mardi 18 décembre 2012

மட்டக்களப்பின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்


நாட்டின் பல பாகங்களிலும் தொடாச்சியாக அடைமழ பெய்த வருகின்றது. இதேவேளை சித்தாண்டி மற்றும் அயற்கிராமப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவருகின்ற மழையினால் சித்தாண்டியின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இடைவிடாது பெய்து வரும் மழையினால் நதிவடிநிலங்கள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் நிரம்பி வழிவதுடன், கிராமத்தின் உள்வீதிகளிலும் நீர்தேங்கிக் காணப்படுகின்றது.
தற்போதும் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதனால் சித்தாண்டி 04, சித்தாண்டி 03 போன்ற பகுதிகளின் எல்லைப் பகுதிகள் வெள்ளத்துள் விரைவில் மூழ்கிவிடும் அபாயம் காணப்படுகின்றது. சந்தணமடு ஆறு வீதியும் நீரில் மூழ்கியுள்ளதனால் சித்தாண்டி 04 மாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து பெருமாவெளி வரையிலான இயந்திரப்படகு சேவை தற்போது நடாத்தப்பட்டு வருகின்றது.
மாவடிவேம்பு பிரதேசத்திலும் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளநீர் வீதிகளிலும், மக்களின் நிலங்களிலும் தேங்கிக் காணப்படுகின்றது. தேங்கிக் காணப்படும் நீரை அகற்றுவதற்காக கடந்த வருடங்களில் அமைக்கப்பட்ட சில நெடுக்கு தற்காலிக கால்வாய்களை ஆழமாக்கி நீரைவடியச் செய்வதற்கு மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாகக் குறிப்பிட்டார். இதற்காக செங்கலடி பிரதேச சபைக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இயந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய் ஆழமாக்கப்பட்டு நீர் வடியவிடச் செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கிரான் பாலத்திற்கு மேலாக அதிகவேகத்துடனும், அதிகமாகவும் நீர் பாய்ந்து வருவதனால் கிரான்பாலத்திற்கூடான தரைவழிப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது.  இயந்திரப் படகுச் சேவையின் மூலமான போக்குவரத்தே இங்கும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. பத்து மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கடும் மழை காரணமாக மாத்தளை, ரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் ஐவரும் கண்டி, பாததும்பரையில் ஒருவருமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் நால்வர் மண்சரிவு காரணமாகவும் ஒருவர் வெள்ள நீரைப் பார்த்ததால் ஏற்பட்ட இதய அழுத்தம் காரணமாகவும் மரணமடைந்திருப்பதாக ரத்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி விஜய பண்டார கூறினார். இதேவேளை இக்கடும் மழை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, காலி, பொலன்னறுவை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இம்மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக ஏழு மாவட்டங்களில் 1129 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire