dimanche 25 novembre 2012

பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ள மகிந்த குடும்பத்தின் ஆதிக்கம்


பொருளாதாரத் துறையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக சிறிலங்கா தீவில் தனியார் முதலீடு என்பது போதியளவில் இடம்பெறவில்லை என்று Reuters ஊடகத்துக்காக Frank Jack Daniel எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த ஆய்வை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி
கொழும்பு கடற்கரையோரங்களில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் தொடக்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் புதிய உந்துருளிகள் மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் வரையான பல்வேறு புதிய உற்பத்திப் பொருளிகளின் பயன்பாடு, சிறிலங்கா அறிவித்தது போன்று ஆசியாவின் தற்போதைய முன்னணிச் சந்தையாக அது மாறிவருவதைக் காண்பிக்கின்றது.
ஆனால் சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட இங்கே தனியார் முதலீடுகள் போதியளவில் மேற்கொள்ளப்படவில்லை.
பொருளாதாரத் துறையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைக்கொண்டு வரும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக சிறிலங்காத் தீவில்தனியார் முதலீடு என்பது போதியளவில் காணப்படவில்லை.
2009ல் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து சிறிலங்காவின் வெளிநாட்டுச் சந்தை முதலீடானது 17 சதவீத வளர்ச்சியடைந்துள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்தளவு வளர்ச்சியை எட்டவில்லை. கடந்த ஆண்டில் சிறிலங்காவிற்கு கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீடானது ஒரு பில்லியன் டொலர் என அந்நாட்டுஅரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், இது அவ்வளவு போதுமானதல்ல என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சிறிலங்காவிற்கு கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீடானது 300 மில்லியன் டொலர் எனவும் 2005லிருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது மிகக் குறைவானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் தொடர்பான நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு சாத்தியப்பாடான காரணங்கள் உள்ளன. அதாவதுசிறிலங்காத் தீவில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் இடையில் உண்மையான மீளிணக்கப்பாட்டைக் கொண்டு வருவதில்சிறிலங்கா அதிபர் பின்னிற்பதே பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் பிரதானமானது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முக்கிய அமைச்சுப் பதவிகளையும், திணைக்களங்களையும் சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரர்களும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கலாக 70 சதவீதத்தை ராஜபக்ச சகோதரர்களால் ஆளப்படும் அமைச்சுக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபரின் மூத்த மகன் தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்பட்டநாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ள தற்போதைய நாடாளுமன்றின் சபாநாயகராக அதிபரின் மூத்த சகோதரன் பதவி வகிக்கிறார்.
“சிறிலங்காவின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்களானது மிகச் சிலரின்கட்டுப்பாட்டில் காணப்படுகிறது’ என சிறிலங்காவின் பிரதான அரசியற்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார விவகார பேச்சாளர் கர்சா டீ சில்வா தெரிவித்துள்ளார்.
‘யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளான போதிலும், சில பெரிய விடுதிகள் தவிர வேறெந்த பயனுள்ள முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை’ என கர்சா டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அமெரிக்கா தொடக்கம் இந்தியா வரை எந்தவொரு நாட்டிலும் குடும்ப அரசியல் காணப்படுகிறது. இதேபோன்று நானும் எனது உறவினர்களும் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றோம். இது குடும்பஅரசியலாகக் காணப்படுகின்ற போதிலும், மக்கள் எங்களை விரும்பி தேர்வுசெய்துள்ளனர்’ என ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரான சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேர்காணல் ஒன்றில் இதனைச்சுட்டிக்காட்டியுள்ளார்.
‘மற்றைய நாடுகளில் ஆட்சியிலுள்ளவர்கள் தாமாகவே தீர்மானத்தை எடுத்து அதனை அமுல்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் உடனடியாக வெற்றியைப் பெறுகின்றனர்.
ஆனால் எமது நாட்டைப் பொறுத்தளவில் தீர்மானங்கள் எடுப்பதானது மத்தியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீர்மானம் இயற்றுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன’ எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வர்த்தகத் துறையில் சிறிலங்கா அதிபரும் அவரது குடும்பத்தவர்களும் அதிக செல்வாக்கையும் அதிகாரத்தையும் கொண்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அமைச்சுக்களில் பெரும்பாலானவற்றை ராஜபக்ச குடும்பத்தவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். இதுவே நாம் தற்போதுஎதிர்நோக்கும் பிரச்சினையாகும்’ என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெற்றி குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது தொடர்பில் முன்வைக்கப்படும் விவாதங்கள் சரியோ அல்லது பிழையோ என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அப்பால், சிறிலங்கா அதிபர் தனது நாட்டை பொருளாதாரத் துறையில் முன்னேற்றி ஆண்டுதோறும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளார்.
ஆனால் கடன் வழங்குனர்கள் மற்றும் தனது நட்பு நாடான சீனா போன்றவற்றிடமிருந்து பெருமளவான கடன்களை சிறிலங்கா அதிபர் பெற்றுக் கொள்கிறார். இதுவே தற்போதைய நேரடி வெளிநாட்டு முதலீடாக காணப்படுகிறது. ஆனால் இது நீண்டகால அடிப்படையில் நிலைத்து நிற்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியல்ல என பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறிலங்கா அதிபரால் முன்னெடுக்கப்படும் துரித கட்டுமான அபிவிருத்தியானது, ஏனைய யுத்தத்தின் பின் மீண்டெழும் நாடுகளை விட சிறிலங்கா அபிவிருத்தியடைவதைக் காண்பிக்கின்ற போதிலும், உள்நாட்டில் இதன் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே உள்ளன.
யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சிறிலங்காவில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் வெளிவந்துள்ள எதிர்மறை அறிக்கைகளே நாட்டில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை குறிப்பாக மேற்குலக நாடுகள் முதலீடுகளை மேற்கொள்ளாது தடுப்பதற்கான பிரதான காரணமாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
‘ஆசிய முதலீட்டாளர்கள் சிறிலங்காவில் நிலவும் உண்மையான சூழலை அறிந்து முதலீடு செய்கிறார்கள். அதாவது இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் சீன முதலீட்டாளர்கள் சிறிலங்காவில் பெருமளவில் முதலீடு செய்கின்றனர்’ எனவும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டுச் சூழலானது உறுதித்தன்மை வாய்ந்ததாகக் காணப்படும் போதே முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். இதய சுத்தியுடன் உருவாக்கப்படும் சமாதானத்தின் மூலமே இது சாத்தியப்படும். அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வங்காட்டவில்லை’ என டீ சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் மற்றும் பொதுத்துறைகளின் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கமானது குழப்பத்தை விளைவித்து நாட்டில் முதலாளித்துவத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதையே தற்போதைய அறிகுறிகள் காண்பிப்பதாக Pathfinder Foundation என்ற பொருளியல் ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 30 சதவீதமாகக் காணப்படுவதுடன், சிறிலங்கா அரசாங்கத்தின் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேலும் 3 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக இந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குனரான லக்ஸ்மன் சிறிவர்த்தனே தெரிவித்துள்ளார்.
‘பொருளாதார நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு மற்றும் தனியார், பொதுத்துறையினரின் பங்களிப்பு தொடர்பில் தெளிவான வரையறை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது’ என லக்ஸ்மன் சிறிவர்த்தனே மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் வாழும் சிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணமானது இரண்டாவது பெரிய நகரமாகவும், பொருளாதார மையமாகவும் காணப்பட்டது. 1983ல் ஆரம்பமான ஆயுதப் போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
சிறிலங்காவில் நீண்டகாலம் தொடர்ந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் 40,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளதும் தெரிந்ததே.
யாழ்ப்பாணமானது பல ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக காணப்பட்டது. சிறிலங்காவின் வடக்கில் வாழ்ந்த மக்கள் தென்பகுதிக்கு பிரயாணம் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தினரின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது.
தற்போது மெதுமெதுவாக யாழ்ப்பாணம் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. தற்போது தென்சிறிலங்காவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேரூந்துகள் பயணிக்கின்றன.அத்துடன் விமானம் மூலமும் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பெருமளவான காணிகளை சிறிலங்கா இராணுவம் சுவீகரித்துள்ளதாக இங்கு வாழும் மக்கள் முறையிட்டுள்ளனர். இங்குநடைபெறும் உள்ளுர் தேர்தல்கள் மற்றும் ஏனைய நாளாந்த நடவடிக்கைகளில்இராணுவத்தினர் தலையீடு செய்வதானது மீண்டும் இனக்குழப்பத்தை ஏற்படுத்தக் காலாக உள்ளதாகவும் உள்ளுரில் வாழும் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதில் தயக்கம் காண்பிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதலில் சேதமாக்கப்பட்ட தனது பெற்றோரின் வீட்டைத் திருத்தி அதில் வர்த்த நடவடிக்கையை ஆரம்பிக்கும் நோக்குடன் யுத்தத்தின் இறுதியில்இளம் தமிழ் வர்த்தகரான வி.கந்தப்பா பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திரும்பி வந்திருந்தார்.
‘இனிவருங் காலங்களில் என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பில் தனியார்துறையினர் நிச்சயமற்றுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது முதலீடுகளை மேற்கொள்வதில் மக்கள் அச்சங்கொள்கின்றனர்’ என கந்தப்பா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் விடுதிகள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவற்றை நடத்துவதானது கொழும்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 43 மாடிகளைக் கொண்ட Hyatt Regency என்ற விடுதி பகுதியளவில் சிறிலங்கா அரச காப்புறுதி நிறுவனத்தால் ஆளப்பட்டாலும் இதனை சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகர் காமினி செனரத்னவே நடத்தி வருகிறார்.
இந்த விடுதி கட்டப்பட்டுள்ள நிலம் கடந்த ஆண்டு பசில் ராஜபக்ச அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் காணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதாகும். நகர அபிவிருத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலராக சிறிலங்கா அதிபரின் பிறிதொரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ச பணிபுரிகிறார். சிறிலங்கா இராணுவத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரமும் பாதுகாப்பு அமைச்சிற்கே உள்ளது.
சிறிலங்கா அதிபரின் பெயரைக் கொண்டுள்ள மிகின் லங்கா மற்றும் Helitours போன்ற விமான சேவைகளையும் சிறிலங்கா அரசாங்கம் நடத்துகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் விமானப்படைத் தளபதி ஆகிய இருவரும் இணைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்மிகின் லங்கா சேவையை ஆரம்பிப்பதென திட்டமிட்டனர். இதேபோன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் அரசுக்குச் சொந்தமானதாகும். தற்போது இதனை ராஜபக்சவின் மைத்துனர் நடத்தி வருகிறார். எரிபொருள் விலையேற்றம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் குறைத்து அறவிடப்பட்டமை போன்ற காரணங்களால் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை கடந்த ஆண்டில் 147 மில்லியன் டொலர்களை இழந்ததாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்ததிலிருந்து நாட்டில் மேற்கொள்ளப்படும் மின்சக்தி, தொலைத் தொடர்பாடல், வீதிப் புனரமைப்புக்கள் போன்றன துரித அபிவிருத்தியடைந்துள்ளதாகவும், மகிந்த சிந்தனையின் வெற்றியை இவ்அபிவிருத்திப் பணிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘சில துறைகள் மக்களுக்கு முக்கியமானவையாகும். இவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இவற்றின் அதிகாரங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளாவிட்டால் எங்களால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது’ என பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire