vendredi 9 novembre 2012

காட்டுக் குரங்கின் தாக்குதலால் 40 க்கு மேற்பட்டவர்கள் காயம்! மட்டு. வாழைச்சேனையில் சம்பவம்!


மட்டக்களப்பு, வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் காட்டுக் குரங்கு ஒன்றின் தாக்குதலால் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவருவவது தொடர் கதையாகவுள்ளதனால் அப்பகுதி பொதுமக்கள் பலர் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.
 
இக் குரங்கானது வாழைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள கண்ணாக்காட்டில் வசித்து வருகின்றது.
அவ்வழியால் நாசிவன்தீவு கிராமத்திற்கு செல்லும் பொது மக்கள், அருகிலுள்ள கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், மீனவர்கள், பாதசாரிகள், ஆசிரியர்கள், மற்றும் கிராமத்தவர்கள் என பலரையும் பாராபட்சமின்றி கடித்தும், பிறாண்டியும், கன்னத்தில் அறைந்தும் துன்பம் விளைவித்து வருகின்றது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் கோறளைப்பற்று தவிசாளர், வாழைச்சேனை பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரிடம் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் கையொப்பம் இட்டு மகஜர் ஒன்றை அனுப்பி தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இவ்வாறான சம்பவம் நடைபெற்றிருந்தது. ஆற்றங்கரைக்கு முன் உள்ள பிரத்தியேக வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களை கல்வி கற்க விடாமல் அவர்கள் மேல் பாய்ந்து அவர்களின் கல்வியை சீர்குலைக்கின்றது.
பகல், இரவு வேலைகளில் வீதிகளிலும், பொதுமக்கள் வீடுகளில் சென்று அட்டகாசம் செய்கின்றது. இரவு வேலைகளில் கூட மக்கள் வெளியில் வர அச்சமடைகின்றனர்.
இவ்வாறான நிலை நீடிக்குமானால் வைத்தியசாலையில் குரங்குக் கடியில் அனுமதிக்கப்படும் வீதம் அதிகரிக்கும், பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதம், தொழிலுக்கு செல்பவர்கள் வீதம் குறைந்து செல்லும் எனவே இக்குரங்கின் தொல்லையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உடனடித் தீர்வைப் பெற்றுத் தருமாறு இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire