lundi 11 août 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஊடகங்களும் இதன் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல்ல வருவது என்ன?

air-2.siகடற்படையே சூடு நடத்தியது, இராணுவமே ஷெல் அடித்தது போர் தவிர்ப்பு பாதுகாப்பு வலயத்திற்குள் இத்தனையும் நடந்ததாக மன்னாரில் ஆணைக்குழுவிடம் சாட்சியம் பதிவு என்று கூட்டமைப்புப் பத்திரிகை நேற்று கொட்டை எழுத்துச் செய்தியை எழுதியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஊடகங்களும் இதன் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல்ல வருவது என்ன?
கடற்படையே… இராணுவமே… என்ற ஏகார இழுவையின் மூலம் தமிழ்த் தரப்பு எந்தக் கொலைகளையும் செய்யவில்லை, எந்தக் கொலைகளுக்கும் தமிழ்த்தரப்பு காரணமாக இருக்கவில்லை என்று தமிழ் மக்களிடமே உரத்துச் சொல்லி, அப்பாடா, எங்களில் எந்தப் பிழையுமில்லை என்று தமிழ் மக்களை பொய் மயக்கத்தில் குஷிப்படுத்துவதே நோக்கம்.
ஐ.நா. வின் அறிக்கை மற்றும் வெளிநாட்டு நிருபர் அறிக்கைகளிலெல்லாம் தமிழ்த் தரப்புச் செய்த கொலைகளும், மக்கள் கொலையாகக் காரணமாக நம் தரப்பில் நடந்துகொண்ட முறைகளும் விலாவாரியாகச் சொல்லப்பட்டு வெளிவந்து விட்டன. நம்மில் நேரடியாக அதையெல்லாம் பார்த்தவர்களும் அனுபவப்பட்டவர்களும் நிறையப் பேர் உண்டு.
இந்நிலையில், பதகளிப்பட்டு, நாம் எந்தக் குற்றமும் அற்றவர்கள் என்று நமக்குள்ளேயே பெருங்குரலெடுத்துச் சொல்லி நம்மை நாமே குஷிப்பட வைத்துக்கொள்பவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கும்? போர்க் குற்றங்களையெல்லாம் இலங்கை அரசும் அரச இராணுவத்தினரும் மட்டுமே செய்தனர் எனவே அதற்காக அவர்களைத் தண்டித்துவிட்டு சர்வதேசம் நமக்குத் தனிநாடு அல்லது அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான தீர்வை எடுத்துத் தரப்போகிறது, பார்த்திருங்கள் என்று தமிழ் மக்களைப் பொய்யான நம்பிக்கைகளில் மூழ்கடித்து வைத்திருப்பதே நோக்கம்.
இவ்வாறு, எதிரி முழுக்க முழுக்கப் பிழையானவர் நாம் முழுக்க முழுக்கச் சரியானவர்கள் என்று கறுப்பு-வெள்ளையாகக் காட்டிப் பிரச்சாரப்படுத்திக் கொண்டிருப்பது, இருதரப்பிற்குமான போரைத் தீவிரப்படுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமான உத்தியாகும்.
அழிவுப்போர் முடிந்துவிட்ட இந்த நாட்களிலும், எதிரி மேலும் மேலும் மாற்ற முடியாத மகா எதிரியாகிக் கொண்டிருக்கிறார் உலக நாடுகளால் தண்டிக்கப்படப் போகிறார் அந்தத் தண்டனை நடக்காமல் இங்கு சமாதானமோ நல்லிணக்கமோ பேச்சுவார்த்தையோ சாத்தியமில்லை என்று காட்டிக்கொண்டிருப்பது போர்ச்சூழலே இங்கு தொடர வேண்டும் என்று விருப்பப்படுவோரின் பிரச்சாரமாக இருக்கிறது.
நல்லிணக்கத்தையும் பன்மைத் தன்மையை மதித்து அமைதியான வாழ்வு இங்கு உருவாகவும் முதலில் நாங்கள் விரும்புகிறோமா என்று எங்களைப் பார்த்துக் கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் பேசுவது, எழுதுவது இங்குள்ள பல்லின மக்களும் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறதா அல்லது மக்களைப் பிரிப்பதற்கே எழுதிக் கொண்டிருக்கிறோமா உடனேயே, அவர்கள் திருந்தாமல் இருக்கும்போது… என்று ஆவேசமாக ஆரம்பிப்பது அல்ல இதற்குப் பதில். அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டியது அவர்களுடைய அறிஞர்களும் எழுத்தாளர்களும் பார்த்துக்கொள்ள வேண்டிய பாடு.
நாம் இன்றைய யதார்த்தமுணர்ந்து – சமூகத்தின் மீட்சிக்குக் காட்ட வேண்டிய அக்கறையை அறிந்து – பகை மறப்புக்கும் எதிர்ப்புச் சூழல் தணிவதற்கும் எங்கள் பக்கத்தில் சரியாக எழுதுகிறோமா நடந்துகொள்கிறோமா என்பதையே நாம் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்

Aucun commentaire:

Enregistrer un commentaire