிக்க ராணுவத் தலமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.இந்தப் பொருட்கள் சின்ஜார் நகருக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதியில் வீசப்பட்டன. இப்பகுதியை ஐஎஸ் ஒரு வாரத்திற்கு முன்பாக கைப்பற்றியதையடுத்து, கிட்டத்தட்ட 50000 யாஸிதி சமூகத்தினர் இந்த மலைப்பகுதியில்தான் தஞ்சமடைந்துள்ளனர்.
வடக்கு ஈராக்கில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் மீது மேலும் இரண்டு முறை அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க ஆளில்லா விமானங்களும் கடற்படை ஜெட் விமானங்களும் குர்திஷ் நகருக்கு அருகில் உள்ள ஐஎஸ் இலக்குகளைத் தாக்கியுள்ளன. இதே போன்ற ஒரு இடத்தின் மீது வெள்ளிக்கிழமையன்று முதல் தாக்குதல் நடந்தது.
2011க்குப் பிறகு அமெரிக்கத் தலையீடு
2011ல் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகிய பிறகு, இப்போதுதான் அமெரிக்கா நேரடியாக ஈராக்கில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
இரண்டாவது விமானத் தாக்குதலில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் அழிக்கப்பட்டதோடு, தீவிரவாதக் குழுவினர் சிலரும் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
ஜிகாதிகளோடு போரிடும் திறன் கொண்ட அரசு ஒன்றை அமைக்கும்படி, ஈராக்கியத் தலைவர்களை அமெரிக்கா வற்புறுத்திவருகிறது.
ஐஸ் குழுவை இர்பில் நகரத்தை நோக்கி முன்னேற விடாமல் தடுப்பதுதான் தற்போதைய தாக்குதல்களின் நோக்கம் என அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஈராக் மீதான வான் தாக்குதல்கள் முழுக்க முழுக்க ஒரு அமெரிக்க நடவடிக்கைதான் என்றும், பிரிட்டன் தற்போது மனிதாபிமான முயற்சிகளில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறது என்றும் பிரிட்டிஷ் அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
ஜூன் மாதத்தில், ஐசிஸ் மோசூல் நகரைக் கைப்பற்றியபோது, வான் தாக்குதல் நடத்த வேண்டுமென மாலிக்கி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அமெரிக்க அரசு அப்போது குறுக்கிடவில்லை.
குர்திஷ் பிரதேசத்தின் பேஷ்மெர்கா படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்கள் சிலவற்றை சமீபத்தில் ஐஎஸ் கைப்பற்றியது.
ஈராக்கிய பிரதமர் நூரி மலிக்கி, வெள்ளிக் கிழமையன்று இர்பில் பகுதிக்கு, ஒரு விமானம் முழுக்க ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐஎஸ் படையினரை எதிர்த்துப் போராடிவரும் குர்திஷ் வீரர்களுக்கு உதவும்படி தனது விமானப் படையினருக்கு மலிக்கி முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் காரகோஷ் பகுதியை இந்த வாரம் ஐஎஸ் படையினர் கைப்பற்றியதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான யாஸிதி பெண்களை பிடித்து வைத்திருப்பதாக ஈராக்கின் மனிதஉரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சனையைச் சரியாக கையாளாததால், அதிபர் மலிக்கி தனது பதவியிலிருந்து இறங்க வேண்டுமென சுன்னி அரபு, குர்திஷ் மற்றும் சில ஷியா அரபு தலைவர்கள் கோரிவருகின்றனர்.
இருந்தபோதும், ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த பிரிவின் தலைவர் என்ற முறையில் புதிய கூட்டணி அரசை அமைக்க முயற்சிக்க தனக்கு உரிமை இருக்கிறது என மலிக்கி கூறிவருகிறார்.
ஈராக், சிரியா நாடுகளின் பல பகுதிகளை சுன்னி முஸ்லிம் குழுவான ஐஎஸ் பிடித்துள்ளது.
தீவிரவாதிகள் ஈராக்கில் முன்னேறி வருவதையடுத்து, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவருகின்றனர்.
ஈராக்கின் மிகப்பெரிய அணையும் தற்போது ஐஎஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire