jeudi 20 décembre 2012

மழை, வெள்ளம், மண்சரிவு: 77000 பேர் பாதிப்பு; 8500


  • 15 பேர் உயிரிழப்பு
    மீட்புப் பணிகளில் முப்படை, பொலிஸ்
  • குருநாகல் மாவட்டம் மிக மோசமாக பாதிப்பு
  • 85% குளங்கள் நிரம்பின; வான் கதவுகள் திறப்பு
நாட்டில் கடந்த இரு நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டதோடு மக்களின் இயல்புவாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார நேற்றுத் தெரிவித்தார். வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி மழை மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவ குழப்பநிலை என்பனவே இச்சீரற்ற காலநிலைக்கு அடிப்படைக் காரணம் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதம வானிலையாளர் டி.ஏ.ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார்.
நேற்றுக் காலை 8,30 மணியுடன் முடிந்த இருபத்தி நான்கு மணிநேர மழைவீழ்ச்சிப் பதிவுப்படி ஆகக்கூடிய மழை கண்டி எல்கடுவவில் 336.8 மில்லிமீற்றர்களாகப் பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம், நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீரேந்து பிரதேசங்களின் 85 சதவீதத்திற்கும் அதிகமான நீர்மட்டம் நிரம்பி வழிவதனால் அனேக வான்கதவுகளும் திறக்கப்பட்டு ள்ளன.
இதேநேரம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்றுமுன்தினம் 4 மாவட்டங்களுக்கென விடுத்திருந்த 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை மேலும் 24 மணித்தியாலத்துக்கு நீடிப்பதாக அந்நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுப் பொறுப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார கூறினார். இதேவேளை, கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக கடந்த இரு நாட்களிலும் 15 பேர் உயிரிழந்திருப்பதுடன், 25 காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.
இச்சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை, கண்டி, நுவரெலியா, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவ, குருநாகல், மொனராகலை, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய 10 மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளன என்றும் அவர் கூறினார். இக்கடும்மழை மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டில் 21,523 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாவும், இவர்களில் 2200 குடும்பங்களைச் சேர்ந்த 8,500 பேர் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி 36 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்தற்குத் தேவையான நிதியும், ஆலோசனைகளும் உடனுக்குடன் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இவ்வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 96 வீடுகள் முழுமையாகவும் 575 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இவ்வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அந்தந்தப் பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இம்மாவட்டங்களில் பல வீதிகளுடான வழமையான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மலையக மாவட்டங்களில் பல வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதும், ஏனைய மாவட்டங்களில் வெள்ளநீர் வீதிகளை ஊடறுத்துப் பாய்வதும் இதற்குக் காரணம். இதேவேளை, மலையகத்துக்கான ரயில் சேவை நானு ஓயாவுடனும், கிழக்கு மற்றும் வடமாகாணத்துக்கான ரயில் சேவை குருநாகல் மாவட்டத்துடனும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ள நீரில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணியில் பொலிஸாரும், இராணுவத்தினரும், கடற்படையினரும், மற்றும் விமானப்படையினரும் ஈடுபட்டுவருவதாக அந்தந்தப் பிரதேசங்களிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசேட ஹெலிக்கொப்டர்கள் தரையிறங்க முடியாத பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணியில் கடற்படையினர் விசேட படகுகள் மூலம் மீட்புப்பணியை முன்னெடுப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஊவா மாகாணத்தில் பசறை - மண்சரிவு
சீரற்ற காலநிலையினையடுத்து பெய்த பெரு மழையினால் மண் மேடொன்று வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த மூவரும் நசிந்து இறந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று நேற்று பசறையில் இடம்பெற்றுள்ளது.
பசறை பால் சேகரிப்பு நிலையத்தினருகிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எம். கனகசுந்தரம் (47) அவரது மகன்களான க. தில்சான் (14), க.கிசான் (11) ஆகிய மூவரே மண்மேடு சரிந்து விழுந்ததில் நசிந்து பலியானவராவர்.
நித்திரையிலிருக்கும் போதே இம் மண்மேடு சரிந்து விழுந்திருப்பதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
பலியான கனகசுந்தரத்தின் மனைவி, மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணியாளராக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பசறை தோட்டத்திலிருந்து இவர்கள் தனி வீடொன்றினை நிர்மாணித்துக் கொண்டு வசித்து வந்த போதே மேற்படி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பசறை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பசறைப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பசறையைச் சேர்ந்த 13ம் கட்டையருகேயும் அம்பேதன்னை என்ற இடத்திலும் இரு வீடுகள் மீது மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன.வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தினால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை.
நிக்கலோ தோட்டம்
மாத்தளை மாவட்டம் ரத்தொட்டை பிரதேசத்திலுள்ள நிக்கலோ தோட்டம் மண்சரிவு மற்றும் நீர் பெருகெடுப்பினால் முற்றாக நிலைகுலைந்துள்ளது.
குறித்த தோட்டத்திலிருந்து 151 பேரை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ரத்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி விஜேபண்டார கூறினார்.
தோட்ட வீடுகளுக்கு மேல் மண் மேடு சரிந்து விழுந்துள்ளதுடன் அருகிலிருந்த ஆறும் பெருக்கெடுத்ததனால் முழு தோட்டமுமே ஆபத்தில் சிக்கியுள்ளது. இயலுமானவர்களையே மீட்க முடிந்ததுடன் எவரேனும் மண் மேட்டில் சிக்கி பாதிப்படைந்துள்ளனரா? என்பது குறித்து எவ்வித தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.
மின்சாரம், தொலைத் தொடர்பு ஆகிய அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடை மழைக்கு மத்தியில் குறித்த தோட்டத்தை நெருங்க முடியாமலிருப்பதாகவும் அவர் நேற்று கூறினார்.
மண் மேட்டில் சிக்கி வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன் சில வீடுகள் இருந்த இடமே தெரியாமல் போயுள்ளன. இந்நிலையில் பலர் தப்பியோடி உறவினர்கள் வீட்டில் தங்சமடைந்திருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தளையில் 8 பேர் உயிரிழப்பு
மாத்தளையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழையினால் அப்பிரதேசத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. அடைமழைக் காரணமாக 05 பேர் காயமடைந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நேற்று அம்பன் கங்கையில் மூவர் உயிரிழந்திருப்பதுடன் இரத்தோட்டையில் நேற்று முன்தினம் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை இரத்தோட்டையில் அறுவரும் மாத்தளையில் ஒருவருமே காணாமற் பேயிருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
சீரற்ற காலநிலையினால் ஏழு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 66 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
எட்டு நிவாரண நிலையங்களில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 632 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உடுதும்பர மண்சரிவில் இருவர் பலி
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர - எனமல்பொத சந்திக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய முச்சக்கர வண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திங்கட்கிழமை இரவு குறித்த பகுதியில் பெய்த கடும் மழையுடன் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி 250 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது.
வண்டிக்குள்ளிருந்த இருவரும் நேற்றுக் காலையிலேயே மீட்கப்பட்டனர். மீட்பின் போது ஒருவர் உயிரிழந்தும் மற்றுமொருவர் குற்றுயிருடனும் இருந்துள்ளார். காயமடைந்தவர் உடுதும்பர வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 38 மற்றும் 40 வயதுடைய நபர்களே உயிரிழந்தவர்களா வரென உடுதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
வான்கதவுகள் திறப்பு
அதிக மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் அனைத்து நீரேந்து பிரதேசங்களிலும் நீர் மட்டம் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பியிருப்பதனால் பாதுகாப்புக் கருதி அவற்றின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.
இதன்படி வெஹெரகல, உடவளவை, மேல்கொத்மலை, பராக்கிரம சமுத்திரம், கலாவெவ, இராஜாங்கனை, மட்டக்களப்பு உன்னிச்சைக் குளம் உட்பட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நேற்று திறந்துவிடப்பட்டதுடன் அதனை அண்மித்த பள்ளத்தாக்குகளில் வாழ்ந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று அறிவித்திருந்தது.
ராஜாங்கன நீர்த்தேக்கம்
இதேவேளை நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் எட்டு (08) வான் கதவுகள் 4 அடியும், இங்கினிமிட்டி நீர்த்தேக்கத்தின் ஐந்து (05) வான் கதவுகள் ஒரு அடியும் திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கலாஓய நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புத்தளம் மன்னார் வீதி, எழுவன்குளம் பகுதி மூடப்பட்டுள்ளது. இங்கினி மிட்டி நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மீ ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிலாபம், ஆராச்சிக்கட்டு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடுபிடிஓயா, மற்றும் ஹெமில்டன் அறை பெருக்கெடுத்துள்ளதால் மஹவெல மற்றும் நாத்தாண்டிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பில் மூன்று குளங்களின் வான் கதவுகள் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளம் உட்பட மூன்று குளங்களின் வான்கதவுகள் முழுமையாக திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ். மோகனராஜ் தெரிவித்தார்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகளும், உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகளும், நவகிரி குளமும் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முப்படையினர் மீட்புப் பணியில்
இதேவேளை சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு மற்றும் நிவாரண
வையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்தார்.
எனினும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் தொடர்ந்தும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
இதேவேளை குருநாகல் மாவட்டத்திலுள்ள மாஸ்பொத்த என்ற பிரதேசத்தில் வெள்ள நீரில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த இரு சிறார்களை விமானப்படையினர் ஹெலிகொப்டரின் உதவியுடன் நேற்று மாலை மீட்டெடுத்துள்ளனர்.
விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டு இரு சிறார்களும் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் வின் கொமாண்டர் ஷிராஸ் ஜல்டீன் தெரிவித்தார்.
பாதிப்பு பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த அவசர ஏற்பாடுகள்
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு அவசர ஏற்பாடுகளை செய்துள்ளது.
மழையினால் சில ஆஸ்பத்திரிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. குருநாகலை ஆஸ்பத்திரியின் பல பிரிவுகள் நீரில் மூழ்கியுள்ளன. தற்போது நீர் வற்றியுள்ளதால் சுத்தமாக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அமைச்சின் உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
சுகாதார அமைச்சின் அவசர அனர்த்த முகாமைத்துவ நிலையம் முழுநாளும் இயங்குவதுடன் நிர்க்கதியான மக்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சு கூறுகிறது.
மருந்துகளும், நீரைத் துப்பரவாக்கும் குளோரின் வில்லைகளும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நீரில் மூழ்கிய பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டெங்கு அபாயமும் இருப்பதால் மக்களுக்கு அறிவூட்டுவதற்கான வேலைத்திட்டங்களையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
குருநாகல் அளுத்பொத்தேகம பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளமையால் சுமார் 110 குடும்பங்கள் நேற்று மாலை வரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
சொப்பர் விமானங்கள் மூலம் வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்க பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது பயனளிக்காத நிலையில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் படகுகள் மூலம் சென்று அவர்களை மீட்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் மூன்று குடும்பங்களே ஆரம்பத்தில் மீட்க கூடியதாகவிருந்தது. வெள்ளத்தில் சிக்குண்டவர்களின் வருகையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் கிராமத்தைச் சூழ ஆவலுடன் காத்து நின்றனர். கடற்படையினர் படகுகளின் உதவியுடன் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாரியபொல
தெதுருஓயா பெருக்கெடுத்துள்ளதால் வாரியபொல, பாதெனிய, எம்பவலபிடிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மகவெல
மகவெல, ஹதமுனுகல, மடவல, உல்பன பகுதியிலுள்ள ஹதமுனை பாலம் வெள்ளத்தினால் உடைந்துள்ளது. வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற நபரொருவர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 33 வயதான குணரத்ன என்பவரே வெள்ளத்தில் காணாமல் போயுள்ளார்.
வலபனை
பதியபொல்ல நாலங்தலாவ பகுதி வீதியில் மண் திட்டொன்று விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire