dimanche 23 décembre 2012

மன்னாரில் 2,034 பேர் பாதிப்பு மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளதால்


இரணைமடுக் குளத்தின் 10 வான்கதவுகள் 6 இஞ்சிக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் தேவை ஏற்பட்டால் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திட்டமிடல் பணிப்பாளர் சுதாகர் குறிப்பிட்டார். தொடர்ந்து பெய்துவரும் மழை மற்றும் கனகராயன் குளத்தில் இருந்தும் வரும் நீரினாலும் குளத்தின் நீர்மட்டம் 30.7 அடியாக உயர்ந்துள்ளதால் மேலும் 6 வான்கதவுகள் இரவு 8.20 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் எல்லாமாக 10 வான்கதவுகள் 6 இஞ்சிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் தேவை ஏற்பட்டால் ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் எனக்குறிப்பிட்டார் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திட்டமிடல் பணிப்பாளர் 

மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளதால் மன்னார் மாவட்டத்தில் 620 குடும்பங்களைச் சேர்ந்த 2,304 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதால், அக்கிராமத்திலுள்ள 336 குடும்பங்களையும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல் விடுத்ததாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ் தெரிவித்தார்.இந்நிலையில், தம்பனைக்குளம் கிராமத்திலிருந்து 336 குடும்பங்களும் மடுக்கரை மற்றும் நானாட்டான் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில்  பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நானாட்டான் ம.வி.பாடசாலையில் 358 குடும்பங்களைச் சேர்ந்த 1,427 பேரும் மோட்டக்கடை ம.வி.பாடசாலையில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 645 பேரும் மோட்டக்கடை பொதுமண்டபத்தில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேரும் மடு சின்னப்பண்டிவிருச்சான் ம.வி.பாடசாலையில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 645 பேரும் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். சிலர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன், இம்மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணித்தார். இதேவேளை, அவ்வப் பிரதேசங்களுக்கு பொறுப்பான இராணுவத்தினர் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire