samedi 29 décembre 2012

கட்சி நிர்வாகிகளுக்கு சீன கம்யூனிஸ்ட் தலைவர் எச்சரிக்கை

china prasident-1ஊழல், பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து மீளாவிட்டால் வீழ்ச்சி ஏற்படும். எனவே, கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு சீன கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார். ஒரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ள சீனாவில், கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொள்பவர்தான் அதிபர் பதவியை வகிக்க முடியும். இப்போது கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள ஜீ ஜின்பிங், விரைவில் அதிபராக உள்ளார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகளின் தலைவர்களை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார் ஜீ ஜின்பிங். இக்கூட்டத்தில், சீன ஜனநாயக தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சாங்ஸி உள்பட 8 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜீ ஜின்பிங் பேசியதாவது:ர்""1945ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாசேதுங்கை சந்தித்த கம்யூனிஸ்ட் அல்லாத கட்சியான சீன ஜனநாயக தேசிய நிர்மாணக் சங்கத் தலைவர் ஹுயாங் யான்பெய், "சீன வரலாற்றில் பல ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அரச வம்சத்தினர் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வீழ்ச்சி அடைந்துள்ளனர்' என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் அமைப்பு, சரியாக செயல்படாவிட்டாலோ, மந்த நிலையில் இருந்தாலோ அதன் வீழ்ச்சி தொடங்கிவிடும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு பொருள் அழுகத் தொடங்கிய பின்புதான், அதில் புழுக்கள் தோன்றும். எனவே, கட்சியினர் ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்'' என்றார் ஜீ ஜின்பிங். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சிலர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சிலர் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே ஜீ ஜின்பிங் இவ்வாறு கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire