mercredi 14 novembre 2012

வெ‌ற்‌றி‌க்கு வெகுதூர‌ம் போக வே‌ண்டு‌ம் - கருணாநிதி

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌‌‌ள் ‌பிர‌ச்சனை‌யி‌ல் வெற்றியின் உச்சத்திற்கு செல்ல நாம் வெகுதூரம் போக வேண்டியது உள்ளது எ‌ன்று‌ம் இத‌ற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை எ‌ன்று‌ம் ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர். 

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும் வழங்கி விட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோருக்கு டெசோ அமைப்பின் சார்பில் வரவேற்பு-பாராட்டு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடந்தது. 

கூட்டத்திற்கு டெசோ இயக்கத்தின் தலைவரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கி பேசுகை‌யி‌ல், இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு ஐ.நா. மன்றத்தில் உள்ளவர்களிடமும், மனித உரிமை கழகத்தினரிடமும் மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் மனு கொடுத்து விட்டு வெற்றிகரமாக பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர். அவர்கள் முழு வெற்றி பெற்றிருப்பதாக நான் சொல்லவில்லை. 

அவர்களுடைய பயணத்தை பொறுத்தவரையில் வெகுதூரம் செல்ல வேண்டியது உள்ளது. அந்த வெற்றியின் உச்சத்திற்கு செல்ல நாம் வெகுதூரம் போக வேண்டியது உள்ளது. இதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. 

பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கை தமிழர்களை சுதந்திரமாக, சுயமரியாதையோடு வாழ வைக்க முடியும். அந்த வழியை பெறுவதற்கு எடுக்கின்ற முடிவுகளை நிறைவேற்ற எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு அழுத்தம் கொடுக்க நானும் சரி, தி.மு.க.வும் சரி, இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள டெசோ இயக்க தலைவர்களும் தயாராக இருக்கிறோம். இந்த டெசோ இயக்கத்தை யாரும் பிளவுபடுத்த நினைத்தால் அது நடக்காது. 

இலங்கை தமிழர் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்ற நிலைக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை யாரும் மறந்து விட முடியாது. பொது வாக்கெடுப்பை பயன்படுத்தி ஈழ தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாம் ஐ.நா. மன்றத்தை தயார்படுத்த வேண்டும். அப்படி தயார் படுத்தப்படுவதற்கு நாம் கொடுக்கிற அழுத்தம் மட்டும் போதாது. இந்தியாவே தருகின்ற அழுத்தமாக அமைய வேண்டும். இதில் இந்திய அரசு உறுதுணையாக இருந்தால்தான், நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும் எ‌ன்று கருணாநிதி கூ‌றினா‌ர். 

விழாவில் தி.மு.க. பொருளார் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலளார் பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன், டி.ஆர்.பாலு எம்.பி. உள்பட பலர் பேசினார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire