mercredi 30 janvier 2013

இரு தீவிரவாத அமைப்புகளிடையே யுத்தம்! 110 பேர் பலி,


பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள திரா பகுதியில் இரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே தொடங்கிய மோதல்கள், இன்று 4-வது நாளாக தொடர்கிறது. இதில், இரு தரப்பை சேர்ந்த 110க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இன்று நடந்த மோதலில் மட்டும், 22 பேர் வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள இந்தப் பகுதியை யார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போட்டியே, மோதல் தொடங்குவதற்கு காரணம்.
தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கம், முதலில் யுத்தத்தை ஆரம்பித்தது. திரா பகுதியில் அமைந்திருந்த அன்சார்-உல்-இஸ்லாம் என்ற இயக்கத்தின் முகாமை அதிரடியாக தாக்கிய தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தினர், அந்த முகாமில் இருந்த சிலரை சுட்டுக் கொன்றுவிட்டு, முகாமை கைப்பற்றினர். இதையடுத்து அன்சார்-உல்-இஸ்லாம் இயக்கத்தின் மற்றொரு முகாமில் இருந்தவர்கள், படையெடுத்து வந்து தாக்கினர்.
கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து மாறிமாறி நடக்கும் இந்த இந்த மோதல்களை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்து உள்ளன.  இந்த மோதலில் மற்றொரு தீவிரவாத அமைப்பான லஸ்கர்-இ-இஸ்லாம் பங்கு பெறவில்லை என தெரிவித்துள்ளது.
முழுமையாக தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதிக்கு பாகிஸ்தான் ராணுவம் வருவதில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire