dimanche 11 novembre 2012

பரிதி பாரிஸில் சுடப்பட்ட பின்னணி: எதையும் தாங்கும் இதயம் உள்ளதா?

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி  சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சில மீடியாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா செய்திகளை பார்த்து வியந்திருப்பார்கள்.  (வியாழக்கிழமை) இரவு பாரிசில் நடைபெற்ற சம்பவம் இது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அலுவலகத்தைவிட்டு பரிதி வெளிவந்தபோது, இரவு ஆகியிருந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து அந்தப் பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் இருவர் காத்திருந்தார்கள். பரிதி வெளியே வந்ததும், ஸ்கூட்டரில் இருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டார்கள். அவர்களது முகங்களை மூடும் வகையிலான ஹெல்மெட் அது. ஸ்கூட்டரை ஸ்டாட் செய்து பரிதி இருந்த இடத்தை நோக்கி சென்றார்கள். துப்பாக்கியால் ஒரு தடவை சுட்டார்கள். அது பரிதியில் படவில்லை.
இதையடுத்து தனது உயிரைக் காப்பாற்ற வீதியில் ஓடத் தொடங்கினார் பரிதி. ஆனால், தப்பியோடும் அவரது முயற்சி பலிக்கவில்லை. ஓட ஓட மொத்தம் 4 தடவைகள் சுடப்பட்டு, கீழே விழுந்து, அந்த இடத்தில் உயிரை விட்டார், அல்லது, வீர மரணம் அடைந்தார். (விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்)
அவரைச் சுட்டவர்கள், ஸ்கூட்டரில் அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தனர்.
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம், நான்கு பிரிவுகளாக செயல்படுகிறது. இதில் இரு பிரிவுகள் பெரியவை, மற்றும் பலம் வாய்ந்தவை. அவற்றில் ஒன்று நார்வேயில் உள்ள நெடியவன் தலைமையிலான பிரிவு. கொல்லப்பட்ட தளபதி பரிதி, அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்.
விடுதலைப் புலிகள் நெடியவன் அணி, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் அணி. ஒருகாலத்தில் புலிகளின் ஊடகங்கள் என அறியப்பட்டவையும், இவர்களிடம்தான் உள்ளது. அதுதான், அவர்களது பலம்.
அந்த அணியின் அளவுக்கு தற்போது வளர்ந்துவிட்ட மற்றைய அணி, விநாயகம் தலைமையிலான அணி.
இதன் தலைவர் விநாயகம், புலிகளின் உளவுப் பிரிவில் தளபதியாக இருந்தவர். தற்போது, பிரான்சிலும், ஜெர்மனியிலும் மாறிமாறி இருந்து வருகிறார். இந்த அணிக்கு, களத்தில் யுத்தம் புரிந்துவிட்டு, தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் போராளிகளின் ஆதரவு உண்டு.
வெளிநாடுகளில் உள்ள கணிசமான புலி ஆதரவாளர்களும் தற்போது இவர்கள் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். கீழேயுள்ள போட்டோக்கள், பரிதி சுடப்பட்டபின், அந்த இடத்தில் எடுக்கப்பட்டவை. பார்த்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.
விநாயகம் அணியின் பலம், களத்தில் யுத்தம் புரிந்தவர்கள், வெளிநாடுகளில் பண முறைகேடுகள் எதிலும் இதுவரை பெரிதாக சிக்காதவர்கள், பழைய செயல்பாட்டாளர்கள் (நெடியவன் அணி) செய்த பண முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்கள் என்ற பெயர். இந்த அணியின் பலவீனம், மீடியா பலம் கிடையாது.
விடுதலைப்புலி ஆதரவாளர்களை வாசகர்களாக கொண்டுள்ள பெரும்பாலான மீடியாக்கள் நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விநாயகம் குரூப்பின் நடவடிக்கைகள் மீடியாக்களில் துரோகச் செயல் என வெளியாகும்.
அத்துடன், தமிழக அரசியல்வாதிகளுக்கான மாதாந்த பண வழங்கல்களை கொடுப்பது, சொத்துக்களை வைத்திருக்கும் நெடியவன் குரூப் என்பதால், விநாயகம் குரூப்புக்கு அந்த பப்ளிசிட்டியும் இல்லை.
சமீபத்தில், இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்கள், நெடியவன் குரூப். அந்த எதிர்ப்புக்கு மீடியாக்களில் கிடைத்த அதீத முக்கியத்துவத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். அதுதான், நெடியவன் குரூப்பின் பலம். இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள்சுற்றி வளைத்து தூரத்து சொந்தமாகவிநாயகம் குரூப்.
இப்போது உங்களுக்கு பின்னணி புரிந்திருக்கும்.
இனி தளபதி பரிதியின் வீர மரணத்துக்கு வருவோம். பாரீஸில் உள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் (கடைகள், பில்டிங்குகள், வீடுகள், மற்றும் சில பண்ணைகள்) நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்ற அமைப்பின் கீழ் உள்ளது.
இந்த அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளர், தற்போது கொல்லப்பட்டுள்ள பரிதி.
விநாயகம் குரூப் எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்பது, ஈழ விடுதலை போராட்டத்துக்காக மக்கள் கொடுத்த பணம். அதை நெடியவன் குழு மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும் (விநாயகம் குரூப்) அதில் பங்கு உள்ளது என்பது.
இந்த பணம் பற்றி கேள்வி கேட்க இப்போது யாரும் உயிருடன் இல்லாத நிலையில், நெடியவன் குரூப் எதற்காக அதில் மற்றைய அணிக்கு பங்கு கொடுக்க வேண்டும்? எனவே அவர்கள் பங்கு தர மறுக்கிறார்கள். இதுதான்
, தகராறு.
கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒன்று, இந்த சொத்து பிரிக்கும் விவகாரம். மற்றையது, இம்மாத இறுதியில் வரப்போகும் மாவீரர் தினத்தை யார் நடத்துவது என்ற விவகாரம்.
பிரான்ஸில் உள்ள சொத்தில் கணிசமான பங்கை கேட்டது விநாயகம் அணி. அத்துடன், பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை தமக்கு கொடுக்கும்படியும், அந்த டீலின் மறுபகுதியாக, பிரிட்டனில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வை நெடியவன் குரூப் நடத்திக் கொள்ளலாம் எனவும் ஒரு பாக்கேஜூடன் பேசியது விநாயகம் அணி.
லண்டன் மாவீரர் தின நிகழ்ச்சியில், பாரிஸைவிட லாபம் அதிகம் கிடைக்கும் என்பது ஒன்றும் ரகசியம் இல்லை.
நெடியவன் அணியின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தளபதி பரிதி, இந்த இரண்டையுமே மறுத்துவிட்டார். உங்களால் செய்ய முடிந்ததை, செய்து கொள்ளுங்கள்என்று சொன்னதாக கேள்வி. விநாயகம் குரூப்பும் புறப்பட்டு சென்றுவிட்டது. பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாடுகளை பரிதியே முன்னின்று செய்து கொண்டிருந்தார்.
சுருக்கமாக சொன்னால், விநாயகம் அணி, பொட்டம்மானின் ஆட்கள். யுத்தத்தின்போது களத்தில் நின்றவர்கள்.
நெடியவன் அணி, காஸ்ட்ரோவின் ஆட்கள்.  வெளிநாடுகளில் உள்ள ஓய்வு பெற்ற போராளிகள் மற்றும், வீடியோவில் யுத்தம் பார்த்த வெளிநாட்டுப் புலிகள்.  இவர்களிடம் சொத்து உண்டு.  அவர்களிடம் துடிதுடிப்பு உண்டு.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்த இரண்டாவது நாள் இரவு, பாரிஸில், இந்த அசம்பாவிதம் நடந்தது.
என்ன  அசம்பாவிதம்?
சிங்கள ஏகாதிபத்திய அரசின் எல்லை கடந்த உளவுத்துறையைச் சேர்ந்த கயவர்களும், அவர்களது கைக்கூலி அடிவருடி பாஸிஸ்ட்களும் பாரிஸ்வரை வந்து தாக்குதல் நடத்தியதில், களப்பலியாகி, வீரமரணமடைந்தார் தளபதி கர்னல் பரிதி என்று வைத்துக் கொள்வோமேயாருக்கும் மனவருத்தம் ஏற்படாமல்.

Aucun commentaire:

Enregistrer un commentaire