mercredi 28 novembre 2012

ஹக்கீம்.13ஆவது திருத்தத்தை நீக்க விடமாட்டோம்


13ஆவது திருத்த சட்டத்தை நீக்குவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

"ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்கின்றனர். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது" என அவர் குறிப்பிட்டார்.

இவர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான கட்சித் தலைவர்கள் ஆளும் அரசாங்கத்தினுள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கைகோர்த்து வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இஸ்லாமிய புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட முஹர்ரம் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற காலி அலிப் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச ஆகியோர் கூறிவருவதைப் போல அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்ள போவதுமில்லையும் ஆதரவாக கை உயர்த்த போவதுமில்லை.  

அதிகாரம் பண்முகப்படுத்தப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கத்திற்கும் பகிர்வுக்கும் ஊடாக கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம்  மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடு நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு பயனளிக்கக் கூடியவாறு 13ஆவது திருத்தத்திலே உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் அது இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற காரணத்தினால் வேறு விமர்சன பார்வை இருந்து வருகின்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்திற்கு உள்ளும் புறமும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. 

அதற்கான போராட்டத்தில் நாம் அரச தரப்பிலும் கட்சித் தலைவர்கள் சிலருடன் ஓர் உடன்பாட்டுடன் உள்ளோம்.  13ஆவது திருத்தம் மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் சிலரிடம் காணப்படுகின்றது. 

சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றவர்கள் மட்டும் தான் இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் அல்லர். அவர்களின் போக்கிற்கு மாற்றமான நிலைப்பாட்டை உடைய என்னை போன்ற  இன்னும் பல கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் அரசாங்கத்துக்குள்ளே அவ்வாறான ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

இதற்கு முன்னர் சுமார் 850 மில்லியன் ரூபா செலவில் காலியில் நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமையவுள்ள இடத்தையும் நீதியமைச்சர் ஹக்கீம், பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோருடன்  சென்று பார்வையிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire