samedi 23 février 2013

பாலச்சந்திரனை படுகொலைசெய்த நபர், மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவே

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலைசெய்த நபர், மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவே என சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மே 19ம் திகதி காலை 7.30 மணியளவில் 53ம் படைப் பிரிவில் வந்து சரணடைந்துள்ளார் பாலச்சந்திரன். இது இவ்வாறு இருக்கையில், 18ம் திகதி இரவு(முதல் நாள்) 2 படகுகள் நந்திக்கடலூடாக புறப்பட்டதாகவும், இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பவே இப் படகில், சிலர் பயணித்ததாக பாலச்சந்திரன் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிடம் தெரிவித்ததாக அவ்விணையம் மேலும் தெரிவித்துள்ளது. ஒரு படகில் தனது அம்மா மதிவதனி, புறப்பட்டுச் சென்றதாகவும், இருப்பினும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

இக் கூற்றில் உண்மை இருக்கலாம். ஏன் எனில் கேணல் ரமேஷ் அவர்கள் 18ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்தபோது அவரை முதலில் விசாரித்த இராணுவத்தினர், பிரபாகரன்   மகன் மற்றும் மனைவி எங்கே என்று தான் கேட்கிறார்கள். மற்றும் இதற்கு அடுத்த நாள் தான் பாலச்சந்திரன் இராணுவத்திடம் சரணடைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
இது இவ்வாறு இருக்க போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, போர் வலயத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அடியோடு நிராகரித்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் சிறிலங்காவுக்கான தலைமைப் பிரதிநிதி வைவ்ஸ் ஜுவன்னோனி இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

2009 மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாப்பாக வெளியேற்ற அனைத்துலக செஞ்சிலுவைக் குழு முயன்றதான குற்றஞ்சாட்டுவது மிகவும் தவறானது. இதுபோன்ற பணிகளை நாம் செய்வதில்லை. நாம் சிறிலங்காவில் மட்டும் பணியாற்றவில்லை. உலகெங்கும் 80 நாடுகளில் பணியாற்றுகிறோம். இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டால், அது மனிதாபிமானப் பணிகளின் மீது நாம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும், அரசியல் நடுநிலைத் தன்மையையும் ஆழமாகப் பாதிக்கும்.

எமது பதிவுகளின் அடிப்படையில், இந்த விடயத்தில் நாம் தொடர்புபடவில்லை என்பதை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவர் என்ற வகையில் கூறுகிறேன். சிறிலங்காவில் போரின்போது பணியாற்றுவது மிகவும் சவாலான விடயமாக இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். சமீபத்தில் இலங்கையில் உள்ள அமைச்சர் ஒருவர், பிரபாகரனை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கையில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம், முற்பட்டது என்ற பொருள்பட கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்

Aucun commentaire:

Enregistrer un commentaire