jeudi 1 août 2013

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தலிபான் தாக்குதல்: 300 கைதிகள் விடுவிப்பு

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலையில் 5000 கைதிகள் உள்ளனர். இவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள் ஆவர். நேற்று மாலை காவல்துறை சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சிறையின் மீது வெடிகுண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர். இவர்களுள் தற்கொலைப் படையினரும் கலந்திருந்தனர். இந்தத் தாக்குதலினால் சிறையின் வெளிப்புறச் சுவர் இடிந்து விழுந்தது. உள்ளே பணியில் இருந்த சிறைத்துறைக் காவலர்களுக்கும், போராளிகளுக்கும் நீண்ட நேரம் துப்பாக்கித் தாக்குதல் நடந்தது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, பாகிஸ்தானிய ராணுவத்தை உதவிக்கு அழைத்துள்ளது.
ஆயினும், தலிபான்கள் 300க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துள்ளனர் என்று சிறைத்துறையின் ஆலோசகர் மாலிக் காசிம் கட்டாக் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளனர் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கு மின்சாரம் அளிக்கும் இரண்டு டிரான்ஸ்பார்மர்களையும் போராளிகள் வெடி வைத்துத் தகர்த்ததால் இடமே இருளடைந்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும், அங்கிருந்த வாகனங்கள் அனைத்தையும் குண்டுகள் மூலம் தகர்த்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு டெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. கைதிகளை விடுவிக்க தாங்கள் தற்கொலைப் படையினர் உட்பட, 150 போராளிகளை அனுப்பியதாகவும், அவர்கள் வெற்றிகரமாக 300 கைதிகளை விடுவித்துள்ளதாகவும் தலிபான் அமைப்பின் புதிய தகவல் அதிகாரியான ஷாஹிதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire