vendredi 28 décembre 2012

ரஷ்யா என்றென்றும் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாகும்.



மனித உரிமை மீறல் குற்றச் செயல்களில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய சில மேற்கத்திய வல்லரசு நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது நாகரீகமான செயல் அல்ல என்று இலங்கையில் புதிய ரஷ்ய தூதுவராக பதவியேற்றுள்ள எலக்ஸாண்டரே கர்ச்சாவா கண்டனம் தெரிவித்தார்.
சிலர் மற்றவர்கள் கண்ணில் தூசி படிந்திருக்கிறதென்று கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர்கள் மாலைக்கண் பார்வையுடையவர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்த ரஷ்யத் தூதுவர் மேற்கத்திய, அபிவிருத்தி அடைந்த நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை தெரிவிப்பது தவறில்லை என்றும் அந்த ஆலோசனைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவருவது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார். இவ்விதம் மேற்கத்திய நாடுகள் சில நடந்து கொள்வது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நாடுகள் அநாவசியமாக தலையிடுவதையே உறுதிப்படுத்துகிற தென்றும் அவர் கூறினார்.
ரஷ்ய தூதுவரின் கூற்றை நாம் மனப்பூர்வமாக அங்கீகரிக்கின்றோம். யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளில் இலங்கையில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதிகளினால் புதைக்கப்பட்ட இந்த தரைக்கண்ணி வெடிகள் இன்னும் சிறிதளவு நிலப்பரப்பிலேயே அகற்றப்படாத நிலையில் இலங்கை அரசாங்கம் இராணுவத்தினரதும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் நிதி உதவியுடனும் வெளிநாட்டு தொண்டர்களின் உதவியுடனும் கண்ணி வெடிகளை அகற்றும் பணியை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
கம்போடியா போன்ற நாடுகளில் யுத்தம் 1970ம் ஆண்டு தசாப்தத்தில் முடிவடைந்தது. ஆயினும் இன்றும் கூட கம்போடியாவில் புதையுண்டிருக்கும் தரைக்கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இதிலிருந்து இலங்கை கண்ணி வெடிகளை அகற்றுவதில் உலக சாதனையை மூன்றாண்டு என்ற குறுகிய காலத்தில் ஏற்படுத்தியிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
ரஷ்யா என்றென்றும் சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் போன்று இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாகும். அன்று இலங்கையில் இரண்டு பல்கலைக் கழகங்களே இருந்தன. கொழும்பு பல்கலைக்கழகமும், பேராதனைப் பல்கலைகழகமும் இருந்த காலத்தில் நம் நாட்டு பிள்ளைகளுக்கு வைத்தியம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், பொறியியல் துறைகளில் பட்டப்படிப்பு, முதுமாணிப்படிப்பு, கலாநிதிப் படிப்புகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா போன்ற வளர்முக நாடுகளின் மாணவ மாணவிகளுக்காக லுமும்பா சர்வதேச பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தி எமது நாட்டு இளம் சந்ததியினருக்கு இலவச கல்வி அறிவை பெற்றுக் கொடுத்த ஒரு தார்மீக பொறுப்புள்ள நாடாக திகழ்ந்தது.
லுமும்பா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான டாக்டர்கள், பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இன்று இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உயர் பதவிகளில் இருந்து தாங்கள் வாழும் நாட்டு மக்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறார்கள்.இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த காலப்பகுதியில் இருநாடுகளில் வர்த்தக உறவு பெரும் வெற்றியை அளித்திருக்கிறது. ரஷ்யா இலங்கையின் மின்சக்தி, எரிசக்தி துறைக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து நாம் தேவையான போதெல்லாம் எரிபொருளை வாங்கி வருகின்றோம்.
வியட்னாம் உட்பட பல நாடுகளில் அணுசக்தியின் மூலம் மின்சக்தியை உருவாக்கும் தொழிற்சாலைகளை அமைத்து கொடுத்து வருகின்றது. வியாட்னாமும் ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி மின் உற்பத்தி ஆலை ஒன்றை பெற்றுள்ளது. இலங்கை தேயிலையை பெருமளவில் இறக்குமதி செய்யும் ஒரு நாடாக ரஷ்யா இருந்து வருகின்றது. இது விடயத்தில் நாம் ஓர் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாம் ரஷ்யாவிடம் இருந்து கணிசமான அளவு பொருட்களை இறக்குமதி செய்யாததனால் எங்கள் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் பாரிய இடைவெளி தோன்றியது.
இன்று இலங்கை ரஷ்ய பரஸ்பர வர்த்தகம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த பரஸ்பர வர்த்தக உறவை பெருக்குவதற்கு இலங்கை அரசாங்கம் இப்போது ரஷ்ய செல்வந்த உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ந்தளிக்கும் ஒரு பாரிய பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறது.
2011ம் ஆண்டில் 21 ஆயிரம் ரஷ்ய உல்லாசப் பயணிகளே இங்கு வந்தார்கள். ரஷ்யா வருடத்திற்கு சுமார் 7 முதல் 8 மாதங்கள் கடும் குளிருடனான மாரிகாலத்தை கொண்டிருக்கிறது. இதனால் ரஷ்ய செல்வந்தர்கள் பூமத்திய ரேகைக்கு தெற்கில் அமைந்திருக்கும் உஷ்ண சீதோஷ்ண நிலையை கொண்டிருக்கும் இலங்கைக்கு வந்து தங்கள் விடுமுறையை மகிழ்ச்சியோடு கழிப்பதற்கு மிகவும் விரும்புகிறார்கள்.
அவர்கள் எங்கள் நாட்டின் நாலா பக்கத்திலும் அமைந்திருக்கும் நீலக்கடற்கரையின் சூரிய ஒளியில் குளிர்காய்வதற்கு விரும்புகிறார்கள். அவர்களின் ஆசைக்கனவை நிறைவேற்றுவதற்காக தென்னிலங்கையில் ஹிக்கடுவை, கிழக்கிலங்கையில் அருகம்பே, பாசிக்குடா, நிலாவெளி போன்ற கடற்கரைகளை அடுத்து நடுத்தர வகுப்பினரும் செல்வந்தர்களும் தங்கியிருக்கக்கூடிய பல ஹோட்டல்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
21ம் நூற்றாண்டில் வெளிநாட்டு நாணயமாற்றை சம்பாதிக்கக்கூடிய முதன்மைத் தொழிலாக உல்லாசப் பயணத்துறை இருந்து வருகின்றதென்ற உண்மையை உணர்ந்திருக்கும் எமது அரசாங்கம் அந்தத் துறையை முன்னேற்றி அதன் மூலம் எமது நாட்டின் தேசிய வருமானத்தை பெருக்குவதற்கு எடுத்துவரும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எமக்குண்டு

Aucun commentaire:

Enregistrer un commentaire