mercredi 16 janvier 2013

அமெரிக்கா எச்சரிக்கை சிறிலங்காவுக்கு

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்டது குறித்து மீண்டும் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் சிறிலங்காவின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது. 

வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், 

"சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். 

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாகவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். 

இது சிறிலங்காவில் அதிகாரப் பிரிப்பு சம்பந்தமான தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஆராக்கியமான ஜனநாயகத்துக்கு இந்த அதிகாரப்பிரிப்பு அடிப்படையானது. 

இந்தக் நம்பிக்கையில்லாத் தீர்மான நடைமுறைகள் குறித்து சிறிலங்கா அரசுக்கு நாம் திரும்பத் திரும்ப எமது கவலையை வெளிப்படுத்தி வந்துள்ளோம். 

நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய நடவடிக்கையும் சிறிலங்காவின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனைப் பாதிக்கும் என்ற எமது கருத்தை தெளிவுபடுத்தியுள்ளோம். 

நாங்கள் மட்டும் தனியாக கவலை கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன். 

பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா போன்றனவும், இந்த நடைமுறைகள் தொடர்பாக தமது ஆழமான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.” என்று குறிப்பிட்டார். 

இந்த நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது என்று நம்புகிறீர்களா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட், 

“சிறிலங்காவின் ஜனநாயகம், ஆரோக்கியம் குறித்து தீவிரமான கேள்விகள் உள்ளன என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் அதற்காக உண்மையாகச் செயற்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire