சுனாமி அனர்த்தத்தின் மூலம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் மிகவும் துரிதமாக இயல்பு நிலைக்கு மாறிய நாடாக இலங்கையைக் குறிப்பிட முடியுமென உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான நிதியங்கள் பல குறிப்பிட்டுள்ளன. பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை அதிநவீன முறையில் மீள்கட்டியெழுப்பக்கூடிய மக்களைக் கொண்ட நாடாக இலங்கை இற்றைக்கு 8 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது செயற்பட்ட விதத்தை அடிப்படையாக வைத்து அதனை நினைவுகூரும் வகையில் சர்வதேச நாணய நிதியங்கள் மேற்படி குறிப்பிட்டு ள்ளன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி அனர்த்தம் மூலம் ஏற்பட்ட பாரிய சேதங்களுக்குப் பின்னர் நிவாரணங்களை வழங்கி மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான மீள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சவாலானது ஒரு பாரிய பணியாக அமைந்ததாகவும் சர்வதேச சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.
150:000 ஆயிரம் பேருக்குத் தேவையான வாழ்வாதார வசதிகளை கட்டியெழுப்பி புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகிய பணிகளுக்கான செலவீனமாக 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவானது. இது ஏறத்தாள 22 ஆயிரம் கோடி ரூபாவாகும். இதன் காரணமாக பாரிய தொகை நிதியினை உள்ளூர் மற்றும் சர்வதேச நிதியங்களிலிருந்து பெற்றுக்கொண்டு இலங்கை மீள்கட்டியெழுப்பப்பட்ட விதமானது அனைவரது பாராட்டுக்குரிய விடயமாகும் என்றும் உலக வங்கி மேலும் சுட்டிக்காடுகின்றது.
இன: மத அரசியல் பேதமின்றி நாட் டைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து செயற்பட்டதன்மூலம் மேற்படி வெற்றியை அடைய முடிந்தது என்பதே சர்வதேச சமூகத்தின் கருத்தாகும்.43:400 வீடுகள் சுனாமியினால் பாதிக்கப்பட்டதுடன்: அவை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன. வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் தமது வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக உலக வங்கியின் உதவியுடன் நிதியுதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா இரண்டரை இலட்சம் ரூபா தொகையும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ஒருலட்சம் ரூபா தொகையும் உதவியாக வழங்கப்பட்டன.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 24 பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்படி வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. சுனாமி அனர்த்தத்தின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக அம்பாறை: மட்டக்களப்பு: திருகோணமலை ஆகிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களையும் குறிப்பிடலாம். அப்பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற நிவாரணங்களில் 45 வீதம் ஒதுக்கப்பட்டதுடன் அப்போதைய பிரதமராகப் பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு இணங்கவே இங்கு மீள் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி அவர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டி ருந்தமையினால் திடீர் அனர்த்தமொன்று நாட்டில் ஏற்பட்ட வேளையில் சிறந்த முறையில் நாட்டை வழிநடாத்தி சிறந்த அரசியல் தலைமைத்துவமொன்றை வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அவர்கள் செயற்பட்ட விதமானது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட தென்மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்ற மொத்த நிவாரணத் தொகையில் 26 வீதமும்: வடபிரதேசத்திற்கு 19 வீதமும் மற்றும் மேல்மாகாணத்துக்கு 10 வீதமும் நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறான அனர்த்தத்தின் பின்னர் அவ்வாறானதொரு அனர்த்தம் மீண்டும் ஏற்படும் பட்சத்தில் அதற்கு சிறந்த வகையில் முகங்கொடுக்கக் கூடியவகையிலும் அனர்த்தங்கள் ஏற்படுவதை முற்கூட்டிய நவீன தொழில்நுட்ப கருவிகளின் ஆதாரங்களுடன் அறிந்து கொள்வதற்கும் இலங்கை நடவடிக்கைகள் குறித்து சமூகத்தின் பாராட்டிற்கு ஆளாகியுள்ளது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ஜப்பான், சீனா, உலக வங்கி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், யுனிசெப் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டம், அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிலையம், ஜேர்மனி அரசாங்கம், ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்க குடியரசு நிதியம் என்பவற்றிலிருந்து மனிதாபிமான உதவிகளும் இயந்திர சாதன கருவிகள் என்பனவும் பாரியளவில் கிடைக்கப்பெற்றதாக நிதியமைச்சின் வெளிநாட்டு வளத்திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
சுனாமி அனர்த்திற்கு ஆளான மக்களுக்கு உடனடி உணவு வகைகள், துணிமணிகள் தற்காலிக இருப்பிடங்கள், கூடாரங்கள் மருந்துவகைகள் மற்றும் மரணித்தவர்களின் ஈமைச் சடங்குகளுக்குத் தேவையான வசதிகள் என்பவற்றினை உடனுக்குடன் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்தோனேசியாவின் யகார்த்தா நகரில் சுனாமி அனர்த்தத்தின் மூன்றுமாத நிகழ்வு கூட்டத்தின்போது இலங்கையின் செயற்பாடுகள் அங்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டப்பட்டதாகவும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சிகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக நிவாரண அடிப்படையில் குறைந்த வட்டிவீதத்தில் பல சலுகைகளை இலங்கை மத்திய வங்கியின் கடன் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார். அதனடிப்படையில் ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேற்கொள்ளப்பட்ட தொகை அச்சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொடுப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சுனாமி இயற்கை அனர்த்தங்களின் மூலம் பாதிப்புக்கு உள்ளான அனைவரினதும் வாழ்க்கை நிலையினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விவசாயம், கைத்தொழில், சேவைத்துறைகள் அனைத்தும் உடனடியாக மேம்படுத்தப்பட்டன. கடற்றொழில், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையைச் சார்ந்தவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டன. சேதத்துக்குள்ளான வீடுகள், சொத்துக்கள் என்பன அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.
வீதிகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் பாலங்கள், சுகாதார வசதிகள் என்பனவும் மீளக்கட்டியெழுப்பப்பட்டன. இவற்றைவிட பெளத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கு துரித திட்டங்களின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டன.சுனாமி அனர்த்தத்தின் மூலம் உயிரிழந்த மக்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளும், அனர்த்தத்துக்கு ஆளாகியவர்களின் மீட்சிக்காகவும் இன்று நாடளாவிய ரீதியில் மதவழிபாடுகளும், பிரார்த்தனைகளும் இடம்பெறுகின்றன