vendredi 21 septembre 2012

வைகோ கைது! சாகர் சிறையில் அடைப்பு!

மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப்பிரதேச எல்லையில் தமது கட்சியினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட அக்கட்சித் தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் ராஜபக்ச கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார். இதற்காக,அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.

நேற்று முன்தினம வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.

ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான போலீசார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள். கடந்த 3 தினங்களாக நடுரோட்டில் அமர்ந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி, தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

வைகோவின் இந்த போராட்டம் அப்பகுதி மக்களை கவர்ந்த நிலையில், அவர்கள் அப்பகுதியில் திரண்டனர். குறிப்பாக இளைஞர்கள் ஏராளமான அளவில் திரண்டனர்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளையும், காணொளிக்காட்சிகளையும் இந்தியில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டது. இதனை பார்த்த உள்ளூர் இளைஞர்கள் வைகோவுடன் தாங்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர்களது மத்தியில் பேசிய வைகோ, இலங்கையில் ராஜபக்ச அரசால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த விவரங்களையும், ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அங்கு துயரத்திற்குள்ளாக்கப்படுவது குறித்தும் பேசினார். அவரது ஆங்கில பேச்சு இந்தியில் மொழிபெயர்த்து கூறப்பட்டது.

இதனிடையே வைகோவை நேற்று தொடர்புகொண்டு பேசிய மத்தியப்பிரதேச முதல்வர் சவுகான், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் நிலைமை எல்லை மீறி சென்றால் வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் சவுகான் தெரிவித்திருந்தார்.
அதன்படியே தடுத்துவைக்கப்பட்ட பட்சிரோலி நகரில் மறியலில் ஈடுபட்ட வைகோ இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.அவருடன் சென்ற மதிமுக தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் உரத்த குரலில், ” மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! மத்திய அரசை மன்னிக்கமாட்டோம்! மத்திய பிரதேச பா.ஜனதா அரசையும் மன்னிக்க மாட்டோம்...” என்று முழக்கமிட்டனர்.
கைது செய்யப்பட்டவுடன்  பேசிய வைகோ, தமிழர்கள் விஷயத்தில் பா.ஜனதாவும், காங்கிரசும் மக்களின் மன ஓட்டைத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அங்கிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாகர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கைதாவதற்கு முன் இன்று காலை 11 மணியளவில் தொண்டர்களிடையே பேசிய  வைகோ,”மீண்டும் ராஜபக்சவை இந்தியாவுக்கு வர அனுமதித்தால் பிரதமர் வீட்டை  முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்.
ராஜபக்ச லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார் என்பதை அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் கூட்டம் போட்டு தெரிவிப்போம்.  ராஜபக்ச இலங்கை தமிழர்கள் மீது நடத்திய மனித உரிமை அத்துமீறல் பற்றிய சிடிக்களை  நாடு முழுவதும் விநியோகம் செய்வோம். இங்கு தடை விதித்தாலும் அதையும் மீறி  நாங்கள் செல்வோம் என்றார்.
இந்நிலையில் சாஞ்சியில் இன்று நடைபெற உள்ள விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜபக்ச மத்தியப்பிரதேசம் வந்துள்ளார். இந்நிலையில் திட்டமிட்டப்படி காட்ட மதிமுக தொண்டர்கள்,கறுப்புக்கொடி காட்ட  முயற்சிக்கலாம் என்பதால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையே வைகோவுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்ற மதிமுகவினர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர். வேறு மாநிலங்கள் வழியாக ரயிலில் வரும் மதிமுகவினரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire