jeudi 31 janvier 2013

வணக்கஸ்தலங்களிலுள்ள உண்டியல்களில் காசு போட்டாலும் கைது செய்யவேண்டிய நிலைமை ஏற்படலாம்

நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தங்களுக்கு பஞ்சமே இல்லை. பயங்கரவாதிகளுக்கு நிதித்திரட்டுவதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன. வணக்கஸ்தலங்களிலுள்ள உண்டியல்களில் காசு போட்டாலும் கைது செய்யவேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று ஐக்கிய சோசலிஸ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

'அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று  புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

அமெரிக்க பிரதிநிதிகளை எதிர்க்கட்சிகள் அழைக்கவில்லை அரசாங்கமே விஸாவிற்கான அனுமதியை கொடுத்தது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பாடம் நடத்தவேண்டும்.

இந்த அரசாங்கம் இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும்.

அவசரகாலச்சட்டம் அமுலில் இருந்தகாலத்தில் செய்யமுடியாததை சாதாரண சட்டம் அமுலில் இருக்கின்ற காலத்தில் செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

48 மணிநேரம் தடுத்துவைக்கலாம் என்பது யுத்தக்காலத்தைவிடவும் அபாயகரமானது. அரசியலமைப்பின் மீது எமக்கு நம்பிக்கையில்லை அதை கிழித்து வீசிவிட்டு புதிய அரசியல் சட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும். 

கோவில்கள், விஹாரைகள், பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காசு போடுகின்றவர்களையும் இனிமேல் கைது செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire