jeudi 7 février 2013

பயங்கரவாதி யார்? பயங்கரவாத அமைப்பு எவை? என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில்



கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுமுகத் தீர்வு. பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி வழங்குவதை தடுக்கும் திருத்தச் சட்டமூலம் கொண்டு வருவதற்கு முன் பயங்கரவாதி யார்? பயங்கரவாத அமைப்பு எவை? என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது.இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார். ஆயினும் ஒரு மணி நேரத்தின் பின்பே சபை மீண்டும் கூடியது. கட்சித் தலைவர்களின் கூட்டம் நடை பெற்று மீண்டும் சபை நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்தின் பின்னரே ஆரம்பமானது.
3.00 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் 4.00 மணிக்கு சபை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு நாளையே திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார்.
பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க பயங்கரவாதி யார்? பயங்கரவாத அமைப்புகள் எவை? என்பது பற்றி வரைவிலக்கணம் குறிப்பிடப்படாமல் சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது என்று ஒழுங்குப் பிரச்சினை கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜே.வி.பி. எம்.பி. அஜித் குமாரவும் இதே கேள்வியை முன்வைத்தார். இந்த திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றினால் அரசு பயங்கரவாதி என்று தீர்மானிக்கும் எல்லோருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம். எனவே சரியான வரைவிலக்கணம் குறிப்பிடப்பட வேண்டும் என்றார்.இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவரும் சரியான வரைவிலக்கணம் தெரிவிக்கப்படாமல் விவாதம் செய்ய முடியாது என்றார். இதன் போது ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பேசும் போது ஒரு மிக முக்கியமான திருத்தச் சட்ட மூலம் ஒன்றை நாம் சபையில் முன்வைக்கிறோம்.
இது தொடர்பாக இவ்வாறான பிரச்சினை இருக்கிறது என்றார். நாம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு செய்வோம் எனவும் 10 நிமிட நேரம் பாராளுமன்றத்தை ஒத்திவைப்போம் என்றும் கேட்டுக் கொண்டார். இதன்படி பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். எனினும் பாராளுமன்றம் மீண்டும் ஒரு மணி நேரத்தின் பின்னரே பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது.
திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக அடுத்த பேச்சாளர் விவாதத்தில் கலந்து கொள்ளலாம் என பிரதி சபாநாயகர் அறிவித்தபோது அஜித் குமார எம்.பி. பாராளுமன்றம் ஒத்திவைத்த பின்னர் இந்த திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக எடுத்த முடிவு என்ன என்பதை சபைக்கு அறிவிக்க வேண்டும். இல்லையேல் விவாதத்தை முன்னெடுப்பதில் பலனில்லை என்றார்.
இன்று (நேற்று 6ம் திகதி) விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும் நாளை (இன்று 7ம் திகதி) ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராய்வது என்றும் நாளை மறுதினம் (நாளை 8ம் திகதி) திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவது என்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இன்று (நேற்று) விவாதத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றார்.இதன்படி நேற்று விவாதம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire