samedi 9 février 2013

மஹிந்த ராஜபக்ஷ இந்தியா விஜயம்; தமிழகம், டில்லியில் ஆர்ப்பாட்டம்; பிரதமர் வீடு முற்றுகை; ஆயிரக்கணக்கானோர் கைது


 புத்தகயாவுக்குச் சென்ற ஜனாதிபதி, புத்தகயா விகாரையில் எழுந்தருளியுள்ள புத்த பகவானின் புத்தகயா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் வரவேற்றார். அங்கிருந்து அவர்கள் புத்தகயாவுக்கு சகல மரியாதைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.புத்தகயா விகாரையில் திருவுருவச் சிலைக்கு முன்பாக மலர்தூவி மற்றும் திருவிளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். அநுராதபுரம் மஹாபோதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டு புத்தகயாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெள்ளரசு விரூட்சத்தை சூழ போடப்பட்ட தங்க வேலியையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். அங்குள்ள அநகாரிக தர்மபாலவின் திருவுருவச் சிலைக்கும் ஜனாதிபதி மலர் வணக்கம் செலுத்தினார். மஹாபோதி சங்கத்தின் அருகில் கட்டப்படவுள்ள தர்மசாலை, கலாசார மத்திய நிலையம் என்பவற்றுக்கும் ஜனாதிபதி அடிக்கல் நாட்டிவைத்தார். ஏனைய மத குருமாருடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுடில்லி ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 
அத்துடன், டில்லியிலுள்ள இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான 500க்கும் மேற்பட்ட அக்கட்சி ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 
மேலும், பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் சென்றுகொண்டிருந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அக்கட்சியின் ஆதரவாளர்கள் 100பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதேவேளை, திருப்பதி செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கறுப்புக்கொடி காண்பிக்கப் புறப்பட்ட ம.தி.மு.க. ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 
அதன் பின்னர் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்நிலையில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறிவிட்டார் மற்றும் அம்மக்கள் மீதான அழுத்தங்களுக்கு ஜனாதிபதியே காரணமாகவுள்ளர் என்று வலியுறுத்தி தமிழக கட்சியினர் ஜனாதியின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
தி.மு.க.வினர் கறுப்பு உடை ஆர்ப்பாட்டம் 
அந்தவகையில், ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமாக மு.கருணாநிதி தலைமையில் கறுப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 
இதில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர் என்று அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
புதுடில்லியில் பிரதமர் வீடு முற்றுகை 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் அனுமதித்த பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 500க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினர் புதுடில்லி, ஜந்தர் மந்தர் அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கலவரங்கள் ஏற்படாதிருக்கும் வகையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 
சென்னையில் சட்டசபை வாயிலில் போராட்டம் 
சென்னையில் இன்று காலை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் அவை வாயிலில் நின்றபடி ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 
ஓசூரில் ரயில் மறியல் 
ஜனாதிபதியின் விஜயத்தைக் கண்டித்து ஓசூரில் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் சென்ற ரயிலை அவர்கள் மறிக்க முயன்றபோது பொலிஸார் அவர்களைத் தடுத்துள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டோர் பொலிஸாரைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
திருப்பதியில் ம.தி.மு.க.வினர் கைது 
ஜனாதிபதிக்கு கறுப்புக் கொடி காண்பிப்பதற்காக ம.தி.மு.க.வினர் திருப்பதிக்கு ரயில் மற்றும் சாலை வழியாக சென்றனர். ரயிலில் சென்ற ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். வீதியால் சென்றவர்கள் எல்லைப் பகுதியிலே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உருவ பொம்மை எரிப்பு 
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 10பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் 144 தடை உத்தரவு 
மேலும் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டாக்கிலிருந்து திருப்பதி சென்றடைகிறார். அங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ளன. 
இதனால் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருமலை செல்லும் வழியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. 

Aucun commentaire:

Enregistrer un commentaire