vendredi 23 novembre 2012

தலிபான் கசாப் உடலைத் தர வேண்டும், இல்லாவிட்டால் இந்தியர்களைக் கொல்வோம்


பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களையும், இந்திய நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரிவு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் நேற்று மும்பையில் தூக்கிலிடப்பட்டான். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக அந்த அமைப்பு எச்சரிக்கையும், மிரட்டலும் விடுத்துள்ளது.

இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இசானுல்லா இசான் என்பவர் தொலைபேசி மூலம் மீடியா நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், அஜ்மல் கசாப்பைக் கொன்றதற்கு நாங்கள் இந்தியர்களைப் பழிவாங்குவோம். இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

உடனடியாக கசாப்பின் உடலை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும். எங்களிடமோ அல்லது கசாப்பின் குடும்பத்தினரிடமோ அதைத் தர வேண்டும். இல்லாவிட்டால் இந்தியர்களை நாங்கள் சிறை பிடித்து கொல்வோம். அவர்களது உடல்களை திருப்பி அனுப்ப மாட்டோம்.

உலகின் எந்த மூலையிலும் இந்தியர்களைக் குறி வைத்து நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்றார் அவர்.

அல் கொய்தா அமைப்பின் நெருங்கிய தீவிரவாத அமைப்பாக பாகிஸ்தான் தலிபான் இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இந்த அமைப்பு விளங்குகிறது. பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணம். இருப்பினும் இதுவரை பாகிஸ்தானைத் தாண்டி அவர்கள் எந்தத் தாக்குதலிலும் ஈடுபட்டதில்லை.

தற்போது இந்த தீவிரவாத அமைப்பு இந்தியர்களையும், இந்திய நிலைகளையும் குறி வைத்துத் தாக்கப் போவதாக மிரட்டியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire