dimanche 10 février 2013

ஜெனிவா தீர்மானத்தை இந்தியப் பிரதமர் பலவீனமாக்குகிறார் - ஜெயலலிதா குற்றச்சாட்டு

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் சமஉரிமை பெறும் வரை சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் பொருளாதாரத் தடையைப் போடுவதற்கான அழுத்தத்தை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும் எனவும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 'பலவீனப்படுத்துவதாகவும்' தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார். 

கடந்த ஆண்டில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததாகவும், ஆனால் தற்போது இந்தியப் பிரதமர் இத்தீர்மானத்தை 'பலவீனப்படுத்துவதாகவும்' தமிழ்நாட்டு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

"2011ல் தமிழ்நாட்டு சட்டசபையில் சிறிலங்காவுக்கு எதிராக சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது தமிழ் மக்கள் சமஉரிமை பெற்று வாழ்வது உறுதிப்படுத்தப்படும் வரை சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடை இடப்படவேண்டும். பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் புரிந்த 'போர்க் குற்றவாளிகள்' நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா மீது இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"மேன்மை தங்கிய அதிபருக்கு, பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானம் தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் முயற்சியை நாம் எடுக்கவில்லை. இத்தீர்மானத்தின் மொழிநடையில் சமநிலையைப் பேணுவதை நாம் மிகவெற்றிகரமாக உறுதிப்படுத்தியுள்ளோம்" என ஐ.நா பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். 

சிறிலங்காவுக்கு எதிராக கடந்த ஆண்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று சிறிலங்கா அரசாங்கம் செயற்படாத அதேவேளையில், இவ்வாண்டு இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா பிறிதொரு சிறப்பு வரைபொன்றை முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முயற்சிக்கு அப்பால், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நலன்கருதி தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு ஏனைய நாடுகளுடன் இணைந்து இந்தியா தீர்மானம் ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்திய மத்திய அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுத்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire