lundi 18 février 2013

குஷ்புவுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் ராமதாஸ்!


குஷ்புவுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் ராமதாஸ்!

நடிகை குஷ்புவின் நிலைப்பாடுகளும், பேச்சுகளும் பல நேரங்களில் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானவையாகவும், கண்டிக்கத்தக்கவையாகவும் இருந்துள்ளன. ஆனால் அவரது தனியுரிமையும், குடும்ப உறவும் மதிக்கப்பட வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... 

வாரமிருமுறை புலனாய்வு இதழ் ஒன்றில் ‘இன்னொரு மணியம்மை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் கட்டுரையில் பத்திரிக்கை தர்மம் இல்லை. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கலைஞரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். 

ஆனால், அவரது வயது அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதேபோல் நடிகை குஷ்புவின் நிலைப்பாடுகளும், பேச்சுகளும் பல நேரங்களில் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானவையாகவும், கண்டிக்கத்தக்கவையாகவும் இருந்துள்ளன. 

ஆனால் அவரது தனியுரிமையும், குடும்ப உறவும் மதிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் மதிக்காமல், மனம் போன போக்கில் ஒரு தலைவரையும் அவரது இயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணையும் கொச்சைப்படுத்தி எழுதுவது என்பது அனைத்து தரப்பினராலும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

அதுமட்டுமின்றி, தந்தைப் பெரியாருக்கும், அவர் உடல் நலிவுற்றிருந்த காலத்தில் அவருக்கு அருந்தொண்டாற்றிய அன்னை மணியம்மையாருக்கும் இடையிலான உறவை கொச்சைப்படுத்த முயன்றிருப்பதும் மோசமான சிந்தனையாகும். 

இதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எத்தகைய பாதிப்புகளையும், வேதனைகளையும் ஏற்படுத்தும் என்பதை ஊடகங்கள் சிந்திக்க வேண்டும். 

பொது வாழ்வுக்கு வந்துவிட்டவர்கள் என்பதாலேயே ஒருவரைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றால், அது நல்லவர்கள் பொது வாழ்வுக்கு வருவதை தடுக்குமே தவிர, நாட்டிற்கு நன்மை எதுவும் கிடைக்காது. 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire