இந்தியாவும் ரஷ்யாவும் முன்னூறு கோடி டாலர்கள் மதிப்புடைய ஆயுத விற்பனை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், தில்லியில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தனது இந்த விஜயத்தின்போது பிரதமர் மன்மோகன் சின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருநாடுகள் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பை இரட்டிப்பாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று புடின் தெரிவித்துள்ளார். தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எழுபதுக்கும் அதிகமான இராணுவ ஹெலிகாப்டர்களையும், நாற்பதுக்கும் அதிகமான யுத்த விமானங்களையும் வாங்குகிறது.
இந்தியா மிக அதிக அளவில் ஆயுதம் கொள்வனவு செய்யக்கூடிய நாடாக ரஷ்யா நெடுங்காலமாக இருந்துவருகிறது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கக்கூடிய ஆயுதங்களில் எழுபது சதவீதமானவற்றை ரஷ்யாதான் வழங்குகிறது. ஆனால் நூறு கோடி டாலர்கள் மதிப்பிலான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தங்கள் சிலவற்றை அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இந்தியா அண்மையில் செய்துகொண்டிருந்தது.
ஆயுத விற்பனையில் தம்முடனான இந்தியாவின் வாடிக்கை குறைந்து விடுமோ என்று ரஷ்யா கரிசனை கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தம் தற்சமயம் ஆண்டொன்றுக்கு ஆயிரம் கோடி டாலர்கள் என்ற அளவில் இருந்துவருகிறது என்றாலும், இந்த வர்த்தக உறவு அண்மைய ஆண்டுகளாய் வளர்ச்சி குன்றி வந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire