mercredi 28 novembre 2012

புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என்றது அமெரிக்கா !


தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. புலிகளின் சொத்து விபரங்கள் பற்றி தகவல் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினருக்கும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இலங்கை நிதிப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டி.கே. விஜேசூரிய மற்றும் சிரேஸ்ட துணைப் பணிப்பாளர் சிசிர ரணசிங்க ஆகியோருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது புலிகளின் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஒப்புக் கொண்டார் என விக்கிலீக்ஸ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதனிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் உலக நாடுகளின் நிதிப் புலனாய்வுப் பிரிவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி புலிகளின் சொத்து விபரங்களை பட்டியலிட்டு, அவற்றை முடக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire