mercredi 20 février 2013

வொசிங்டன் போஸ்ட்‘ நாளிதழ், சிறிலங்கா: செவிடன் காதில் ஊதிய சங்கு

ராஜபக்சவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை அமெரிக்காவும், மேற்குலக அரசாங்கங்களும், வெளிப்படையாகவும் திரும்பத் திரும்பவும் கண்டித்தபோதும், அந்த வார்த்தைகள் எல்லாமே செவிடன் காதில் கூறியதாகி விட்டது. 

இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வொசிங்டன் போஸ்ட்‘ நாளிதழ், ‘சிறிலங்காவின் வீணடிக்கப்பட்ட வாய்ப்புகள்‘ என்ற தலைப்பில் நேற்று எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் மொழியாக்கம்- 

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தீவின் சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த போராளிகளுடனான 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. 

அந்தப் போருக்கான செலவு கொடூரமானதாக இருந்தது. 

சிறிலங்கா அரசாங்கத்தின் இறுதித் தாக்குதலில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா விசாரணைகளில் கண்டறியப்பட்டது. 

ஆனால், அந்த வெற்றி ராஜபக்சவை பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு கதாநாயகனாக உயர்த்தியது. 

அதேவேளை, தனது நாட்டை, இனமுரண்பாடுகளைக் குணப்படுத்தி நவீனப்படுத்தும் வாய்ப்பையும் அவருக்கு கொடுத்தது. 

துரதிஸ்டவசமாக, சிறிலங்கா அதிபரும் அவரது குடும்பமும்,- இரண்டு சகோதரர்கள் அமைச்சரவை பதவி வகிக்கின்றனர் – நிச்சயமாக எதிர்முனையில் செல்கின்றனர். 

எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை பிளவுபடுத்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு, இரண்டு முறைப் பதவிக்காலம் என்ற சிறிலங்கா அதிபரின் வரையறையை மாற்றும் வகையில், அரசியலமைப்பைத் திருத்தி எழுதியது ஆளும்கட்சி.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள், சமூக அமைப்புகள், நீதித்துறையினர் அச்சுறுத்தப்படுவதுடன், சிலவேளைகளில் அரசாங்க ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டும் உள்ளனர். 

எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அரச பாதுகாப்புப் படைகளால் தொடர்ந்தும் தமிழ் செயற்பாட்டாளர்கள் சித்திரவதை, பாலியல் தாக்குதல் உள்ளிட்ட முறைகளிலும் துன்புறுத்தப்படுவதாகவும், மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. 

போரின் இறுதி மாதங்களில், இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்பட்ட மீறல்கள் குறித்து தீவிரமான விசாரணைகளை நடத்துமாறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால் கோரப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கம் அதை செய்யவில்லை. 

காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கவோ, காணாமற்போனவர்கள் குறித்து விசாரணை நடத்தவோ, எந்தப் பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை, எவரும் கைது செய்யப்படவோ நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை என்று கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை,தெரிவித்திருந்தார். 

இந்த ஆண்டு ராஜபக்ச தவறான திசையில் மேலும் இரண்டு பாரிய அடிகளை எடுத்து வைத்தார். 

கடந்தமாதம், அவர், நீதித்துறைச் சுதந்திரத்தை முடக்கும் வகையில், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரைப் பதவிநீக்கி விட்டு, அவரது இடத்துக்கு தனக்கு நெருக்கமான ஒருவரை நியமித்தார். 

அரசியலமைப்பு உத்தரவாதப்படுத்திய உள்ளூர் அரசாங்கங்களின் உரிமைகளைப் பறிக்கும், ராஜபக்சவின் சகோதரர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டத்துக்கு, உயர்நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே, சிறிலங்கா அதிபரின் பெரும்பான்மை பலம் வெளிப்படுத்தப்பட்டது. 

வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையினரான தமிழர்களின் நியாயமான விருப்பங்களை ஈடுசெய்யும் வகையில், உள்ளூர் சுயாட்சி ஒன்றை விரிவாக்குவதாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி கொடுத்திருந்தார். 

ஆனால், இந்தமாதம் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய அவர், அந்த உறுதிமொழியை மீறிவிட்டார். 

சிறிலங்கா அரசாங்கம் தற்போது, உள்ளூர் உரிமைகளை தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகளை நிராகரிப்பதான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது 

ராஜபக்சவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை அமெரிக்காவும், மேற்குலக அரசாங்கங்களும், வெளிப்படையாகவும் திரும்பத் திரும்பவும் கண்டித்தபோதும், அந்த வார்த்தைகள் எல்லாமே செவிடன் காதில் கூறியதாகி விட்டது. 

வரும் நவம்பரில் மதிப்புமிக்க கொமன்வெல்த் சமூகத்தின் மாநாட்டை, சிறிய நாடான சிறிலங்கா நடத்தவுள்ள நிலையில், நாடுகள் சில அதைப் புறக்கணிக்கலாம் என்கிறது மனிதஉரிமைகள் கண்காணிப்பகம். 

மாநாட்டை கொழும்பில் இருந்து அகற்றுவதென்று மிரட்டுவதன் மூலமோ அல்லது மாநாட்டைப் புறக்கணிப்பதான அறிவிப்பின் மூலமோ, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள், அவரது கொள்கைகளை ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தெளிவான ஒரு செய்தியை ராஜபக்சவுக்கு அனுப்ப முடியும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire