64ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று கொழும்பில் அரசுக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பிரதம நீதியரசருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை, தெரிவுக்குழு விசாரணைகள் ஆகியவற்றைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
லிப்டன் சுற்று வட்டாரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, அதனை அண்டிய வீதிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் நகரமண்டபப் பகுதியில் நேற்று பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது; வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், நவசம சமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன் ஆகியோரும், பொது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகளும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகள் சங்கத்தினரும் இதில் கலந்துகொண்டனர்.
அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்கிலும், இது விடயத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதித்துறையை நிறைவேற்றுத்துறை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது, பிரதம நீதியரசருக்கு நியாயம் கிடைக்க வேண்டும், தெரிவுக்குழுவின் முடிவை ஏற்க முடியாது என்று தெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர்.
அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசு பிரதம நீதியரசரைப் பதவி இறக்க முயற்சிக்கிறது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க.துணைத் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ் சாட்டினார்.
நாட்டை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவே நீதித்துறையின் சுதந்திரத்தை அரசு ஒடுக்க முனைகிறது என இலங்கைக் கத்தோலிக்க மன்றத்தைச் சேர்ந்த அருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்
Aucun commentaire:
Enregistrer un commentaire