jeudi 27 septembre 2012

காட்டில் மக்கள் விலங்குகளைப் போல் பலவந்தமாக மீள்குடியேற்றம்

இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்டதையடுத்து சொந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறிடத்தில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாப்பிலவு பகுதி மக்கள், கேப்பாப்பிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டைக்குக் கொண்டு சென்று, அடிப்படை வசதிகளற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஓரிரவு வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வற்றாப்பளை பாடசாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை சீனியாமோட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்குத் தங்களை இராணுவத்தினர் பலவந்தமாக அழைத்துச் சென்று விட்டதாகவும், அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இருக்கவில்லை என்றும் சீனியாமோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

அந்தப் பகுதியில் தற்போதுதான் புல்டோசர்கள் மரங்கள் பற்றைகள் என்பவற்றை அகற்றித் துப்பரவு செய்வதாகவும், அவ்வாறு துப்பரவு செய்யப்படுகின்ற இடங்களிலேயே மக்கள் உடனடியாகக் குடியமர்வதற்கு விடப்படுவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஒதுங்கி நிற்பதற்கு எந்தவிதமான கட்டிடங்களோ மர நிழல்களோ அற்ற நிலையில் பலர் குடை நிழல்களிலேயே அழுகின்ற பிள்ளைகளை வைத்திருந்ததாகவும், போதிய தண்ணீர் வசதியோ, கழிவிட வசதிகளோ செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

முகாமில் இருந்து தாங்கள் கொண்டு வந்த மரம், தடிகள், தகரங்கள் என்பற்றைப் பயன்படுத்தி தாங்களே கொட்டில்களை அமைப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கேப்பாப்பிலவு பகுதி மக்கள் காட்டுப்பகுதியில் விடப்படவில்லை என்றும் முன்னர் பயிர் செய்யப்பட்டு கைவிடப்பட்டிருந்த ஒரு வெளியான காணியிலேயே விடப்பட்டுள்ளதாகவும், அங்கு பத்து பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் தற்காலிக கழிவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நிரந்தர கழிவிடங்கள் மற்றும் நிரந்தர வீடுகள் என்பவற்றை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

கேப்பாப்பிலவு பகுதி மக்களை அவர்களது சொந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறிடத்தில் குடியேற்றுவதென்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளே வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்ததனால், மாற்றிடத்தில் அவர்களுக்கான வசதிகளை முன்கூட்டியே செய்ய முடியவில்லை. அத்துடன் மனிக்பாம் முகமில் இருந்து இந்த மக்களை அதிகாரிகள் பவலந்தமாக அழைத்து வரவுமில்லை. 

அவர்களுடன் இருந்த மந்துவில் கிராம மக்கள் மீள்குடியேற்றத்திற்காக முகாமிலிருந்து அனுப்பப்பட்டால் தனிமையில் மனிக்பாம் முகாமில் தங்களுக்குப் பாதுகாப்பு இருக்கமாட்டாது என தெரிவித்து தங்களையும் அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு அவர்கள் கேட்டதையடுத்தே, கேப்பாப்பிலவு மக்கள் அழைத்து வரப்பட்டு இப்போது சீனியாமோட்டையில் விடப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகன் கூறினார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire