lundi 11 février 2013

இன்றைய சூழலில் அடிக்கடி உச்சரிக்கப்படும் சிங்கள பௌத்தன் எனும் சொல்லை கேட்கும் ஒவ்வொரு முறையும், ஒரு கெடுதலுக்கு முன்னறிவிப்பு


எங்கள் நாட்டின் தலைவர்கள் தாங்கள் ஏற்றுள்ள தலைமைத்துவத்தின் புனிதமான பொறுப்பை பற்றி எப்போதாவது நினைத்துப் பார்ப்பார்களா? அதிகாரத்தில அமரவேண்டும் என்கிற பேராசையினால் அவர்கள்  அப்படியான குருடர்களாகவும், மற்றும் அதற்காக என்ன விலை  கொடுத்தாவது கெடுதல்களை செய்யவும் தயாராக இருக்கிறார்களா? அவர்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா? அவர்கள் நாட்டுப் பற்றாளர்கள் இல்லையா?
Sharminiஇன்றைய சூழலில் அடிக்கடி உச்சரிக்கப்படும் சிங்கள பௌத்தன் எனும் சொல்லை கேட்கும் ஒவ்வொரு முறையும், ஒரு கெடுதலுக்கு முன்னறிவிப்பு வழங்குவது போன்ற ஒரு வகை கூச்ச உணர்வு என்னைத் தாக்குவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. என்னைப் பொறுத்தவரை வெடிப்பதற்கு தயாராக காத்திருக்கும் ஒரு நேர வெடிகுண்டை போலவே அது ஒலிக்கிறது. ஒரு சிங்களவர் மற்றும்; ஒரு பௌத்தமத விசுவாசி என்பதன் அடிப்படையில் இந்த பூமியில் சிங்கள பௌத்தம் எனறால் என்ன என்று கேட்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. அது சிங்கள சாதியின் ஒரு கிளையா? ஸ்ரீலங்காவில் பௌத்த கொடியின் கீழ் வரும் மற்றொரு தேசிய இனமா? எனக்கு குழப்பமாக உள்ளது.
இன்று நமது நாடு, குறுகிய நோக்கம் கொண்டவர்கள் மற்றும் சுயநலவாத அரசியல்வாதிகள் போன்றவர்கள் பல ஆண்டுகளாகச் செயலற்ற ஆய்வுகூடப் பரிசோதனைக்காக பயன்படுத்தும்  எலிகளாக நம்மை மாற்றியுள்ள ஒரு நாட்டைத் தவிர வேறு எதனையும் கொண்டிருக்கவில்லை. அவர்களின் அரசியல் ஆய்வுகூடத்தின் மூலமாக பல தலைமுறைகளாக நம்மீது இருந்து கொண்டு தொற்றுக்களை பரவச்செய்யும் பல்வேறு நச்சுத்தன்மையான உளவியல் வைரசுக் கிருமிகளை மக்களுக்கு  பாய்ச்சி,தங்கள் கொடிய அரசியல் பரிசோதனைகளை நடத்தி வருகிறார்கள், அதன்மூலம் ஏற்படும் நீண்டகாலப் பின் விளைவுகளைப்பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. இந்த ஆபத்தான அரசியல் பரிசோதனைகள், பிரித்தானியரிடமிருந்து நாங்கள் சுதந்திரம் பெற்ற உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டு,அதன் கடுமை குறையாது இன்றுவரை கூட இருந்து வருகிறது.
ஒரு நோக்கத்துடனோ அல்லது வேறு காரணங்களினாலோ இந்த ஆபத்தான வைரசுக்கள் இன்று கிட்டத்தட்ட நமது முழு சமூகத்தையுமே மாசு படுத்தியுள்ளன. இது நமது அரசியல் முன்னோடிகளால் மரபுரீதியாக நம்மிடம் அனுப்பப்பட்ட ஒன்று, அதை இப்போது நாங்கள், எங்கள் எதிர்காலச் சந்ததிகளுக்கு அது கேடு விளைவிக்கும் என்பதையும் கருதாது கண்மூடித்தனமாக அவர்களிடமும் அனுப்பிக் அகாண்டிருக்கிறோம்.
இந்த ஆபத்தான பரிசோதனையின் விளைவாக, ஆய்வகப் பரிசோதனை எலிகளாக மாறியுள்ள எங்களில் பலர், தங்களது தேசியத் தன்மை, இனம், மற்றும் சமயம் பற்றிக் குழப்பம் அடைந்துள்ளார்கள். மதத் தீவிரவாதம், எனும் கொடிய வைரஸ் கிருமி எளிதில் ஏமாறக்கூடியவர்களிடம் தொற்றியிருப்பதால் எங்களது தேசிய அடையாளம் மேலும் பாதுகாப்பற்ற நிலைக்குச் சென்றிருக்கிறது.
சாதாரணமாக இன்று நாம் நேர்மையான ஸ்ரீலங்காவாசிகளாக இல்லை. இன்று நாங்கள் சிங்கள பௌத்தர்கள், சிங்கள கிறீஸ்தவர்கள், சிங்கள மற்றவர்கள், தமிழ் இந்துக்கள் ,தமிழ் மற்றவர்கள், தீவிர முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் மற்றவர்கள் என்றுதான் இருக்கிறோம். இதற்கு அடுத்தது என்ன?
உதாரணத்திற்கு ஸ்ரீலங்காவைவிட அதிகம் வித்தியாசமான பல்வேறு இனக் குழுக்கள் வாழும் சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால், அவர்கள் அந்த நாட்டை தங்கள் வீடாக எடுத்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் இனத்தை அல்லது மதத்தை காட்டியா தங்களை அடையாளப் படுத்துகிறார்கள்? இல்லை. அவர்கள் அனைவரும் தங்களை சிங்கப்பூர் வாசி என்றுதான் கூறுகிறார்கள். அவர்கள் நாட்டு அரசியல்வாதிகள் அந்த நாட்டில் ஒரு இனத்தைவிட மற்றதுக்கு அதிக சலுகைகள் வழங்குகிறார்களா? இல்லை. ஒரு மதத்தைவிட மற்ற மதத்துக்கு அதிக சலுகைகள் வழங்குகிறார்களா இல்லை.
அந்த நாட்டின் அடையாள சின்னமான பிரதமர் லீ குவான் யு ஒரு காலத்தில் சிங்கப்பூர் ஸ்ரீலங்காவை போலிருக்க வேண்டும் என விரும்பினார் என்பதை நினைத்துப் பாருங்கள். அது இப்போது நமது நாடு மாறியிருக்கும் நிலையை போன்றதல்ல,அது ஒரு காலம், அப்போது எமது நாடு மற்றவர்கள் பின்பற்றுவதற்கு ஒரு உதாரணமாக திகழ்ந்த காலம். கடவுளுக்கு நன்றி, அதன் பின்னர் அவர்கள் ஸ்ரீலங்காவை உதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்று அவர்கள் எங்கே இருக்கிறார்கள் மற்றும் நாங்கள் எங்கே இருக்கிறோம், என்பதை பாருங்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகப் போய்விட்டது,நமக்கு எல்லாமே தவறாகப் போய்விட்டது.
நாங்கள் பாடசாலை சென்ற ஒரு கடந்தகாலம் என் நினைவுக்கு வருகிறது, அப்போது இனக்குழு என்றால் என்ன என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. நாங்கள் அனைவருமே ஸ்ரீலங்கன்கள், ஒரே வகுப்பு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மலாயர்கள் மற்றும் ஏனையவர்கள் என்று. அது அப்படியே இருந்திருக்க கூடாதா என்று நான் விரும்பியது உண்டு, ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகளுக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் நாங்கள் எதையும் புரிந்து கொள்ள முடியாத சிறுவயதாக இருந்தபோது இனரீதியாக பாகுபடுத்துவது என்று அவர்கள் எடுத்த முடிவு. சிறுவர்களாக எங்களுக்கு தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான், இனத்தை அடிப்படையாக கொண்டு வௌ;வேறு வகுப்புகளாக பாகுபடுத்தி எங்களை பிரித்து விட்டார்கள். நீண்ட காலமாக ஒன்றாக பழகி வளாந்த எங்கள் நணபர்களை எங்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றது எங்களை உணர்வுபூர்வமாக நொறுக்கித் தள்ளியது.
நான் மற்றும் என்னைப்போன்ற மற்றும் பலரும் குழப்பத்தில் மூழ்கியிருந்தோம். காலனித்துவ காலத்துக்கு பின்னாலும் அதைத் தொடர்ந்து வந்த சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்திலும், இந்த நாட்டில் காலூன்றியிருந்தவர்களின் சந்ததிகள் ஆகிய நாங்கள் பிறந்தது முதல் கேட்டுப் பழகிய மொழி ஆங்கிலமே. எனவே எங்களது பொதுவான முதல்மொழி ஆங்கிலமாக இருந்தது.
அந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாங்கள் சிறுவர்களாக இருந்ததிலிருந்து இதுவரை எங்களிடம் இனத்தை பற்றிய உணர்வு இருந்து வருகிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவாகள் என்பதை உணர்ந்தோம். இனிமேலும் எங்களை வெறும் ஸ்ரீலங்காவாசிகள் என்று மட்டும் கருத நாங்கள் தயாராக இருக்கவில்லை. நாங்கள் சிங்களவர்கள், தமிழர்கள், அல்லது முஸ்லிம்கள் என்பனவற்றில் ஒன்றாக மாறிவிட்டோம். எங்கள் தலைவர்கள் எங்களை இனக்குழுக்களாக பாகுபடுத்தியதுடன் நின்றுவிடவில்லை, அதன்பின் ஒவ்வொரு இனத்தவரும் மற்றவர்களைப் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது மூலம் மற்றவர்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் விதத்தில் எங்களை மூளைச்சலவை செய்யத் தொடங்கினார்கள்.
இன்று, ஒருகாலத்தில் ஸ்ரீலங்கனாக என்னோடு சேர்ந்திருந்த எனது தலைமுறையை சேர்ந்தவர்களில் சிலர், ஒன்றில் தனிநாட்டை இலட்சியமாக கொண்டிருக்கிறார்கள், அல்லது ஒரு முகத்திரைக்குள் தம்மை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் அல்லது தம்ம போதனைகளுக்கு நிந்தை உண்டாக்கும் வகையில் அவச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே இன்று இங்கு, நான் ஒரு சிங்கள இனக்குழுவை சேர்ந்த ஸ்ரீலங்காவாசி, அரைப்பகுதி தெற்கத்தைய இனமும் மீதி அரைப்பகுதி கண்டிய இனத்தையும் சேர்ந்திருப்பதுடன், மத விசுவாசத்தால் பௌத்த மதத்தையும் சேர்ந்தவள், எனது முதல் மொழி ஆங்கிலமாக இருப்பதால் பறங்கியர் என்றோ, அல்லது ஒரு வட இந்தியர் என்றோ தவறாகவும் கருதப்படலாம். ஆகவே நடைமுறைப்படி,  கலப்பின பறங்கியர், வட இந்திய தோற்றத்துடன் ஆங்கிலம் பேசும் சிங்கள பௌத்த மதத்தை சேர்ந்தவள் என்றா நான் என்னை அடையாளப் படுத்துவது? நன்றி, அப்படி இல்லை. நான் என்னை ஒரு ஸ்ரீலங்காவாசி என்று அழைப்பதையே விரும்புகிறேன், ஏனெனில் அது எனது மனச்சாட்சிக்குள் இலகுவாக அமர்ந்து கொள்வதுடன் உச்சரிப்பதற்கு இலகுவானதாகவும் உள்ளது.
இன்று அடையாளக் குழப்பம் அடைந்துள்ள பலரை நான் அறிவேன்? அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களில் தங்கள் தேசியத் தன்மைக்குப் பதிலாக தங்கள் இனத்தை எழுதுகிறார்கள். அது அவர்களின் குழப்பம். இதில் நான் காண்பது என்னவென்றால் யாராவது மூளை அதிர்வினால் பாதிக்கப்பட்டு தனது சாதியையும்  அதில் குறிப்பிடுவதற்கு முன்னால், எங்களுக்கு  எங்கள் இனத்தையும் மதத்தையும் குறிப்பிட்டு ஒரு புதிய அடையாள அட்டை வழங்கப்படாவிட்டால், உண்மையில் நாங்கள் யார் என்பதை கண்டுகொள்ள உலகளாவிய ஒரு தேடல் நடத்தவேண்டிய தேவையில் அது சென்று முடியும். ஒருவரின் இன மற்றும் மத நம்பிக்கைகள் அவரது தனிப்பட்ட விடயமாக இருக்கவேண்டும் நான் நம்புவதை உங்களில் பலரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன். மதம், இனம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து டமோகிளசின் வாளைப்போல மற்றவர்களது தலைக்கு மேல் தொங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மற்றும் அனுமதிக்க கூடாது.
எங்கள் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த சுயநல இலாபங்களுக்காக தீவிரவாதத்தை அதன் ஆரம்ப நிலையிலேயே நசுக்குவதற்குப் பதிலாக அதனை, அதன் அசிங்கமான பல வடிவங்களில் பிரச்சாரப்படுத்தியிருப்பதுடன், இன்னமும் பிரச்சாரப்படுத்தி வருகிறார்கள். அதனால் ஏற்படப்போகும் மோசமான தோற்றத்தை அவர்கள் காணவில்லையா, மற்றும் அதன் பின் விளைவை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையா, அல்லது அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லையா? எங்கள் நாட்டின் தலைவர்கள் தாங்கள் ஏற்றுள்ள தலைமைத்துவத்தின் புனிதமான பொறுப்பை பற்றி எப்போதாவது நினைத்துப் பார்ப்பார்களா? அதிகாரத்தில அமரவேண்டும் என்கிற பேராசையினால் அவர்கள்  அப்படியான குருடர்களாகவும், மற்றும் அதற்காக என்ன விலை  கொடுத்தாவது கெடுதல்களை செய்யவும் தயாராக இருக்கிறார்களா? அவர்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா? அவர்கள் நாட்டுப் பற்றாளர்கள் இல்லையா?
அவர்களிடம் கேட்பதற்கு அதிகம் உள்ளது,தங்கள் சுயநல நோக்கங்களை இந்த கடைசிக் கட்டத்திலாவது ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, எங்கள் ஸ்ரீலங்காப் பிரஜைகள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் அவர்கள் ஒன்றுபடுத்த மாட்டார்களா?
(சர்மினி சேரசிங்க, முன்னாள் சமாதான ஒருங்கிணைப்பு செயலகத்தில் ஒரு பணிப்பாளராக,அதன் செயலாளர் நாயகங்களான ஜயந்த தனபால,மற்றும் கலாநிதி ஜோண் குணவர்தன ஆகியோரின் கீழு; பணியாற்றியுள்ளார். பத்திரிகை மற்றும் மின்னியல் ஊடகங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவம் அவருக்கு உண்டு)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Aucun commentaire:

Enregistrer un commentaire