சுவீடன் நாட்டிடமிருந்து, இந்திய ராணுவத்துக்காக வாங்கப்பட்ட ஆயுதங்கள் மியான்மர் ராணுவத்திடம் சென்றது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்தியா கூறியுள்ளது. மியான்மர் நாட்டுக்கு (முன்பு பர்மா) ஆயுதம் ஏற்றுமதி செய்ய தடைவிதித்து, ஐரோப்பிய யூனியன் கடந்த 1996-ல் ஆணை பிறப்பித்தது. அதிலிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் அந்நாட்டுடன் ஆயுத வர்த்தகம் வைத்துக்கொள்வதில்லை.
இந்நிலையில், சுவீடன் நாட்டிலிருந்து இந்திய ராணுவத்துக்காக வாங்கப்பட்ட ஆயுதங்கள் மியான்மர் நாட்டு ராணுவத்திடம் இருப்பதாக, சுவீடன் நாட்டு ஊடகம் ஒன்றில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. கார்ல்கஸ்டாஃப் எம்-3 ரக பீரங்கி எதிர்ப்பு துப்பாக்கி மற்றும் படைக்கருவிகளின் படங்கள் அதில் பிரசுரமாகி இருந்தன. இதையடுத்து, இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அந்த ஆயுதங்கள் மியான்மருக்கு எப்படிச் சென்றது என்ற கேள்வி அங்கு எழுந்தது.
அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் இப்பிரச்னை எழுப்பப்பட்டது. அதற்கு வியாழக்கிழமை பதிலளித்த வர்த்தகத் துறை அமைச்சர் ஈவா பஜோர்லிங்,"சுவீடனின் ஆயுதப்பரவல் தடை மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆணையம், இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மியான்மர் ராணுவத்திடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் தெரிவித்தது,''என்று விளக்கமளித்தார்.
பின்னர் ஸ்டாக்ஹோமில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்," ஐரோப்பிய யூனியனின் தடையை மீறி சுவீடன் தயாரிப்பு ஆயுதங்கள் மியான்மருக்கு எப்படிச் சென்றன என்று தெளிவுபடுத்துமாறு, இந்தியாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,''என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுபற்றி சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில்,"சுவீடன் அரசு இந்தப் பிரச்னையை இந்தியாவிடம் எழுப்பியுள்ளது. நாம் ஒருபோதும் மியான்மருக்கு ஆயுதம் அனுப்ப வில்லை. எனினும், நமக்கான சுவீடன் ஆயுதம் மியான்மருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,''என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire