samedi 26 janvier 2013

வெள்ளம். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் மூழ்கின வீடுகளுக்குள் நீர் புகுந்தது; மக்கள், நிர்க்கதி! போக்குவரத்து ஸ்தம்பிதம்!



அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புதன் இரவு முதல் பெய்து வரும் அடைமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேற்படி இரு மாவட்டங்களும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் அறுவடைக்குத் தயாராகவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.
அம்பாறை மாவட்டம்
இம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் பல இடங்களில் இடம் பெயர்ந்துள்ளதாகவும் இன்னும் சில பிரதேசங்களில் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரவு வேளைகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.அதிகமான இடங்களில் உள்ளக வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்போதிகளினூடாக நீர் பெருக்கெடுத்துச் செல்வதனால் சில இடங்களில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடிகான்களில் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன் பல இடங்களில் நீர் வடிந்தோட முடியாமல் வடிகான்கள் காணப்படுகின்றன.
நெல் வயல்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளதுடன் அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதுடன் அவற்றின் வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததனால் மீனவர் குடும் பங்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அன்றாட கூலித் தொழிலாளர்களும் கால்நடை பண்ணையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது தடவையாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மனியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் 229.2 மில்லி மீற்றர் மழையும் அம்பாறையில் 307.3 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதி வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த வீதியில் பிள்ளையாரடி சித்தாண்டி ஆகிய இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மண்டூர் – வெல்லாவெளி வீதி, மண்டூர் – றாணமடு வீதி, மண்டூர் – வீரமுனை வீதி, மண்டூர் – கல்முனை வீதி, பட்டிருப்பு – பாலையடி வட்டை வீதி, பாலையடி வட்டை – சின்னவத்தை வீதி, மாவடி கடை வீதி, மயிலவட்ட வான் வீதி, மண்டூர் – சவளக்கடை வீதி என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மண்டூர் – கல்முனை, மண்டூர் – களுவாஞ்சிகுடி, களுவாஞ்சிகுடி பாலையடி வட்டை ஆகிய பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பட்டிருப்பு – குறுமன்வெளி வீதியில் எருவில் பகுதியில் வெள்ளம் பாய்கிறது.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேதத்துச்சேனை கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வேதத்துச்சேனை பிரதான வீதியில் வெள்ளம் பாய்கிறது. வேதத்துச்சேனை மக்கள் அங்குள்ள விகாரைத்திடலில் பாதுகாப்பாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு படகுகளில் சென்று சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. பட்டாபுரம் எருவில் மனமூர் நாகமுனை பழந்தோட்டம் இருதயபுரம் ஆரையம்பதி – செல்வநகர், மயலம்பாவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, கிரான், பலாச்சோலை முதலிய பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
பராக்கிரம சமுத்திரம் மின்னேரி கொடுல்ல ஆகிய பாரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.உன்னிச்சை உறுகாமம் நவகிரி புழுகு நாவி கடுக்காமுனை ஆகிய குளங்களும் நிரம்பி வழிவதால் மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாவிக்கரையோரக் கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக வெல்லாவெளிப் பகுதி வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளது. வெல்லாவெளிப் பிரிவிலுள்ள வேற்றுச்சேனைக் கிராமம் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு 112 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். நேற்று பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்போடு வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் கே. வில்வரெட்ணம் உணவுப் பொருட்களை விசேட படகுகளில் கொண்டு சென்றார்.
காலையில் பாண்கள் கொண்டு செல்லப்பட்டன. பிரதேச சபைத் தவிசாளர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் உறுப்பினர்களும் படகுகளில் அங்கு சென்றனர். த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர், பி. அரியநேத்திரன் அமைச்சர் தயாரத்னாவின் இணைப்பாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் அங்கு சென்றனர்.
வள்ளியம்மை மரணம்
இதேவேளை, வெல்லாவெளியைச் சேர்ந்த மாலையர் கட்டு வள்ளியம்மை (வயது 49) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இன்னும் அவரது சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. நவகிரி ஆற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகிறது.பயணிகள் வான் நீரில் சிக்கியது
மண்டூர் வெல்லாவெளி பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை அந்த வீதியால் வந்த பயணிகள் வான் ஒன்று கறுத்தப்பாலமருகே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. வானில் பயணித்த 24 பேரும் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டனர். எனினும் வான் இந்த இடத்திலே வெள்ளத்துள் கிடக்கிறது. அதனை வெள்ளம் மேலும் இழுத்துச் செல்லாமல் தடுப்பதற்காக கயிறொன்றினால் மரத்தில் கட்டப்பட்டுள்ளது.
பொத்துவில் பகுதியில்
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25.01.2013) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலத்துக்குள் 70.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.தொடர்ந்து பெய்த கனத்த மழையினால் சம்மாந்துறை மாவடிப்பள்ளி தாம்போதிக்கு மேலால் 3 அடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால் பஸ் போக்குவரத்து சேவை கல்முனையிலிருந்து அம்பாறைக்கு இடம்பெறவில்லை என கல்முனை பஸ் டிப்போவினர் தெரிவித்தனர். தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், இறக்காமம், நாவிதன்வெளி உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் அறுவடைக்கு தயாராகவிருந்த நெல் வயல்கள், தற்போது கதிர்பறிந்து முடிந்துள்ள நெல் வயல்கள் எல்லாம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தாழ் நிலங்களில் உள்ள குடியிருப்பாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாண்டிருப்பில்
செல்லப்பர் தோட்டம், சவக்காலை வீதி, கற்பகம் வீதி மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை மாணிக்கப்பிள்ளையார் வீட்டுத்திட்ட மக்கள் ஆகியோர் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் மீண்டும் வெள்ள அபாயத்திற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே பெய்த மழை நீர் வடிந்தோட முடியாத நிலையில் மக்கள் குடியிருப்பு மனைகளில் தேங்கி நிற்கும் இவ்வேளையில் கடந்த புதன் கிழமை பெய்ய ஆரம்பித்துள்ள மழை நீரும் வீடுகளில் தேங்கி நிற்கின்றது. இதனால் அம்மக்கள் சுகாதார சீர்கேட்டிற்கும் முகம்கொடுத்துள்ளனர்.
இதேவேளை பாண்டிருப்பில் உள் வீதிகள் பல சேதமடைந்து காணப்படுவதினால் அவ்வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு புதிதாக போடப்பட்ட கொங்கிறீட் வீதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது. அத்துடன் பாண்டிருப்பு பிள்ளையார் கோயில் வீதி, திரெளபதையம்மன் ஆலய வீதி என்பனவற்றின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாதங்கள் பல கடந்து விட்ட போதிலும் இதுவரை அப்பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதுள்ளது. இதனாலும் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கடும் மழை தொடருமாக இருந்தால் பாண்டிருப்பில் தாழ் நிலப் பகுதிகள் உட்பட ஏனைய இடங்களும் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை
சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், காரைதீவு, ஒலுவில், பாலமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில், தம்பிலுவில், மருதமுனை, நற்பிட்டிமுனை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ் நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மேற்படி பிரதேசங்களிலுள்ள வயற் காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன. கல்முனை, அம்பாறை வீதியில் உள்ள மாவடிப்பள்ளி தாம்போதி (பாலம்) அண்டிய பிரதேசத்தில் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால் இவ்வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேவேளை, கல்முனைக்கான கிட்டங்கி வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மருதமுனை
பல குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு பல வீதிகள் பயணிக்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளது.மருதமுனையில் சமுர்த்தி வீதி, பனையடி வீதி உள்ளிட்ட பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதுடன் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.மரக்கறிகள் கிலோ 300 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
அக்கரைப்பற்று
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை முதலிய பிரதேசங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடும் முஸ்லிம் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை அடைந்தனர்.மீண்டும் மழை பெய்வதனால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக அறுவடைக்குத் தயாரான விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். அக்கரைப்பற்றிலுள்ள அனேகமான வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து செய்வதில் பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உட்படுகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பாரிய வெள்ளம் ஏற்படுமானால் அறுவடைக்குத் தயாராகவுள்ள வேளாண்மை முற்றாகப் பாதிக்கப்படலாம் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire