mardi 18 décembre 2012

மனோவிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு ஜே.வி.பி - புலி இரண்டும் வேறுபட்டவை

Mahinda1தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை.

புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். எனவே, இவ்விரு தரப்பினரதும் போராட்டங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனிடம் தெரிவித்துள்ளார்.  

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். 

மாண்டுபோனவர்களை நினைவுகூர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுங்கள். கடந்த காலங்களுக்கு நாட்டை மீண்டும் இந்த சம்பவங்கள் அழைத்து செல்வதை அனுமதிக்காதீர்கள். நாட்டின் முதன் குடிமகன் என்ற அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் நேரடி தலையீடு செய்யுங்கள் என மனோ கணேசன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்ததிற்கு பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜே.வி.பி இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல.
 
யுத்தம் முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில் புலிகள் இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும், ஜே.வி.பியினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்து கூறுங்கள் என்று ஜனாதிபதி கூறினார். 

வேலைப்பளுவின் இடையில் இந்த மாணவர் விவகாரம் தொடர்பாக தனக்கு முழு விபரம் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபற்றி எவரும் முழுமையாக விபரம் தெரிவிக்கவும் இல்லை. உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தற்சமயம் நாட்டில் இல்லை. அவர்தான் இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்புவார். அவர் வந்தவுடன் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும் மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்சமயம் பல்கலைக்கழக விவகாரமாக இல்லாமல் பாதுகாப்பு அமைச்சு விவகாரமாக மாறியுள்ளதாக நான் சுட்டிகாட்டினேன். அதை ஏற்றுகொண்ட ஜனாதிபதி, எனினும் இதை பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் மூலமே தான் அணுக விரும்புவதாக சொன்னார். 

அத்துடன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்' என்றார்

Aucun commentaire:

Enregistrer un commentaire