jeudi 28 février 2013

இலங்கை பிரச்சினையை சர்வதேசமயமாக்க வேண்டாம்: ஜெனீவாவில் மஹிந்த சமரசிங்க!


இலங்கையின் தேசிய பிரச்சினைகளை சர்வதேசமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எதிராக உள்ளது என மனித உரிமைகள் பேரவைக்கு,ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரும் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது பொது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இன்று மாலை உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தனது உரையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,இலங்கையின் உள்ளநாட்டு பிரச்சினைகளை சர்தேசமயப்படுத்துவதனால் நாட்டின் ஐக்கிய நிலை பாதிப்படையும். இதேவேளை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் தேவையற்ற ஒன்றாகும். மேலும் இவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.
போருக்கு பின்னர் இலங்கையில் சிறப்பான முறையில் மனித உரிமை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளில் எஞ்சியிருக்கும் பயங்கரவாத சக்திகள் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரசாரங்களையும் தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இது வருந்ததக்க விடயமாகும். இதனால் இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என கூறுவது தவறான விடயமாகும். மேலும் செனல் 4 ஆவணப்படம் குறித்து புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற. 75வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது 99சதவீதமான நிலப்பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 98சதுர கிலோ மீட்டர் பகுதியே இன்னமும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இந் நிலப்பரப்பும் மிகவிரைவில் சுத்தம் செய்யப்படும்.
இதேவேளை காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதோடு இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு வருகின்றது.மக்கள் சுதந்திரமாக நடமாட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire