jeudi 20 septembre 2012

இந்திய-சீன போட்டிக்கு இலங்கை ஆடுகளமல்ல

இந்திய- சீன போட்டிக்கான ஆடுகளமாக இலங்கை இருக்கமாட்டாது என்றும், இலங்கையை அல்லது அதன் கடலை, ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு எதிரான விடயங்களுக்குப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று,இந்தியாவுக்கான இங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

IANS க்கு அளித்த பேட்டியென்றிலேயே இந்தியாவுக்கான இங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலிகளைத் தோற்கடித்த பின்னர், பீஜிங்கிற்கும் கொழும்புக்கும் இடையில் மிக வேகமாக வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கம் பற்றி, இந்தியாவில் உள்ள சிலரின் முரண்பாடான கருத்துக்களை நிராகரித்த காரியவசம், வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளான, இந்தியா மற்றும் சீனாவுடன் எமது பொருளாதார வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வரலாற்றில் எப்போதும் இருந்து வந்தது போல, இந்துப் பெருங்கடல் பகுதியை நாங்கள் வர்த்தக மையமாகத் திகழ வைக்க விரும்புகின்றோம் என்றும், இந்த அணுகுமுறையால் முதலாவதாகப் பயனடையும் நாடு இந்தியாவாகும் என்றும், வரலாற்றில் இந்தியா - இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும் உள்ள உறவை குறைத்து மதிப்பிடுவது இருநாடுகளுக்கும் ஆபத்தாக முடியும் என்றும், காரியவசம் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியா பிரச்சினையில் அகப்பட்டால் இலங்கையும் அகப்படும் என்றும், இலங்கை அகப்பட்டால் இந்தியாவும் அகப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire