samedi 29 septembre 2012

ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு, சகோதர யுத்தமே காரணம்! பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு ஈ.என்.டி.எல்.எப். (E.N.D.L.F.) பதில். Part - 1


  05-09-2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள, “சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் எங்களது ஈ.என்.டி.எல்.எப். இயக்கம் பற்றித் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இவர் இப்படித் தன்னுடைய கற்பனையை வரலாறாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

   “டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட் ஆகிய இயக்களிலிருந்து விலகியவர்களை ஒன்றுசேர்த்து ஈ.என்.டி.எல்.எப். என்னும் ஓர் அமைப்பை “ரா” உளவுத்துறை உருவாக்கியது. இதற்குத் தலைவராக பரந்தன் ராஜன் என்பவர் பொறுப்பேற்றார்.” இந்த அமைப்புக்கும் ஆயுதங்கள் வழங்கி தமிழ்ப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்களை மிரட்டவும், படுகொலை செய்யவும் ‘ரா” உளவுத்துறை பயன்படுத்தியது.” என்று ஜூனியர் விகடனில் நெடுமாறன் எழுதியுள்ளார்.

   ஈழத் தமிழ் இனத்தின் வரலாறுப் பேராசிரியராய் மாறிய பழ.நெடுமாறன் பல்வேறு விரிவுரைகளை வழங்கியுள்ளார் ஜூனியர் விகடன் இதழில்!

   இவர் பற்றி மதுரையில் இருக்கும் பேராசிரியர் ஒருவரிடம் விசாரித்தோம். “அந்த ஆள் ஒரு வெட்டிப் பயலுங்க” அவருக்கெல்லாம் நீங்கள் பதில் கூற வேண்டியதில்லை என்றார். ஆனால் வாரப் பத்திரிகையை வாங்கிப் படிக்கும் தமிழ் மக்கள் இந்த நபரது பொய்யை உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதால் நாம் பதில் கூற வேண்டியுள்ளது.

   பிளாட் இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள்தான் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தினை ஆரம்பித்தவர்கள். ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தில் ஒரு டெலோ உறுப்பினரோ அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரோ இணைந்ததில்லை. எங்களுடைய (ஈ.என்.டி.எல்.எப்.) இயக்கத்தில் இதுவரை நாம் பிற இயக்கத்தவர் எவரையும் இணைத்துக் கொண்டதும் கிடையாது என்பதை இந்தப் பொய்யருக்குக் கொடுக்கும் பதில் மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். “பிளாட்” இயக்கத்தினுள் நடைபெற்ற படுகொலைகளைத் தொடர்ந்து அவ்வியக்கம் உடைந்தது. பிளாட் இயக்கத்தினுள் படுகொலைகளை நிகழ்த்தும்படி “ரா” அமைப்பு உமாமகேசுவரனைத் தூண்டிவிடவில்லை. புலிகளுக்கு நெடுமாறன் போன்று, உமா மகேசுவரனுக்குத் தூண்டிவிடும் நபர்கள் யாரும் இருந்ததில்லை. உமாமகேசுவரனது சொந்த முடிவுகளாலேயே இயக்கத்தினுள் படுகொலைகள் நிகழ்ந்தன. ஈ.என்.டி.எல்.எப். உருவானதற்கும் “ரா” அமைப்பிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது.

   நாங்கள் எந்த உளவுத் துறையையும் சார்ந்திருந்ததில்லை. அதே போன்று எங்களுடைய எதிரியான இலங்கை அரசிடமும் நாம் சோரம் போனதில்லை. நண்பன் யார்? எதிரி யார்? என்பது தெரியாத மூடர்கள் அல்ல நாம். போர் முனையில் முன்னாலும் சுட்டு, பின்னாலும் சுடும் பைத்தியம் எங்களுக்கு இருந்ததில்லை.

   விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர்களின் எதிரியான சிங்கள அரசிடம் 1988இல் மண்டியிட்டவர்கள். யாரிடமிருந்து விடுதலையைப் பெற வேண்டுமோ அவர்களிடமே சென்று, உறவு கொண்டாடி, பணம், ஆயுதம், புகலிடம் என்று பெற்று, விடுதலைப் போராட்டத்திற்கே புலிகள் களங்கம் விளைவித்தனர். ஈ.என்.டி.எல்.எப். இயக்கம் இது போன்று பச்சோந்தி விடுதலைப் போராட்டம் நடத்தியதில்லை.

   1989ஆம் ஆண்டு பிரேமதாச சிறிலங்காவின் ஜனாதிபதி ஆன இரண்டே மாதங்களில் 1989 மார்ச்சு 12ஆம் தேதி மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலை என்னும் இடத்தில் வைத்து இலங்கை இராணுவ உளவுத்துறை 2 கண்டயினர் ஆயுதங்களையும் அவற்றுக்கான குண்டுகளையும் புலிகளுக்கு வழங்கினர். மூன்றாவது கண்டயினரை அந்தப் பகுதியின் சிங்கள இராணுவத் தளபதி கைப்பற்றிப் புலிகளுக்கு வழங்காமலேயே தமது முகாமுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

   “பிரேமதாசாவுக்கு என்ன பைத்தியமா? தமிழர் எங்களின் எதிரிகள். புலிகள் எங்களின் (சிங்கள) சிப்பாய்கள் பலரைக் கொன்றவர்கள். அவர்களுக்கு ஆயுதங்களை நாங்களே வழங்குவதா?”

   திருமதி. சந்திரிகா குமாரத்துங்கா அரசில் நடந்த விசாரணை வேளையில் அந்த அதிகாரி தமது வாக்கு மூலத்தின் போது மிகவும் ஆத்திரம் கொண்டு நீதிமன்றத்தில் தெரிவித்தவை இவை!

   லோரன்ஸ் திலகர், அடேல் பாலசிங்கம், அன்ரன் பாலசிங்கம், யோகரட்னம் (யோகி), பரமமூர்த்தி ஆகிய விடுதலைப்புலிகளின் புpரதிநிதிகள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் காணப்படுகின்றனர். 1989 மே 5ம் தேதி எடுக்கப்பட்டது இந்தப்படம். தமிழரின் எதிரியான சிங்கள அரசின் ஜனாதிபதி பிரேமதாசாவுடன்டன் கூட்டுச் சேர்ந்து தமிழர் இயக்கங்களையும், உதவிக்கு வந்த அமைதிப்படையையும், தமிழ் அரசியல் கட்சிகளையும் கூட தாக்கி அழித்தனர் புலிகள்.

   உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் இது போன்று எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை; எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று சக போராளி இயக்கத் தலைவர்களையும், அவர்களது இயக்க அங்கத்தினரைப் படுகொலை செய்தவர்கள் புலிகள் மட்டுமே. பிரேமதாசா சிங்கள இராணுவத்தைத் தாக்குவதற்காவா ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கினார்? எந்த ஒரு தமிழ் இயக்கமும் எமது எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை. இப்படியான செயலை ஆரம்பித்து வைத்தவர்களே புலிகள்தான். உலகத்திலேயே மிகவும் வெக்கக்கேடான போராட்டம் ஈழத்தில்தான் நடந்தது என்றால் அது மிகையல்ல. துரோக வழியில் பெற்ற ஆயுதங்களைக் கொண்டுதான் புலிகள் இயக்கம் இருபதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களைக் கொன்றனர் என்பதை மிகவும் சுலபமாக மறைத்துவிட்டார் நெடுமாறன்!

   “1991ஆம் ஆண்டு பிரேமதாசா சிறிலங்காவின் ஜனாதிபதியானதும் இந்திய அமைதிப்படையை வெளியேற வேண்டும்; மாகாண அரசைக் கலைக்க வேண்டும்” என்று கோரினார் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

   பிரேமதாச 1989-02-01இல் குடியரசுத் தலைவரானார். அமைதிப்படை வெளியேற வேண்டும், மாகாண அரசைக் கலைக்க வேண்டும் என்று தமிழகத்தின் தெருக்களில் நின்று நெடுமாறன் வகையாறாக்கள் கூச்சல் போட்டதை மறைத்து, பிரேமதாச கோரிக்கை வைத்தார் என்று கதைவிடுகிறார் நெடுமாறன். இந்த நபர் செய்த தவறுகளை மறைத்து ஏனையவர்கள் மீது பழி சுமத்தி தன்னைப் புனிதராகக் காண்பிக்கிறார் பழனி. நெடுமாறன்!

   இந்த வரலாற்று ஆசிரியர் இன்னும் ஓரு வரலாற்றுக் குறிப்பையும் தமிழருக்கு எடுத்துரைத்துள்ளார். அதாவது, “குட்டிமணியின் மரணத்துக்குக் காரணம் சிங்களவரல்ல் நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான்”

   27-06-2012 தினமணி நாளிதழின் நடுப் பகுதியில் நெடுமாறனின் வரலாற்றுப் பேருரை உள்ளது. அதில், “1973ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து செயற்பட்ட டெலோ இயக்கத் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை, வெடிப்பொருள்கள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்களக் காவல்துறை கேட்டபோது ஒப்படைக்க உத்தரவிட்டவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த இதே கருணாநிதிதான். இதன் விளைவாக ஈழப் போராட்ட இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த குட்டிமணி சிறையில் அடைக்கப்பட்டு 1983ஆம்; ஆண்டில் சிறையிலேயே கொடூரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். குட்டிமணியின் மரணத்துக்கு இந்தக் கருணாநிதிதான் காரணம்”

   இதுதான் நெடுமாறனின் ஆராச்சிக் கண்டுபிடிப்பு! இந்த நபர் ஓர் அப்பட்டமான பொய்யர் என்பது யாராலுமே கண்டுபிடிக்க முடியாதிருந்தது. காரணம் இவரது பொய்ப் பிரச்சாரங்களுக்கு யாருமே பதில் கொடுத்ததில்லை. இதனால் தொடர்ந்தும் பொய்யுரைத்து வருகிறார்.

   புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் ஏமாற்றிப் பணம் பறிப்பதை நாம் குறை கூறவில்லை. ஆனால் ஈழத் தமிழரின் வரலாற்றைத் திரித்து ஈழத் தமிழருக்கே பாடம் புகட்ட முன்வரக்கூடாது இந்த நெடுமாறன்.

   குட்டிமணி பற்றிய உண்மைச் செய்தியைத் தருகிறோம்: இவை யாரோ சொல்லக் கேட்டதோ, அல்லது யாரோ எழுதப் படித்தவையோ அல்ல. குட்டிமணியின் கைது விவரம்!

   1973ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த குட்டிமணி அவருடைய உறவினரது படகு ஒன்றில் 40,000 (நாற்பதாயிரம்) டெட்டனேற்றர்களை(Detonators) யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படகு நடுக்கடலில் பழுதாகி நின்ற போது சிங்களக் கடற்படையிடம் மாட்டிக் கொண்டது. இலங்கைப் பத்திரிகைகள் பெரிய செய்தியாக இதனை வெளியிட்டன. அதே ஆண்டின் (1973) ஜனவரி, பெப்பரவரி, மார்ச்சு மாதங்களில் தமிழ் மாணவர் பேரவையின் முக்கிய தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். இதில் திரு. சத்தியசீலன் அவர்கள், திரு. ஞானசேகரன் (ராஜன், ஈ..என்.டி.எல்.எப். தலைவர்), திரு. சிறிசபாரெத்தினம் (டெலோ தலைவர்), திரு. மாவை சேனாதிராசா, திரு சபாலிங்கம் (1994-05-01இல் புலிகளால் பிரான்சு நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் ), திரு. முத்துக்குமாரசாமி, திரு. நாராயணதாஸ் போன்றோர் அடங்குவர். இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி அனுப்பிய டெட்டனேற்றரும் கடலில் வைத்துப் பிடிபட்டதால் சிங்கள உளவுத் துறை இரண்டையும் முடிச்சுப் போட்டு குட்டிமணியின் வல்வெட்டித்துறை வீட்டை முற்றுகையிட்டது.

   அங்கு எதுவும் சிக்காதபடியினால் வீட்டிலிருந்த குட்டிமணியின் அக்காவின் கணவரான திரு. இராசேந்திரம் என்பவரைக் கைது செய்து தமிழ் மாணவர் பேரவையினரை அடைத்து வைத்திருந்த “கண்டி போகம்பறைச் சிறைச் சாலை”யில் அடைத்தனர்.

   குட்டிமணி சரணடைந்தால்தான் அவருடைய மைத்துனரை விடுவிப்போம் என்று உளவுத்துறை கூறிவிட்டது. திரு. இராசேந்திரம் அவர்கள் நோய்வாய்பட்டவர், அவர் சிறையில் இருப்பது ஆபத்தானது. காரணம் மருந்துவ வசதிகள் கண்டிச் சிறையில் இல்லை. குறிப்பாகத் தமிழ்க் கைதிகளைத் தனிமைப்படுத்திதான் வைத்திருந்தனர் சிறை அததிகாரிகள். குட்டிமணிக்கும் தருமசங்கடமான நிலை. திரு. இராசேந்திரம் அவர்களைப் பார்வையிட மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தரும் குட்டிமணியின் சகோதரி அழுது கொண்டு வீடு திரும்புவார்.

   தம்முடைய மைத்துனரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் குட்டிமணி சரண் அடைவதைத் தவிர வேற வழியில்லை. எனவேதான் குட்டிமணி சரணடையும் முடிவை எடுத்தார். நேரடியாக இலங்கை சென்று சரணடைந்தால் சிங்கள உளவுத் துறை படுகொலை செய்துவிடுவார்கள் என்று கருதி, இந்தியாவில் சரணடைந்தால், சர்வதேச ரீதியில் உயிருக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று சட்ட ஆலோசகர்கள் அறிவுரை வழங்கியதால், 1973-11-18ம் தேதி அன்று குட்டிமணி தஞ்சை காவல்துறையிடம் சரணடைந்தார்.

   தமிழகத்திலிருந்து கொழும்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது. கொழும்பிலிருந்து பஸ்தியாம் பிள்ளை எனகிற உளவுத் துறை அதிகாரியின் தலைமையில் வந்த போலிஸ் படை குட்டிமணியைக் கொழும்புக்கு அழைத்துச் சென்றது. விசாரணையில் அந்த டெட்டனேற்றர்கள் வியாபார நோக்கில் அனுப்பப்பட்டவை, அல்லாமல் அவை பயங்கரவாதச் செயலுக்கு அல்ல என்று கண்டறியப்பட்டது. இருந்த போதிலும் குட்டிமணியும் கண்டி போகம்பறைச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார். 1974 மே மாதத்தில் குட்டிமணியின் மைத்துனர் திரு. இராசேந்திரம் விடுவிக்கப்பட்டார். பின்னர் 1975 ஆம் ஆண்டு மே மாதத்தில் குட்டிமணி விடுவிக்கப்பட்டார். குட்டிமணியுடன் திரு. சிறிசபாரெத்தினம், மாவை சேனாதிராசா போன்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஈ.என்;.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் (ராஜன்) மற்றும் திரு. அமரசிங்கம் ஆகிய இருவரும் விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர்கள் சிறையில் இருந்தனர். இலங்கை அரசிடம் சரணடைய வேண்டும் என்ற முடிவினை குட்டிமணிதான் எடுத்தார். ஈழத் தமிழரது பிரச்சினையில் தமிழகத்தில் இலாபம் தேடும் முயற்சியின் விளைவே நெடுமாறனின் இந்த வரலாற்றுப் புரட்டுப் பாடம்.

   சிறையிலிருந்து வெளியே வந்த குட்டிமணி, சிறிசபாரெத்தினம், போன்றோர் மூன்று ஆண்டுகள் கழித்து, ஒன்றிணைந்து, 1978இல் “டெலோ” இயக்கத்தை ஆரம்பித்தனர். இவர்களுடன் 1980ஆம் ஆண்டு இறுதியில் இணைந்தார் பிரபாகரன். 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ;குரும்பசிட்டி என்ற ஊர்pல் இருந்த வன்னிய சிங்கம் என்பவரது அடைவுக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது. அதில் இரு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். பின் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி 1981 மார்ச்சு 25ஆம் தேதி யாழ்ப்பாணம் நீர்வேலி என்னும் இடத்தில் வைத்து “மக்கள் வங்கி”யின் பணம் வழிமறித்துக் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கொள்ளையிடப்பட்ட பணம் 40,00,000 (நாற்பது இலட்சங்கள்). இந்த இரு கொள்ளைகளிலும் பிரபாகரன் நேரிடையாகக் கலந்து கொண்டார்.

   இந்தக் கொள்ளையில் தேடப்பட்டவர்களில், திரு. பிரபாகரன், திரு. சிறிசபாரெத்தினம், திரு.ஜெகன், திரு. குட்டிமணி மற்றும் திரு. தங்கத்துரை ஆகியோர் முக்கியமானவர்கள்.

   குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகிய மூவரும் 1981-04-05 அன்று குடத்தனை நாகர்கோவில் கடற்கரையில் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 மற்றும் 27ம் தேதிகளில் குட்டிமணி, தங்கத்துரை உட்பட மொத்தம் 53 தமிழ் இளைஞர்கள் வெலிக்கடைச் சிறையில் வைத்து சிங்களக் கைதிகளாலும், சிறை அதிகாரிகளாலும் இராணுவத்தின் துணையுடன் படுகொலை செய்யப்பட்டனர்.

   1974ஆம் ஆண்டு கொழும்புச் சிறைக்குச் சென்ற குட்டிமணி 1983ஆம் ஆண்டு வரை அதாவது 9 ஆண்டுகள் சிறையிலா இருந்தார்?

   நெடுமாறன் எந்தவிதமான கற்பனையில் இந்தக் கதையை இட்டுக்கட்டினார்? இவரிடம் யார் வரலாறு கேட்டது? தானாகத் தனது சிறு மூளைக்கு எட்டியதை எழுதுகிறாரா? அல்லது கோமாளி அரசியலா? வரலாறு யாருக்குத் தெரியப் போகிறது என்ற எண்ணத்தில்தானே இந்தப் புதிய வரலாறு சொல்லும் தொழிலைத் தொடர்கிறார்.

   “பழ நெடுமாறன்” புலிகள் இயக்கத்தின் தமிழ் நாட்டுத் தளபதி என்கிற அளவுக்கு தன்னைத் தானே விளம்பரங்கள் மூலமாக உயர்த்திக் கொண்டவர். அடிக்கடி அறிக்கை விடுவதும் எந்தக் கட்சியாவது ஈழத் தமிழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அந்த இடத்தில் ஆஜராகி (அழைக்காமலேயே) புகைப்படம் எடுத்துப் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். படத்தைப் பார்த்த ஈழத் தமிழர்கள் பழ. நெடுமாறன்தான் தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்துகிறார் என்று நம்பி இவருக்கு அமெரிக்க டாலர்களாக பணம் அனுப்பி வைப்பார்கள்.

   இப்படியாக இவரது வாழ்க்கை ஈழத் தமிழர்களின் பணத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் வேளையில் 2009-க்குப் பின் வரவு குறையத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், விடுதலைப் புலிகள் என்னும் அமைப்புக்கு அதிகாரப் பூர்வமாக உரிமை கோர யாரும் இல்லாததைக் கண்டு மீண்டும் எழுச்சி பெற்ற நெடுமாறன் வாராவாரம் கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார். தினசரிகளிலும், வார இதழ்களிலும் தொடர்ந்து இவருடைய கட்டுரைகளும் அறிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன. இதுவரையில் சில முக்கியமானவர்கள் புலிகளின் பெயரைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தியுள்ளனர். அந்த வகையில் இவரே முதன்மையானவர். வயிற்றுப் பிழைப்புக்காகக் கதை சொல்லுகிறார் என்று கருதி இவருடைய நஞ்சு கலந்த அறிக்கைகளுக்குப் பதில் கொடுக்காமல் விட்டு விட்டோம். பதில் கொடுக்காதபடியால் மீண்டும் மீண்டும் எழுதி அதையே வரலாறு ஆக்கிவிடுவார் போலத் தோன்றுவதால் எங்களது இயக்கத்தினால் இவருடைய கூற்றுகளுக்குப் பதில் கூறவிழைகிறோம்.

   குறிப்பாக, ஈழ விடுதலை பற்றிய வரலாறு பழ, நெடுமாறனுக்குத்தான் தெரியும், அவர்தான் “ஈழத்துப் பல்கலைக்கழகம்” என்று பலரும் கருதும்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்டார் இந்த நபர். தனது தோற்றத்தினாலும் புகைப்படங்களுக்கு கம்பீரமாக நின்று வடிவம் கொடுப்பதனாலும் தமிழக மக்களையும், ஈழத் தமிழர்களையும் திறம்பட ஏமாற்றி வந்துள்ளார். இவருடைய ஏமாற்று வேலையை வெளிப்படுத்த வேண்டியது ஈழ மக்கள் சார்பாக எங்களுடைய கடமையாகிறது.

   பழ. நெடுமாறனாக மாறிய காமாட்சி:

   இவரது இயற் பெயர் “பழனியப்பன் காமாட்சி” இந்த “காமாட்சி” என்னும் பெயரை மாற்றிக் கொண்டு பழ. நெடுமாறனாக அரசியலுக்குள் நுழைந்தார். பெயரைக் கேட்டால் தமிழருக்கு ஓரு பயம் வரவேண்டும் என்கிற நோக்கில் பெயரை மாற்றிக் கொண்டதாக மதுரையில் கூறினர்.

   இவரது குடும்பத் தொழில் ஆண்டுக்கொருமுறை பஞ்சாங்கம் அச்சிட்டு விற்பனை செய்வது. வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில்தான் ஈழத் தமிழரின் விடுதலைக்காகப் போராட வந்த இளைஞர்களின் தொடர்பை எற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, இலங்கையிலிருந்து வருபவர்களை தமிழகத்தில் சில நபர்கள் ஏமாற்றிப் பொருள்கள், பணம் என்று பெற்றுக் கொண்டு அவர்களை மோசம் செய்த சம்பவங்கள் 1970 மற்றும் 1980 களில் வாடிக்கையாக இருந்தன. பழ. காமாட்சிக்கும் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்ட போது இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு உதவிகள் செய்தால் வருவாய் கிடைக்கும் என்று நம்பினார். அவரது கணக்குச் சரியாக இருந்தது. அன்றைய நிலையில் ஈழத்து இளைஞர்களுக்குக் கட்சி, தொழில், வருவாய் இல்லாத நபர் தேவைப் பட்டது. அவர்களது தேவைக்கு இவர் சரியானவராக இருந்தார்.

   காமாட்சியும் (நெடுமாறன்) எதிர்பார்த்த மாதிரியே வருவாய் கொட்டியது. இந்த வருவாய்க்கு நிகர் வேறு ஏதும் இருக்க முடியாது. தமிழகத்து மக்களுக்கு ஈழ விடுதலையின் தூணாகத் தன்னைக் காண்பித்தார். ஆனால் இவருக்குத் தூணாக இருந்தது பணம்தான் என்பது எவருக்கும் தெரியாது. இவரது தோற்றத்தைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்ட பிச்சைக்காரன் போல் தோன்றும். “இவரிடம் பணமா! இருக்கவே வாய்ப்பில்லை” என்று அனைவரும் சொல்வர். பல கோடிகளுக்கு அதிபதி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும். “போராளிகளை குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்கும்படி எம்.ஜி.ஆர் அவர்கள் அழைப்பு விடுத்ததார். அதற்கு முதல்நாள் கலைஞர் போராளிகளை அழைத்து அவர்களுக்குள் பகையை உண்டுபண்ணிவிட்டார்” என்று காமாட்சி நெடுமாறன் ஜூனியர் விகடன் வார இதழில் கூறியுள்ளார்.

   முன்னாள் முதலமைச்சர் எ.ம்.ஜி.ஆர். அவர்கள் ‘ஈழ விடுதலை இயக்கப் போராளிகளை ஒரு போதும் பகிரங்கமாக அழைத்ததில்லை’, அவர் இரகசியமாக அழைத்துப் பண உதவிகள் செய்துள்ளார். கலைஞர் 1984-இல் தனது பிறந்த நாளில் சேர்த்த பணத்தைப் போராளிகளுக்கு வழங்க பகிரங்கமாக அழைத்தார். இதில் ஒன்றுபடவிடாமல் தடுக்கும் நோக்கம் எங்கிருந்து வந்தது? விடுதலை இயக்கங்களுக்கு அவர் சேர்த்த பணத்தைச் சமமாக பிரித்துக் கொடுத்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அப் பணத்தைப் பெற்றுக்கொள்ளச் செல்லவில்லை. இதனால் இயக்கங்கள் பிரிந்து மோதிக்கொண்டனவா? என்ன, பணத்துக்காகவா இயக்கங்கள் போராடப் புறப்பட்டன? இந்த நபர் (காமாட்சி) பணத்திற்காகப் பணிகள் செய்வதால், கலைஞரின் பணத்தினால்தான் இயக்கங்கள் மோதிக்கொண்டன என்று இவராகவே முடிவெடுத்துக்கொண்டார் போலும்!

   எதற்காக இந்த காமாட்சி இப்படிக் கதை கட்டுகிறார்? யாருக்கு உண்மை தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் தானே இந்த வம்புச் செய்தி!

   “திம்பு மாநாட்டில் போராளிகள் ஒன்றுபட்டு வைத்த கோரிக்கையை இந்திய அரசு ஏற்கவில்லை, போராளிகளை மிரட்ட, “ரா” (இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு உளவு நிறுவனம்) அமைப்பு திட்டமிட்டது, “ரா” விரித்த வலையில் முதலில் டெலோ இயக்கமும் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் விழுந்தன. புலிகளுடன் மோதும்படி இந்த இயக்கங்களுக்கு “ரா” அமைப்பு ஆயுதங்களை வழங்கித் தூண்டிவிட்டது. புலிகள் இயக்கத் தளபதி, கேப்டன் லிங்கம் என்பவரை டெலோ இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இதன் விளைவாகத்தான் மோதல் வெடித்தது. சிறிசபாரெத்தினம் கொல்லப்பட்டார்.” காமாட்சி ஜூனியர் விகடன் இதழில் இப்படி எழுதியுள்ளார். ஈழத்தவருக்கு பாடம் புகட்டும் இந்த ‘காமாட்சி” நெடுமாறன் திரித்த கயிறு மிகவும் பலவீனமானது. உண்மையைப் புரட்டி ஜோடித்துள்ளார் காமாட்சி.

   “திம்பு மாநாடு” தோல்விக்கான காரணம்:

   திம்பு மாநாடு 1985 ஜூலை 8 முதல் 13ம் திகதி வரையில் முதல் கட்டமாகவும், 1985 ஆகஸ்ட் 12 முதல் 17ம் திகதி வரையில் இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில் வைத்துச் சிங்கள இராணுவத்தினர் 200 தமிழர்களைப் படுகொலை செய்தனர். இப்பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தமிழர்களைக் கொல்லும் ஜெயவர்த்தனாவின் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று அனைத்துத் தமிழ் விடுதலை இயக்கங்களும் வெளியேறின. இதுதான் நடந்த உண்மை.

   இந்தியா சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடுத்த முயற்சி தோல்வி கண்டதும் இந்திய அதிகாரிகளுக்கும் இயக்கங்களுக்கும் இடையில் மனப்பிணக்கு ஏற்பட்டது. இதனால், இயக்கங்களின் தலைவர்கள் இந்தியா திரும்பினர். டெலோ இயக்கத்தின் பிரதிநிதிகளாகத் திம்புவில் கலந்துகொண்ட திரு.சத்தியேந்திராவும், திரு. சந்திரகாசனும் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

   திம்;புவில் “ரா” வின் வலையில் டெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமும் வீழ்ந்திருந்தால் டெலோ இயக்கப் பிரதிநிதிகளை எதற்காக நாடு கடத்தியது இந்தியா?

   காமாட்சி தொடர்ந்தும் பூச்சுற்றக் கூடாது. ஈழத் தமிழ் இனத்தின் வரலாற்றைத் தனது கோணல் புத்தியால் திரிபு படுத்தக்கூடாது.

   “திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி கண்டதும் டெலோ அமைப்புக்கு ஆயுதங்கள் கொடுத்து புலிகளை அழிக்கச் சொல்லியது “ரா” உளவுத்துறை. இதனைத் தொடர்ந்து புலிகளின் கேப்டன் லிங்கம் என்பவரை டெலோ இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர். இதன் விளைவாகத்தான் இரு தரப்பினரிடையியேயும் மோதல் ஏற்பட்டு சிறிசபாரெத்தினம் கொல்லப்பட்டார்” இப்படி - ஜூனியர் விகடன் இதழில் காமாட்சி நெடுமாறன் கூறியுள்ளார்.

   இந்தியா வழங்கிய ஆயுதங்களால், புலிகள் செய்த படுகொலைகள்!

   திம்புப் பேச்சுவார்த்தை முடிவுற்றது 17-08-1985இல். டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்கள் கொல்லப்பட்டது 06-05-1986 அன்று. அதாவது 9 மாதங்கள் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் நடந்தது என்று காமாட்சி சரித்திரம் சொல்கிறாரா? லிங்கம் என்ற நபர் கொல்லப்பட்டதாக எந்தச் செய்தியும் கிடையாது. இது முழுக்க முழுக்க காமாட்சியின் கட்டுக்கதை!

   இவருடைய கூற்றுப்படியே வைத்துக் கொள்வோம், லிங்கம் என்பவர் கொல்லப்பட்டதற்காக 600 தமிழ் இளைஞர்களையா கொல்வது?

   அப்படியாயின் திரு. அமிர்தலிங்கம் போன்றோரைப் படுகொலை செய்ததற்காக புலிகளில் எத்தனை பேரைக் கொன்றிருக்க வேண்டும்!

   “எந்த இயக்கத்தையும் விடக்கூடாது. அனைவரையும் கொலை செய்ய வேண்டும்” என்பது விடுதலைப் புலிகளின் தலைவரது திட்டம். ஏனைய இயக்கங்கள் இருந்தால்தான் பின்நாளில் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். எனவே தீர்த்துக் கட்டிவிட்டால் புலிகளின் ‘நானே ராஜா நானே மந்திரி’ என்னும் கொள்கைக்கு வெற்றி கிடைத்துவிடும். இப்படியான கொள்கைக்குத் துணை போனவர்களில் நெடுமாறன் என்கிற இந்தக் காமாட்சி முக்கியமானவர்!

   “ரா’ வழங்கிய ஆயுதத்தினால் லிங்கத்தைக் கொன்றார்கள் என்று காமாட்சி சொல்கிறார். டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்களையும் அவரோடு அவருடைய இயக்கத் தோழர்கள் 600 பேரையும் புலியினர் படுகொலை செய்தனர். இவ்வளவு டெலோ போராளிகளையும் புலிகள் படுகொலை செய்தது “இந்தியா வழங்கிய ஆயுதங்களினால்தான்” என்பதை முற்றாக மறைத்துவிட்டார் இந்தப் பொய்யர்! இந்தியா வழங்கிய ஆயுதங்களிலால்தான் சிறிசபாரெத்தினம் அவர்களையும் ஏனைய 600 தமிழ் இளைஞர்களையும் புலிகள் படுகொலை செய்தனர்.

   இந்தியா அனைத்து முக்கிய தமிழ் இயக்கங்களுக்கும் ஆயுதங்கள் வழங்கியது உண்மை! அது எதற்காகவென்றால், தமிழர்கள் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். 1980களில் விடுதலை இயக்கங்களிடம் போதிய ஆயுதங்கள் இருந்ததில்லை. இலங்கை அரசு முப்படைகளையும் பயன்படுத்தி தமிழர்களை அழிப்பதால், தற்காத்துக் கொள்வதற்காகத்தான் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தமிழர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வதற்காக இந்தியா கொடுத்த ஆயுதங்களினால்தான் சகோதர இயக்கங்களை அழித்தார் புலிகளின் தலைவர் பிரபாகரன்!

   யாழ்ப்பாண வீதிகளில் டயர்களைப் போட்டுத் தீயிட்டு, அதனுள் டெலோ இயக்க உறுப்பினர்களை வீசி எறிந்தனர் புலிகள். தீ கொழுந்து விட்டு எரியும் போது வேதனை தாங்காமல் டயரிலிருந்து தப்பிப்பவர்களைத் துப்பாக்கியால் சுட்டு மீண்டும் தீயினுள் போட்டனர். இந்தியா வழங்கிய ஆயுதங்களைச் சகோதர யுத்தத்துக்குத்தான் பயன்படுத்தினர் புலிகள். பலருடைய கைகளைக் கட்டிவிட்டு அவர்களின் கழுத்துகளில் டயரைப் போட்டு எண்ணெய் ஊற்றித் தீயிட்டனர்.

   சிங்கள இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் இது போன்று பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைக் கொன்றனர். 1958, 1977, 1980, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் இனக்கலவரம் என்கிற போர்வையில் கொல்லப்பட்டனர். தமிழ் மக்களையும், தமிழர்களின் சொத்துகளையும் சிங்கள இனத்தவர் தீயிட்டுத்தான் அழித்தனர். சிங்களவர் தமிழர்களை அழித்ததை விட மிகவும் மோசமாகத் தமிழர்களைப் படுகொலை செய்தனர் புலிகள்.

   டெலோ இயக்கத்தினரைப் படுகொலை செய்து அழிப்பதற்கு “ரா” புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கித் தூண்டியது என்று டெலோ இயக்கம் குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி வீண்பழி சுமத்தவில்லை. காரணம்: புலிகளின் தலைவரைப் பற்றி அவர்களுக்கு (சிறிசபாரெத்தினம்) முன்னரே தெரியும். தூண்டுதல் தேவையில்லை; பிரபாகரன் அதிகார வெறி பிடித்தவர் என்பது முன்னரே தெரிந்த ஒன்றுதான். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ஒன்று உண்டு. சிறிசபாரெத்தினம் அவர்கள் கொல்லப்படும் போது அவர் யாழ்ப்பாணத்தில் போர் முனையில் நின்றார்; பிரபாகரன் சென்னை அடையாறு பகுதியில் இருந்தார். உண்மை இப்படி இருக்க டெலோ இயக்கத்தினரை அப்படியே துரோகிகள் என்று புரட்டிக் கதை சொன்னார்கள் புலிகளின் கோயபல்சுகள்(புரட்டுப் பொய்யர்கள்).

   டெலோ இயக்கத்தில் இணைந்துதான் பிரபாகரன் இரண்டு கொள்ளைகளை நடத்தினார். பணத்தில் பாதி கைக்கு வந்ததன் பின்னர் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் பிடிபட்ட பின்னர் இந்தியா வந்து மீண்டும் புலிகள் இயக்கத்தை தொடங்கினார் பிரபாகரன். பணமும், பலமும் வந்து சேர்ந்ததும்தான் தான் இணைந்திருந்த அதே இயக்கத்தை பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி அழிக்கிறார் பிரபாகரன்.

   டெலோ இயக்கத்தினரைப் படுகொலை செய்வதற்கு முன்னர், பிரபாகரன் ஈழத்தில் மைக்கல், அப்பன், சுந்தரம், ஒபரே தேவன் என்று பலரைக் கொன்றுள்ளார். சென்னை பாண்டிபசாரில் வைத்து உமா மகேசுவரன் மற்றும் கண்ணன் என்பவரையும் 1982ல் துப்பாக்கியால் தானே முன்னின்று சுட்டார். இதனால் ஏற்படவிருக்கும் அவமானங்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை. தமிழ்ப் போராளிகள் கடைத் தெருக்களில் சுடுபட்டுக் கொண்டார்கள் என்று சிங்களப் பத்திரிகைகள் கேவலப்படுத்தி எழுதின செய்திகளை. ஓரு விவேகம் உள்ள போர் வீரன் சக போராளியை அந்நிய நாடு ஒன்றில் வைத்து விவரமே தெரியாத பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுடுவானா? அதிலும் குறிதவறி!

   “இராஜீவ் - ஜெயவர்த்தன” ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நடமாடிய புலிகளை ஒழித்துக்கட்ட “ரா” உளவுத்துறை, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி ஏவிவிட்டது. 22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் எடுத்த பதில் நடவடிக்கையின் விளைவாக டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கங்கள் முறியடிக்கப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

   காமாட்சியின் கண்டுபிடிப்பும் கட்டுக் கதையும் மேற்கண்டவாறு ஜூனியர் விகடன் இதழில்; உள்ளது. உண்மையில் காமாட்சியைக் கட்டுக்கதை வல்லுனர் என்று அழைக்க வேண்டும்!

   ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நடமாடினராம் புலிகள்! பாருங்கள் எவ்வளவு யோக்கியமானவர்கள் புலிகள் என்று? இந்தியா சொன்னவுடன் அப்படியே ஆயுதங்களைக் கையளித்துவிட்டனராம். காமாட்சி கண்டுபிடித்துள்ளார். 1987-ஜூலை 29 முதல் 1987 அக்டோபர் 5ஆம் தேதி வரை மொத்தம் 68 நாள்களில் புலிகள் இயக்கத்தின் ஒட்டு மொத்தப் பணியுமே சகோதர இயக்க உறுப்பினர்களை வீடு வீடாகச் சென்று படுகொலை செய்வதாகத்தான் இருந்தது. இவ்விதம் 68 நாள்களில் மொத்தமாக 6000 (ஆறாயிரம்) தமிழ் இளைஞர்களை இவர்கள் படுகொலை செய்தனர். அமைதிப்படை வந்துவிட்டது, இனி அமைதி திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் தத்தமது இல்லங்களில் தமது தாய்தந்தையரைப் பார்க்கச் சென்ற அப்பாவி இளைஞர்களை நயவஞ்சகமாக இரவு வேளையில் வேட்டையாடினர் புலிகள். இந்திய அமைதிப்படையினாலோ, தமிழர் அமைப்புகளினாலோ இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகமான தமிழ் இளைஞர்களை எந்தப் புலி சுட்டுக் கொல்கிறாரோ அந்த நபருக்குப் பதவி உயர்வு வழங்கி மகிழ்ச்சியடைந்தார் பிரபாகரன்.

   22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்று பொய் உரைத்துள்ளார் காமாட்சி நெடுமாறன்! இந்தக் கால கட்டத்தில் 22 புலிகள் எந்த இடத்திலும் பிற இயக்கங்களால் கொல்லப்படவில்லை! காமாட்சி கூச்சமின்றிப் பொய்களை அள்ளி வீசுகிறார்!

   முதலில் டெலோ, பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப்., அதன் பின்னர் பிளாட் ஆகிய இயக்கங்களை அழித்து விட்டதாகவும் அவற்றைத் தடை செய்துவிட்டதாகவும் அறிவித்தனர் புலிகள். 1986 மே மாதம் முதல் 1987 மே மாதம் வரையிலும் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை இவ்விதம் படுகொலை செய்தனர் புலிகள். இதில் ஏறக்குறைய 2000 போராளிகளைக் கொன்றனர் புலி வீரர்கள்!

   இலங்கை அரசு புலிகளது செயலை ஊக்குவித்துப் பிற இயக்கங்களைப் புலிகள் அழிப்பதற்கு உதவிகளும் செய்தது. இந்திய அரசு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் புலிகள் பிற இயக்க உறுப்பினர்களைக் கொன்றார்கள் என்பது ஈழத் தமிழர் அனைவருக்கும் நன்கு தெரிந்ததுதான். இந்தக் காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளது சமூகப் பொறுப்புணர்வு எப்படி இருந்தது என்பதை நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.                                                                                        தொடரும்.......                                               

Aucun commentaire:

Enregistrer un commentaire